மனிதனது பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் அவனது வாழ்க்கையில் இன்றியமையாத, அவனது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்ற ஒரு கருத்தியல் சார்ந்த அம்சமும் அதேநேரத்தில் பிரயோக ரீதியான ஒரு விடயமும்தான் இந்த ஆதரவு என்ற சொல்லாடலாகும்.
இந்தக் கட்டுரையானது ஆதரவு என்ற அம்சத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான நெருக்கத்தையும், ஆதரவின் தன்மைகள் மற்றும் அதன் வடிவங்கள் தொடர்பாகவும், ஆதரவினால் ஏற்படும் நேரான விளைவுகளையும் ஆதரவின்மைகளால் விளையும் எதிர்மறையான விளைவுகளையும், சமூகம் அக்கரை செலுத்தவேண்டியதும் ஆதரவு வழங்கவேண்டியதுமான பகுதியினரையும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உள சமூக ஆதரவான நடவடிக்கைகளையும் அதன் முழுமையான அணுகுமுறையின் அவசியத்தையும் விபரிக்க முனைகின்றது.
இந்த ஆதரவு என்ற விடயமானது மனிதனது வாழ்க்கையில் மாத்திரமன்றி, இந்த உலகத்திலுள்ள இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து தாவரம், விலங்கு மற்றும் ஏனைய உயிரினங்கள் மற்றும் பௌதீக காரணிகள் போன்ற அனைத்திலும் பிணைந்து காணப்படும் ஒரு விடயமாகும்.
ஒரு தாவரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய வளர்ச்சிக்கும் அதனளவில் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவிற்கும் கால்கோலாக அமைவது அதற்காக முறையாக வழங்கப்படுகின்ற நீர், வளமான மண், பௌதீகக் காரணிகள் மற்றும் ஏனைய பராமரிப்பு சார் அம்சங்கள் அடங்கிய ஆதரவாகும். இந்த ஆதரவுக் காரணிகள் ஒழுங்கான முறையில் வழங்கப்படவில்லையாயின் அந்த தாவரம் வளர்ச்சி குன்றியதாக, நோய்வாய்ப்பட்டதாக, அதனளவில் எதிர்பார்க்கப்படுகின்ற விளைச்சலை அல்லது பெறுபேற்றை தராததாக இறுதியில் அது இறந்து மண்ணோடு மண்ணாக மாறும் நிலையைக் காணமுடியும்.
இதேபோன்றுதான், ஒரு தாய் தான் கருவுற்ற நாளிலிருந்து அதனை ஏற்றுக்கொண்டு, அதற்காக தான் முறையாகக் கடைப்பிடிக்கின்ற ஊண், உறக்கம், உடல்பயிற்சிகள் மற்றும் அவள் தாங்கிக் கொள்கின்ற அசௌகரீகங்கள், அதேபோன்று அவளது உடல், உள, ஆன்மீகக் காரணிகள் அனைத்தும் அக்கருவை ஒரு முழுமையான ஆரோக்கியமான நிலைக்கு மாற்றி சிறந்த குழந்தையாக இவ்வுலகில் தரிப்பதற்கு வழிசமைக்கின்ற ஆதரவுக் காரணிகளாக காணப்படுகின்றது. இவ்வாறான ஆதரவை அவள் அக்குழந்தையளவில் காட்டவில்லையாயின் அக்குழந்தையானது ஒன்றில் கருவில் அழிக்கப்படலாம் அல்லது தானாகவே சிதைவடையலாம் அல்லது எதிர்பார்ப்பிற்கு மாற்றமான நிலையைக் கொண்டதாக அது பிறக்கலாம்.
அடுத்து ஒரு குழந்தை பிறந்த பின்னர் அக்குழந்தையின் வளர்ச்சியும் விருத்தியும் அதன் தாயும் தகப்பனும் மற்றும் ஏனைய உறவினர்களும் அதில் காட்டுகின்ற சிரத்தையிலும் அதற்கு வழங்குகின்ற ஆதரவிலுமே தங்கியுள்ளது என்பதில் ஐய்யமில்லை.
அதேபோன்று, ஒரு குழந்தையின் சமூகமயமாக்கல் செயன்முறையில் கூட ஆதிக்கம் செலுத்துகின்ற குடும்பம், சகபாடிகள், பாடசாலை, சமூகம் போன்ற சமூக நிறுவனங்களின் பங்களிப்புக் கூட ஆதரவின் பாற்றட்டதாகும். இதன்விளைவுகளிலொன்றாக பிள்ளையின் ஆளுமையும் அதன் ஆளுமை விருத்தியின்மையும் நிர்ணயிக்கப்படுகின்றது என்றால் இது மிகையாகாது.
ஒரு பிள்ளையின் ஆளுமை விருத்திக்கான சீரான சமூகமயமாக்கல் செயன்முறையும் வழிகாட்டல்களும் போதியளவாக அதன் குடும்பத்தாலும் சகபாடிகள் மற்றும் சமூகத்தாலும் வளர்க்கப்படுவதற்கான முயற்சிகளும் அதற்கான ஆதரவும் வழங்கப்படுமாயின், அப்பிள்ளை எதிர்காத்தில் சாதிக்க்கக் கூடியதாக, சவால்களை எதிர்கொண்டு வாழக்கூடியதாகஇ இலக்கு நோக்கி தனது விவகாரங்களை நகர்த்தக்கூடியதாக, சமூகத்தின் ஒரு வளமாக மாறுகின்றது என்பது நிதர்சனமாகும்.
மாறாக, ஒரு பிள்ளையின் முழுமையான சமூகமயமாக்கல் செயன்முறையானது போதிய ஆதரவின்மையால் சிக்கலானதாக அமைந்து, அதன் விளைவாக ஆளுமைப் பிறழ்வு இடம்பெறுமாயின், இப்பிள்ளை சமூகத்தில் வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் சமூக எதிர்ச் செயல்களில் மும்மூரமாக ஈடுபடும். அதாவது, ஒரு பிள்ளையின் பருவ மாற்றங்களுக்கேற்ப, அப்பிள்ளைக்குரிய உடல், உள, ஆன்மீகத் தேவைகளை கருத்திற்கொண்டு, அவற்றை ஈடுசெய்யக்கூடிய வகையில், குடும்ப சமூக ஆதரவுகள் முறையாக வழங்கப்படாத பட்சத்தில் அல்லது விலக்கிக் கொள்ளப்படுமாயின் அப்பிள்ளையானது உளப்பிறழ்வு நிலைக்கு ஆளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றது.
இவ்வாறான பிள்ளைகள் காலப்போக்கில் களவு, கொள்ளை, கொலை, மது, மாது போன்ற பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுபவர்களாக மாறி, தங்களது வாழ்க்கைப்பயணத்திற்கான இலக்குகளின்றி தடுமாறிக்கொண்டு மறியல்சாலைகளிலும் தடுப்புக்காவல்களிலும் புனர்வாழ்வு நிலையங்களிலும் தங்களது வாழவேண்டிய காலத்தை சீரழிக்கின்ற நிலைமையைக் காணமுடிகின்றது.
மேலும், ஒரு மனிதனுடைய முன்னேற்றமானது அவனது குடும்பம் மற்றும் சமூகம் அவனுக்கு வழங்குகின்ற ஆதரவிலேயே தங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு ஏழை பணக்காரனாக மாறுவதும், ஒரு விளையாட்டு வீரன் தனது இலக்கையடைந்து வெற்றிக் கேடயத்தை சுவீகரிப்பதும் ஒரு குடிமகன் நாட்டின் ஆட்சியாளனாக மாறுவதும் அவனது குடும்பம் மற்றும் சமூகம் அவனுக்கு அல்லது அவளுக்கு வழங்குகின்ற முழுமையான ஆதரவிலேயே தங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.
ஆதரவானது பலவடிவங்களில் ஒரு மனிதனுக்கு அல்லது குடும்பத்திற்கு அல்லது நிறுவனத்திற்கு அல்லது நாட்டிற்கு இன்று வழங்கப்படுவதனை நாம் அவதானிக்க முடியும். இவ்வாதரவானது பொருளாதார, அறிவியல், ஊக்குவிப்பு, அனர்த்தம் ஃபிரச்சினையின் போது உதவுதல் போன்ற வடிவங்களில் வழங்கப்படுவதன் மூலமாக, அவை ஒரு முன்னேற்றத்தை நோக்கி நகர்வதனை அவதானிக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, ஒரு மாணவர் தனது கற்றலில் முன்னேறுவதும் பின்னடைவதும் அவருக்கு கிடைக்கின்ற ஆதரவிலேயே தங்கியிருக்கின்றது. அதாவது அவரது கல்லுhரி வாழ்க்கையின் போது அம்மாணவருடன் தொடர்புபடுகின்ற குடும்ப உறுப்பினர்கள், சகமாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் போன்ற தரப்பாரிடமிருந்து கிடைக்கின்ற பூரணமான ஆதரவே அம்மாணவனை முன்னேற்றப்பாதையில் நகர்த்தும். இவ்வாதரவானது அம்மாணவனின் திறமைகளைத் தட்டிக்கொடுத்தல், பாராட்டுதல், பரிசளித்தல், ஊக்குவித்தல், முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் போன்ற வடிவங்களில் கொடுக்கப்படுவதைக் காணமுடிகின்றது.
மாறாக, இத்தரப்பாரினால், ஒரு மாணவருக்கு அனாதரவான நிலைமைகள் உருவாக்கப்பட்டால், அம்மாணவன் தனது கற்றல் நடவடிக்கையில் பின்னடைவான நிலையையே எதிர்கொள்ள நேரிடும். மாணவரை நச்சரித்தல், கடுமையாகத்தண்டித்தல், பாரபட்சம் காட்டுதல், இழிவாகப்பார்த்தல், கணக்கெடுக்காமல் விடல், முயற்சியை தட்டிப்பணித்தல் போன்ற வடிவங்களில் இடம்பெறுவதைக் காணமுடியும்.
அடுத்ததாக, இன்று நமது சமூகத்தில் இயற்கையான அனர்த்தங்களால், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அனாதைகள், விதவைகள், தபுதாரர்கள், ஊனமுற்றவர்கள், முதியோர்கள், வன்முறைக்குட்பட்டவர்கள், சமூகத்தில் நழிவுற்றவர்கள், வறியவர்கள் போன்ற பல்வேறு வகையான படித்தரங்களில் உள்ளவர்களைக் காணமுடிகின்றது.
இவ்வாறானவர்களை சமூகம் முழுமையாக ஏற்று அங்கீகரித்து அவர்களது வாழ்கையை மீலெழுச்சி பெறச்செய்வதானது அவர்களுக்கு சமூகமும் அரசாங்கமும் அரசசர்பற்ற நிறுவனங்களும் காட்டுகின்ற ஆதரவிலேயே தங்கியுள்ளது. இன்று நமது நாட்டில் கூட இதற்காக பல்வேறு அரச மற்றும் அரசசாரா அமைப்புக்கள் பல்வேறு வகையான திட்டங்களை வகுத்துக்கொண்டு களத்தில் செயற்படுவதனை நாம் அவதானிக்கமுடிகின்றது.
இருந்தாலும், அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தீர்ந்ததாக காணமுடியவில்லை. ஏனெனில், அவர்களது உண்மையான எதிர்பார்ப்பும் தேவைகளும் பிரச்சினைகளும் பகுப்பாய்வு செய்யப்படுவதிலும், அதற்கான காத்திரமான திட்டங்களை வகுப்பதிலும், அதனை அமுல்படுத்துவதிலும், அதனை கண்காணித்து மீளாய்வு செய்வதிலும், அவர்களது பங்கேற்புடன் கூடிய முழுமையான அணுகுமுறை கவனத்திற் கொள்ளப்படுதல் அரிதாகக் காணப்படுகின்றது.
அத்தோடு, அவர்களது உடல், உளம் மற்றும் ஆன்மீகம் என்பனவற்றில் அவர்கள் நிறைவு காண்பதற்கான உதவிக்கான ஆதரவும் அவர்களது பொருளாதாரம், மற்றும் பௌதீக அடிப்படைத் தேவைகள் என்பனவற்றை பூர்த்தி செய்யும் விதத்திலான உதவிக்கான ஆதரவும் முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட (ஐவெநபசயவநன யுppசழயஉh) விதத்திலான அணுகுமுறைகளும் உரிய தரப்பினர்களால் பின்பற்றப்படுதல் போதியதாக அமையவில்லை.
இருந்தாலும், இன்று பல்வேறு அரச, அரசசாரா நிறுவனங்களால் பல்வேறு இலக்குக் குழுக்களை மைய்யப்படுத்தி அமுல்படுத்தப்படுகின்ற உளவளத்துணைச் சேவைகள், வாழ்வாதாரத் திட்டங்கள், அனர்த்த நிவாரணங்கள், உட்கட்டுமாண நடவடிக்கைகள், திறன் விருத்திசார் பயிற்சிகள், மானியக் கொடுப்பனவு உதவிகள் போன்ற சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் ஆதரவு என்ற விடயப்பரப்பினுள் உள்ளடங்குபவைகளாகும்.
எனவே, இவ்வாதரவு என்ற அம்சமானது மனித வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வழிமுறைகளின் மூலமாக காத்திரமான பங்களிப்பை செலுத்துகின்ற ஒரு பரந்த கண்ணோட்டத்தைக் கொண்ட அம்சமாகத் திகழ்கின்றது. அத்தோடு, இன்று முன்னெடுக்கப்படுகின்ற உளசமூக செயன்முறைகளில் ஆளமான கருத்தோட்டத்தையும் ஆதிக்கத்தையும் விரிந்த விடயப்பரப்பினையும் கொண்டதாக திகழ்கின்றது எனலாம்.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...
0 Comments