முதலில் எல்லாம் வல்ல இறைவனைப் புகழ்ந்தவனாக ‘உளவிழி’ என்ற பெயரில் ஒரு இணையத்தளத்தை (Website) ஆரம்பிப்பதில் பேருவகை அடைகின்றேன். உளவிழி எனும் பெயரை நான் இந்த இணையத்தளத்திற்கு சூட்டுவதற்கு எனக்குள் தோன்றிய ஒரு காரணம் வருமாறு. உளவிழி எனும் சொல்லை தமிழில் பிரித்து எழுதினால் (உளம் + விழி) என வரும். ‘உளம்’ என்பது மனிதனுக்கு மனிதன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்ற மிகப் பெறுமதியான விடயமாகும்.
உளம் பற்றி பேசுகின்ற துறையாக இன்று உளவியல் காணப்படுகின்றது. உளவியலாளர்கள் உளவியல் பற்றி வரைவிலக்கணப்படுத்துகையில், மனித நடத்தையை ஆராய்ந்தறிவதுடன், உள்ளம் அல்லது மனதின் செயற்பாடுகளை விளக்கும் ஒரு விஞ்ஞானமாகும் என்றும் வரையறை செய்துள்ளனர்.
‘விழி’ என்பது கண், கண் விழித்தல் (open the eyes, awake from sleep) என்ற அகராதிப் பொருளைக் கொண்டிருப்பதனால், அந்த சொல்லையே உளசமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிக்கோளைக் கொண்டதாகவுள்ள இந்த இணையத்தளத்தில் வெளிவரவுள்ள ஆக்கங்கள் கொண்டுள்ளதனால், அதற்கு ‘உளவிழி (ULAVILI)’ எனச் சூட்டுவதே மிகப்பொருத்தமானதாகும்.
இந்தப் பெயரில் ஒரு காலாண்டு எழுத்துரு சஞ்சிகையை ஆரம்பிப்பது தொடர்பாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நான் கடமையாற்றிய 2013 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதிகளில் ஒரு யோசனை எனக்குள் தோன்றியது. அதற்கான முயற்சியும் என்னால் முன்னெடுக்கப்பட்டது. இந்த முயற்சியில் என்னை உந்தித்தள்ளிய நான்கு பின்னணிக் காரணங்கள் காணப்படுகின்றன.
முதலாவதாக, எனது உளவளத்துணைப் பிரிவினால் வருடாந்தம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் தேசிய உளவளத்துணை தின நிகழ்வில் வெளியிடப்படும் ‘உபதேஷணா’ என்ற உளவளத்துணை சஞ்சிகையாகும். இதற்காக எமது உளவளத்துணைப் பிரிவானது உளவளத்துணை உத்தியோகத்தர்களிடமிருந்து உளவியல் சார்ந்த ஆக்கங்களைக் கோரும். அதற்காக நானும் ஆக்கங்ககளை எழுதுவது வழக்கமாகும். அந்த சஞ்சிகையானது சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலான ஆக்கங்களைத் தாங்கியே வெளிவரும். அதில் தமிழ் மொழியிலான ஆக்கங்களை எழுதுபவர்கள் குறைவாகவே காணப்படுவர்.
இரண்டாவதாக, யாழ்ப்பாணத்திலிருந்து காலாண்டு உளவியல் சஞ்சிகையாக வெளிவரும் ‘நான் உளவியல் சஞ்சிகை’ எனும் சஞ்சிகையுடன் எனக்கேற்ப்பட்ட அறிமுகமாகும். இந்த சஞ்சிகையின் அறிமுகமானது எனது பல்கலைக்கழக பிரவேசத்திலிருந்தே எனக்கு ஏற்ப்பட்டது. அதனை வாசிப்பது எனக்கு மிகவும் விருப்பமானதொரு பழக்கமாக அமைந்திருந்தது. பின்னர் இந்த சஞ்சிகைக்கு ஆக்கங்களையும் எழுதி வந்தேன். அவர்கள் எனது ஆக்கங்களை அந்த சஞ்சிகையில் பிரசுரித்து ஊக்கமும் வாய்ப்புமளித்தனர். இவ்வாறான ஒரு சஞ்சிகை முயற்சியை நானும் தனியாக தோங்கலாம்தானே என்ற எண்ணப்பாடு இந்த இடத்திலேயே எனக்குள் தோன்றியது.
மேலும் எனது ஆக்கங்கள் ‘உபதேஷணா’, ‘நான் உளவியல் சஞ்சிகை’ , ‘எங்கள் தேசம் பத்திரிகை’ மற்றும் சில வலைத்தளங்களிலெல்லாம் வெளியிடப்பட்டன. அவைகள் யாவற்றையும் ஒன்று சேர்த்து அல்லது சிலவற்றையாவது சேர்த்து ஒரு புத்தகத்தை வெளியிடலாம் என்ற ஆசையும் எனக்குள்ளிருந்தது. அதற்கான முயற்சிகளையும் மேற்க்கொண்டிருந்தேன். ஆனாலும் அவை நிராசையாகிப் போனது.
மூன்றாவதாக, எனது பணியில் கிடைக்கப் பெற்ற அனுபவம். உளவியல் பற்றியும் உளவளத்துணைச் சேவை பற்றியும் பொதுவாக இலங்கையிலுள்ள மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் போதியளவான வழிப்புணர்வு இல்லாத படியினால், உளவளத்துணை மற்றும் உளமருத்துவ சேவையில் பணியாற்றுகின்ற நிபுணத்துவ சேவை வழங்குனர்கள் பல்வேறுவிதமான சவால்களை நாளாந்தம் சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த உளவளத்துணை சேவைகள், உளமருத்துவம், பற்றி படித்தவர்கள் மத்தியிலேயே தவறான புரிதல்கள் காணப்படுகின்றன. சமூகத்தில் மத்தியில் காணப்படும் சமூக இழிவுநிலையை (ளுழஉயைட ளுவபைஅய) குறைப்பதன் மூலமாக அல்லது இல்லாமல் செய்வதன் மூலமாக, மக்கள் உளநலம் சார்ந்த சேவையை இலகுவாகப் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதற்கான முதல் வேலையாக எம்மைப் போன்றவர்கள் சமூகத்தை அறிவூட்டுகின்ற, தெளிவூட்டுகின்ற வேலையை மேற்க்கொள்வது அவசியமானது. அதுவும் உங்களது கடமை சார்ந்த பணியாகும் என்ற எங்களது உளவளத்துணைப் பணிப்பாளரினாலும் அமைச்சின் செயலாளரினாலும் வழங்கப்பட்ட கடமைப்பட்டியலை மைய்யமாகக் கொண்டு, நான் எடுத்துக்கொண்ட தீர்மானங்களில் ஒன்றாகவே இவ்வாறான ஆக்க முயற்சியை நான் தொடங்க இருந்தேன். அந்தவகையில் உளவிழி எனும் பெயரில் எழுத்துருவிலான சஞ்சிகை ஒன்றினை வெளியிட உத்தேசித்தேன்.
இதற்கான களம் வாய்ப்பாக அமைந்திருந்தது. சக உளவளத்துணையாளர்கள் மத்தியில் இந்த முயற்சி பற்றிய புரிதலை ஏற்படுத்தியபோது, இதற்காக உதவி செய்வதற்கு குறித்த சில சக உத்தியோகத்தர்களே முன்வந்தனர். அதற்கான ஊக்கத்தையும் வழங்கி, ஆக்கங்களையும் வழங்கினார்கள்.
இந்தப் பணிக்கான ஊக்கத்தை வழங்கியவர்களில் அமைச்சு மட்டத்தில், எங்களுடைய முன்னாள் உளவளத்துணைப் பணிப்பாளர்களான திருமதி எம்.கே.கே.றஸீகா அபேதீர, யு.வி.சரத் ரூபசிறி, திரு. பி.எல்.பத்மகுமார, தற்போதைய பணிப்பாளர் கே.ஜி.ஆர்.பிரியதர்ஸனி மற்றும் தேசிய இணைப்பாளர் எம்.எப்.எம்.றிபாத் அவர்களும், அத்தோடு, மாவட்ட மட்டத்தில் எனது முன்னாள் மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் திரு ஏ.ஏ.தீன் முகம்மத் அவர்களும், முன்னாள் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராகவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் இருந்தவரும் இன்னாள் நிந்தவூர் பிரதேச செயலாளராகவிருக்கின்ற ஏ.எம்.அப்துல் லத்தீப் அவர்களும், முன்னாள் அக்கரைப்பற்று இன்னாள் இறக்காமம் பிரதேச செயலாளரான எம்.எஸ்.எம் றஸ்ஸான் அவர்களும், தற்போதைய எனது கடமைக்கான அலுவலகமாகவிருக்கின்ற திருக்கோவில் பிரதேச செலகத்தின் செயலாளராகவிருக்கின்ற திரு. ரி.கஜேந்திரன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளரான திரு.கே.சதிசேகரன் அவர்களும், எனது பதில் கடமைக்கான வேலைத்தளமாகவிருக்கின்ற அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் மற்றும் உதவிப் பிரதேச செயலாளராகவிருக்கின்ற றாசித் எஹிய்யா அவர்களும் நினைவுபடுத்தப்படவும் நன்றி கூறப்படவும் வேண்டியவர்கள்.
ஆனாலும், அதற்கான வளத்தைப் பெற்றுக்கொள்வதில் சில சவால்களை சந்தித்துக்கொண்டே வந்தேன். அதனால் என்னால் தொகுக்கப்பட்ட ஆரம்ப எழுத்துருவிலான முயற்சியானது பலனளிக்கவில்லை. அதனால் கவலையடைந்தவனாக இருந்த சமயத்தில், நமது நாடு சந்தித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி நிலைமையின் காரணமாக, ஏற்பட்டுள்ள விலையேற்றம் காரணமாக எழுத்துருவிலான சஞ்சிகைகளை என்னால் இக்காலத்தில் வெளியிடமுடியாத ஒரு சங்கடமான நிலையை உணர்கின்றேன்.
நான்காவதாக, இக்காலத்தில் மக்கள் மத்தியில் அதிகரித்துவருகின்ற சமூக ஊடகப் பாவனையும் புழக்கமும், அதனால் பெரும்பாலான பிரபல்யமான அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்களாக மாறிவருகின்ற இக்கால சூழ்நிலையில், நானும் எனது முயற்சியை கைவிடாமல் நவீன போக்கிற்கேற்ப்பவும் மக்களினது நுகர்விற்கேற்ப்பவும் எனது ஆக்க முயற்சியையும் இலத்திரனியல் ஊடகப்பாங்கிற்கேற்ப்ப மாற்றியமைப்பதற்கான முயற்சியை இனியும் தாமதிக்காமல் தொடங்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்க்கொண்டிருக்கிறேன்.
இந்த இலத்திரனியல் முயற்சிக்கான தூண்டுதலை வழங்கியவர்களில் எனது வாழ்க்கைத் துணைவியார் பஸ்மியா றாசிக் முதன்மையானவராக உள்ளார். ஏனெனில் அவரும் சமூக ஊடகப் பாவனையில் ஈடுபாடு காட்டிவருகின்ற, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தை பாடசாலையில் கற்ப்பிக்கின்ற ஒரு ஆசிரியராவார்.
இவ்வாறான காரணங்களும் பின்புலங்களும்தான் இவ்வாறான ஒரு முயற்சியின் பின்னால் இருக்கின்றன.
இறுதியாக எனது எண்ணத்திற்கும் முயற்சிக்கும் உருக்கொடுக்க, ஒரு உளவிழி எனும் பெயரில் ஒரு வலைத்தளத்தை (Website) உருவாக்கித்தருமாறு சகோதரர். எம்.எப்.பர்ஹாத் (Web Designer) அவர்களை வேண்டிக் கொண்டபோது வேண்டியபோது, எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த வலைத்தளத்தை உருவாக்கியமைக்காக அவரை மனதாரப் பாராட்டி நன்றி கூறுகின்றேன்.
இந்த வலைத்தளத்தில் வெளிவரும் ஆக்கங்களை நான் மாத்திரம் பெருமளவில் எழுதக் கடமைப்பட்டிருந்தாலும், எனது எண்ணப்பாட்டில் யாரெல்லாம் உவியல் சார்ந்து எழுதுவதற்கு ஆர்வம் கொண்டு, முன்வருகின்றார்களோ, முயற்சிக்கின்றார்களோ அவர்களுக்கும் வாய்ப்பளிக்க காத்திருக்கின்றேன்.
இந்த வலைத்தளம் தாங்கியுள்ள அனைத்து ஆக்கங்களும் உளசமூகம் பற்றிய அறிவைப் பெறமுனையும் வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், இத்துறையில் பணியாற்றுவோருக்கும் ஏதொவொரு வகையில் பயனுள்ளதாக அமையும் இன்ஷா அல்லாஹ்
நன்றி
இப்பணியில் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக,
உங்களின் உளவளத்துணையாளர்,
சுபைதீன் ஆப்தீன்