முதுமைப் பருவத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அம்சங்கள்

ஒரு மனிதனின் பருவ வளர்ச்சிக் கட்டங்களில் இவ்வுலக வாழ்வின் இறுதியான பருவமாக முதுமைப்பருவத்தைக் குறிப்பிடுவர். இப்பருவமானது இவ்வுலகிலுள்ள எல்லா மனிதர்களாலும் சந்திக்க முடியாத, எல்லோருக்கும் கிடைக்காத ஒரு பருவ நிலைமையாகும் என்பதனை யாரும் மறுக்க முடியாது.


 
எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன் தாயினுடைய வயிற்றிலிருக்கும் போதோ அல்லது பிறந்து ஓரிரு தினங்களிலோ அல்லது சில காலங்களின் பின்னரோ முதுமை என்ற பருவத்தை அனுபவிக்காமல் மரணத்தை அடைவதைப் பார்க்க முடியும்.

ஆனால், இவ்வுலகத்தில் சில மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து தனது ஆயுள் காலத்தை சுமார் 60 வருடங்களுக்கு அப்பால் அல்லது 100 வருடங்களுக்கு அப்பால் கடந்து முதுமை என்ற பருவத்தை அனுபவித்து வாழ்வதையும் நாம் அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான மேலே குறிப்பிட்ட இரு ஆயுட்கால நிலைமைகளும் ஒரு மனிதன் தாமாக அடைவதில்லை. மாறாக, அவனைப் படைத்த இறைவனின் தீர்மானத்திலேயே அவை தங்கியுள்ளது என்பதனை நாம் முதலில் உணர வேண்டும்.

இவ்வாறான முதுமைப் பருவத்தை சந்திக்கின்ற மனிதர்கள், இப்பருவத்தை அருளாகவும் மருளாகவும் அனுபவிக்கின்ற நிலைமையை இன்று அவதானிக்க முடியும்.

அந்தவகையில், முதுமையை அருளாக அனுபவிக்கின்ற மனிதர்களின் அனுபவத்தைப் பொறுத்த வரையில், அவர்கள் தனிப்பட்ட ரீதியில், உடலியல் ரீதியாக பாரிய நோய்களை அனுபவிக்காதவர்களாகவும், உள ரீதியில் சந்தோசமான, திருப்திகரமான உணர்வுகளைக் கொண்டிருப்பவர்களாகவும், ஆன்மீக ஈடுபாடுகளில் சதா ஈடுபாடு காட்டுபவர்களாகவும், பாரியளவான தேவைகள் மற்றும் பிரச்சினைகளைக் கொண்டிருக்காதவர்களாகவும் பிரரிலே முழுமையாகத் தங்கியிராதவர்களாகவும் காணப்படுவர்.

இவர்கள் குடும்ப ரீதியில், முன்னோடிகளாகவும் வழிகாட்டிகளாகவும், பிரருக்கு தொல்லைகளையும் இடைஞ்சல்களையும் கொடுக்காதவர்களாகவும் காணப்படுவர். அத்தோடு, குடும்ப ரீதியில் யாராவது பிரச்சினைகளைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு தீர்வுகளை முன்வைப்பவர்களாகவும், குடும்பத்தில் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது அதற்கு மத்தியஸ்தம் செய்பவர்களாகவும் எல்லா குடும்ப உறுப்பினர்களையும் அனுசரித்து நடந்து அவர்களது மதிப்பையும் மரியாதைகளையும் பெற்றுக் கொள்பவர்களாகவும் காணப்படுவர். 

அதேபோன்று, இவர்கள் சமூகத்தில் மதிக்கப்படக்கூடியவர்களாகவும் தங்களது அனுபவங்களை சமூக அங்கத்தவர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்பவர்களாகவும் சமூக வேலைப்பாடுகளில் முன்னின்று பங்கு கொள்பவர்களாகவும் பல ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குபவர்களாகவும் காணப்படுவர்.

இவ்வாறான முதியோர்களினது உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியன சீரானதாக வீரியமடைந்ததாக ஆரோக்கியமானதாகக் காணப்படும் என்பதில் எவ்விதமான ஐய்யமுமில்லை. இவ்வாறானவர்கள் மரணித்த பிற்பாடும், இவர்களைப் பற்றி இவ்வுலகம் பேசிக்கொண்டேயிருக்கும்.

மாறாக, முதுமையை மருளாக, வேதனையாக அல்லது சோதனையாக அனுபவிக்கின்ற மனிதர்களின் அனுபவத்தைப் பொறுத்த வரையில், அவர்கள் தனிப்பட்ட ரீதியில், உடலியல் ரீதியாக பாரிய நோய்களை அனுபவிப்பவர்களாகவும், உள ரீதியில் துக்கம், சஞ்சலம், மன அழுத்தம் மற்றும் நெருக்கீடு போன்ற உணர்வுகளைக் கொண்டிருப்பவர்களாகவும், கண்ணீரும் கம்பலையுமாக தங்களது சோக நாட்களைக் கடத்துபவர்களாகவும், ஆன்மீக ஈடுபாடுகளில் அக்கரை காட்டாதவர்களாகவும், பாரியளவான தேவைகள் மற்றும் பிரச்சினைகளைக் கொண்டிருப்பவர்களாகவும் பிரரிலே முழுமையாகத் தங்கியிருப்பவர்களாகவும் காணப்படுவர்.

அதுமாத்திரமன்றி, தன்னைப் பராமரிக்க உதவியின்றி, ஒரு வேளைச் சாப்பாட்டிற்கு உதவுவாரின்றி, சாவு எப்போது வரும் என்ற ஏக்கத்தோடும், கைவிடப்பட்டவர்களாகவும் இவர்கள் தங்களது முதுமைப்பருவத்தினைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். இங்கு இவ்வாறான நிலைமைகளிலும் அவைகளை சவாலாக எண்ணிக்கொண்டு மனவுறுதியோடு வாழ்கின்ற சில விதிவிலக்கான முதியோர்களும் இவ்வுலகில் இல்லாமலில்லை.

இவர்கள் குடும்ப ரீதியில், ஓதுக்கப்பட்டவர்களாகவும் கவனிக்கப்படாதவர்களாகவும் காணப்படுவர் அத்தோடு, பிறருக்கு தொல்லைகளையும் இடைஞ்சல்களையும் கொடுப்பவர்களாகவும் குடும்பத்தில் முரண்பாடுகள் தோன்றுவதற்கு காரணமானவர்களாகவும் காணப்படுவர்.

அதேபோன்று, இவர்கள் சமூகத்தில் மதிக்கப்படாதவர்களாகவும் சமூக வேலைப்பாடுகளில் பங்கு கொள்ளாதவர்களாகவும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பாரமானவர்களாகவும் காணப்படுவர்.

இவ்வாறான முதியோர்களினது உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியன சீரற்றதாக வீரியமடையாததாக நோய்வாய்ப்பட்டதாகக் காணப்படும் என்பதில் எவ்விதமான ஐய்யமுமில்லை.

இவ்வாறானவர்கள் மரணித்த பிற்பாடு, இவர்களது இழப்பினைப் பற்றி அவர்களது குடும்பமும் சமூகமும் வருத்தப்படாது, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற நிலைமைகளை இன்றைய சமூகத்தில் அவதானிக்க முடியும்.

அந்தவகையில் முதுமைப் பருவத்தை அருளாகப் பார்ப்பதற்கும், அதனை ஆரோக்கியமான முறையில் கழிப்பதற்கும் ஒரு முதியவர் பின்வரும் அம்சங்களில் முக்கியத்துவம் கொடுத்து அவை சார்ந்த வழிமுறைகளையும் கடைப்பிடித்தல் வேண்டும்.

உடல் :

மனிதனின் உடலமைப்பானது முதுமைப்பருவத்தை அடைந்தவுடன் தளர்வடைந்தும் சோர்வுற்றும் காணப்படுவது வழக்கமானதாகும். இவ்வாறான நிலையில் ஒரு மனிதன் தனது முந்திய கட்டப்பருவங்களில் இயங்கியது போன்று இயங்குவதற்கான நிலைமைகள் காணப்படாது.

அதுமாத்திரமன்றி, இந்தப்பருவத்தில் உடலுறுப்புக்கள் கூட செயற்றிறன் குறைந்த நிலையில் இயங்கும். அதனால், பல்வேறு நோய்களுக்கும் விபத்துக்களுக்கும் ஆட்படுகின்ற நிலைமையானது அடிக்கடி நிகழும்.

இவ்வாறான விடயங்களை யதார்த்தமாகப் புரிந்து கொண்டு, ஒரு முதியவர் தனது உடலுறுப்புக்களைப் பாதுகாப்பான முறையிலும் சுத்தமானதாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும். அத்தோடு, தனது இயலுமைக்கு அப்பாற்ப்பட்ட கருமங்களைச் செய்வதிலிருந்தும் தவிர்ந்து நடத்தல் வேண்டும்.

மேலும், தனது இப்பருவத்தில் உடலாரோக்கியத்தை பேணுகின்ற விதத்திலான உணவுகளை வேளை தவறாது உட்கொள்வதிலும் கவனம் செலுத்துதல் அவசியமானதாகும்.

அடுத்து, நோயுற்ற நிலைமைகளில் உரிய வைத்திய ஆலோசனைகளை முiறாயகக் கடைப்பிடிப்பதுடன், தனக்கு முடியுமான அளவுக்கு உடற் பயிற்சிகளிலும் நாளாந்தம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இவ்வாறான காரியங்களை ஒரு முதியவர் தானாகச் செய்ய முடியாத பட்சத்தில், தனது பாதுகாவலர்களினது உதவியுடன் மேற்க்கொள்ள முயற்சித்தல் வேண்டும்.

உள்ளம் :

எந்த நிலைமகளிலும் ஒரு மனிதனுக்கு உள்ளம் ஆரோக்கியமானதாகவும் சீரானதாகவும் உறுதியானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிலர் முதுமைப்பருவத்தை அடைந்தவுடன் தனது நிலையை நினைத்து உளரீதியில் தளர்வடைந்து செல்வதனை அவதானிக்க முடியும்.

ஆனால், பலர் எந்தவொரு நிலைமைகளிலும் தனது உள்ளத்தை தளர்வடையாது உறுதி குலையாது முறையாக வைத்துக் கொள்வர். இவ்வாறானவர்கள் இப்பருவத்திலும் வாலிபர்களைப் போன்று செயற்படுகின்ற நிலைமைகளை அவதானிக்க முடியும்.

இப்பருவத்தில் முதியோர்கள் எதிர்நோக்குகின்ற உணர்வுசார்ந்த பிரச்சினைகளை முறையாக விளங்கி அவற்றை ஆரோக்கியமான வழியில் கையாழ்வதற்கு முனைதல் வேண்டும். அதற்காக, அவர்கள் தங்களது வாழ்க்கைத் துணையுடன் அல்லது மிக நெருக்கமான உறவினர்களுடன் அல்லது நண்பர்களுடன் மனம்விட்டுப் பேச முனைதல் வேண்டும்.

அத்தோடு, தங்களைப் பராமரிப்பவர்களால் அல்லது தங்களது உறவுகளால் ஏதாவது மனதைப்பாதிக்கின்ற விதத்திலான நிகழ்வுகள் இடம்பெற்றால், அவைகளைப் பொறுத்துக் கொள்கின்ற பக்குவமான பெருந்தன்மையினை ஏற்ப்படுத்திக் கொள்தல் வேண்டும். இவ்வாறான நிலைமைகளில், முதியவர் என்ற அடிப்படையில், வாழ்க்கையினை அனுபவித்தவர்கள் நாம் என்ற மனப்பாங்குடன் தங்களுக்கு கீழுள்ளவர்களால் விடப்படும் தவறுகளை ஏற்று மன்னிக்கின்ற மனநிலைமைகளை ஏற்ப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அத்தோடு, கடந்தகால வாழ்க்கையில் அடையமுடியாமல் போனவற்றையும் இழந்த இழப்புக்களைப்பற்றியும் சதா எண்ணிக்கொண்டு, இப்பருவத்தை கழிப்பதனை பெரும்பாலும் முதியோர்கள் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

இவ்வாறான நிலைப்பாடுகளுடன் தங்களது நடவடிக்கைகளை ஏற்ப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், இப்பருவ நிலைமைகளில் ஏற்ப்படுகின்ற உள நெருக்கீடுகள், அழுத்தங்கள், மெய்ப்பாட்டு வெளிப்பாடுகள் மற்றும் அச்சப்பாடுகள் போன்றவற்றை இலகுவாக எதிர்கொள்ள முடியும்.

அவ்வாறும் முடியாத பட்சத்தில், தொழில்வாண்மையிலான உளவளத்துணை உத்தியோகத்தர்களை சந்தித்து தங்களது உள மற்றும் உணர்வு சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு முயற்சித்தல் வேண்டும்.

மேலும், முதியவர்கள் தங்களது உள்ளத்தை சாந்தப்படுத்துவதற்கான, அமைதிப்படுத்துவதற்கான வழிகளில் ஈடுபாடு காட்டுதல் வேண்டும். அதற்காக நாளாந்தம் தியானம், மூச்சுப்பயிற்சிகள் மற்றும் யோகாசனம் போன்ற மனவளப்படுத்தல் பயிற்சிகளில் ஈடுபாடு காட்டுதல் வேண்டும்.

மேலும், தங்களது ஓய்வு நேரங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்காக முறையான பொழுதுபோக்குத் தளங்களையும் சாதனங்களையும் நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். இவ்வாறான நிலைமைகள் முதியோர்களுக்கென ஏற்ப்படுத்தப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு அல்லது தம்மைப் போன்ற இன்னும் பலருடன் குழுவாகச் சேர்ந்து அவற்றை ஏற்ப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

ஏனெனில், இப்பருவ நிலைமைகளில் அதிகமான நேரங்கள் ஓய்வு நிலையிலிருப்பதனால், அவற்றை முறையாகவும பிரயோசனமாகவும் கழிப்பதன் மூலமாக உள்ளத்தை ஏனைய பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஆன்மா:

மனிதனைப் படைத்த இறைவன் அவனில் ‘ஆன்மா’ என்ற மிக முக்கியமான ஒரு அம்சத்தினை அவனில் வைத்துள்ளான் என்ற யதார்த்தபூர்வமான உண்மையை பல சமயங்களும் மதங்களும் எடுத்தியம்புகின்றன.

இந்த ஆன்மாவானது உள்ளத்தை நெறிப்படுத்தி வழிகாட்டிச் இயக்குகின்ற மிக அடிப்படையான ஒரு வேலையைச் செய்கின்றது. அந்த உள்ளத்தில் மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்ற எண்ணங்களானது அம்மனிதனது நடத்தையை தீர்மானிக்கின்றது. அந்தவகையில், மனிதனின் நடத்தையை தீர்மானிக்கின்ற மூலமாக இந்த ஆன்மா தொழிற்படுகின்றது என்றால் அது மிகையாகாது.

மனிதன் தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் அவனது உடலை அழகு படுத்தவும் மனதை வளப்படுத்தவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் உலக வாழ்க்கையை அனுபவிக்கவும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தையும் அதற்கான முயற்சியையும், இந்த ஆன்மாவை உயிரோட்டமுள்ளதாகவும் புனிதமானதாகவும் வைத்துக் கொள்வதற்கு வழங்குவதில்லை என்ற உண்மையினை அனைவரும் அதிலும் குறிப்பாக முதியவர்கள் புரிந்து கொள்ளல் வேண்டும்.

இந்த ஆன்மாவின் புனிதத் தன்மையானது ஒரு மனிதனின் செயல்களை மைய்யமாக வைத்துத்தான் சீரானதா? அல்லது சீர்கெட்டதா? என கணிப்பிடப்படகின்றது என்ற யதார்த்தத்தை நாம் உணர்தல் வேண்டும். ஒரு மனிதன் மேற்க்கொள்கின்ற செயற்பாடுகள் நல்லதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தால், அவனது ஆன்மாவானது சீரானதாகவும் வழமானதாகவும் காணப்படும் ஆனால், மோசமான மற்றும் பயனற்ற நடத்தைகள் அவனிலிருந்து வெளிப்பட்டால், அவனது ஆன்மா கெட்டதாகக் காணப்படும்.

இந்த ஆன்மாவை வளப்படுத்துவதற்காகவும் சீரானதாகவும் அமைத்துக்கொள்வதற்கு, ஒரு மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி அதனடியாக அவன் கொண்டுள்ள உண்மையான நம்பிக்கையின் விளைவாக அவன் மேற்க்கொள்கின்ற செயற்பாடுகளை நன்மையானதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்துக் கொள்ளல் அவசியமானதாகும். அதற்காக, முதலில் அவன் தனக்கு வழங்கப்பட்டுள்ள இறை வழிகாட்டல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தவகையில், அவன் மேற்க்கொள்கின்ற வணக்க வழிபாடுகள், தானதர்மங்கள், சமயக் கடமைகள் அனைத்தும் அவனது ஆன்மாவை வளமானதாக மாற்றுகின்ற நடவடிக்கைகளாகும்.

இவ்விடயத்தில், முதுமைப்பருவத்திலுள்ளவர்கள் மிகவும் பக்குவமாகவும் அவதானமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும். ஏனெனில், ஆன்மாவை இன்னும் சீராக வைத்துக் கொள்வதற்கான காரியங்களை மேற்க்கொள்வதற்கான அவகாசத்தையும் பக்குவத்தையும் இப்பருவ காலம் ஒரு மனிதனுக்கு வழங்குகின்றது.

சமூக ஈடுபாடுகள்:

முதியோர்கள் தங்களது இப்பருவத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அடுத்த விடயம்தான், சமூக நலன்சார் விடயங்களில் ஈடுபாடு காட்டுதல் வேண்டும். ஒரு சமூகத்தில் முதியவர்கள் சுமையாகப் பார்க்கப்படுவதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வதற்கு இவ்விடயத்தில் முதியோர்கள் கவனம் செலுத்துதல் இன்றியமையாததாகும். இந்தவிடயத்தில் தங்களது இயலுமைகளுக்கு உட்பட்டவிதத்தில் நடந்துகொள்ளல் வேண்டும்.

முதியோர்கள் பழுத்த அறிவும் அனுபவமும் முதிர்ச்சியான திறனும் கொண்டவர்கள். இவ்வாறான விடயங்களை இன்று சமூகம் அதன் முன்னேற்றத்தில் எதிர்பார்க்கின்றது. சமூக நலன்சார்ந்த விடயங்களில் முன்னின்று உழைப்பவர்களுடன் சேர்ந்து செயற்படுதல் அல்லது அதற்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல் போன்ற முறைகளில் பங்களிக்க முடியும். இதன் மூலமாக, ஒரு ஆத்ம திருப்தியை முதியோர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறான ஆக்கப்பணிகளுக்கு பங்களிக்கின்ற முதியோர்களை, அச்சமூகம் ஒரு போதும் புறக்கணிக்காது.

எனவே, முதியோர்களும் அவர்களை வழிகாட்டுவோர்களும் முதுமைப்பருவத்தில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய மிக அவசியமான அடிப்படைகளான உடல், உள்ளம், ஆன்மா மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய விடயங்களில் ஆரோக்கியமான தீர்மானங்களுடனான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமாகவும் அதில் தொடாந்தேர்ச்சியான நிலையை கடைப்பிடிப்பதன் மூலமாகவும் முதுமையை ஒரு அருளாகப் பார்த்து அனுபவிக்கின்ற நிலைமையினை ஏற்படுத்தலாம்.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...

0 Comments