முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருமணத்திற்கு முந்திய உளவளத்துணையும் உள்ளடக்கப்படல் வேண்டும்

நமது நாட்டிலுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது, தற்கால நடைமுறைக்கேற்ப்ப பல ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தினடிப்படையில், இன்று பல வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் பல முன்மொழிவுகள் பல தரப்பினராலும் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாம் திருமணத்தையும் குடும்ப வாழ்வினையும் ஒரு பிரதானமான வணக்கமாக ஆக்கியுள்ளது. குடும்ப வாழ்விற்கான அடிப்படையாக திருமணத்தை விதியாக்கியுள்ள அதேநேரத்தில், ஒரு மனிதன் திருமணத்தை நிறைவுசெய்வதன் மூலமாக அவனை மார்க்கத்தில் அரைவாசியைப் பூர்த்திசெய்தவனாகவும் கருதுகின்றது. மேலும் ஒரு சமூகத்தின் அடிப்படை அலகாகவும், அத்திவாரமாகவும் குடும்பத்தை இஸ்லாம் நோக்குகின்றது.

அதுமாத்திரமன்றி, திருமணத்தின் மூலமாக ஏற்படுத்தப்படும் குடும்ப வாழ்வானது, ஒரு மனிதனின் கர்ப்பொழுக்கம் பேணல், சந்ததிகளை உருவாக்குதல் மற்றும் இறைவனின் பிரதிநிதித்துவப் பொறுப்பினை தனது அடுத்த சந்ததிக்கு ஒப்படைத்தல் ஆகிய நோக்கங்களை எட்டுவதாக அமைய வேண்டும் எனவும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

ஒரு மனிதனின் குடும்ப வாழ்வானது அவனை சந்தோசப்படுத்துவதாகவும், அவனுக்கு மன நிறைவைக் கொடுப்பதாகவும், உள அமைதியை ஏற்படுத்துவதாகவும், பாலூக்கத் தேவைகளை நிறைவு செய்வதாகவும், அவனது கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதாகவும், சமூகப் பாதுகாப்பினை வழங்குவதாகவும் அமைவதற்கான அனைத்துவிதமான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் இஸ்லாம் வழங்குகின்றது.

இவ்வாறான உயர்ந்த இலக்குகளையும் நோக்கங்களையும் அடைவுகளையும் கொண்டமைய வேண்டிய குடும்ப வாழ்க்கையானது, இன்று பலரது வாழ்க்கையில் பிரச்சினைகளைக் கொண்டதாகவும் அவர்களது நிம்மதியை குலைத்ததாகவும் அமைந்திருக்கின்றது. இவ்வாறான பிரச்சினைகளைக் கொண்டவர்களால் இன்று குடும்பக் கட்டமைப்பு, அதன் விழுமியங்கள் மற்றும் அதன் உயர் இலக்குகள் சிதைவடைந்து, சின்னாபின்னமாகி காணப்படுகின்றன.

திருமணம் அதற்கான நடைமுறை ஒழுங்குகள், அதனாலேற்படும் பிரச்சினைகளைக் கையாழ்தல், சொத்துப் பங்கீடுகள், வாரிசுரிமைகள் போன்ற விடயங்களை கையாழும் நோக்கில் 1951ம் ஆண்டு இலங்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது அமுலுக்கு வந்தது.

இந்த சட்டத்தின் அமுலாக்கத்திலிருந்த சில நடைமுறை ரீதியிலான பிரச்சினைகளையும் பலவீனங்களையும் கருத்திற்கொண்ட அரசு, அதனை தற்போதைய நடைமுறைப் போக்கிற்கேற்ப்பவும், கடந்த காலங்களில் பெறப்பட்ட அனுபவங்களைக் கருத்திற்கொண்டும், தற்கால குடும்பங்களின் ஆரோக்கியமான பாதுகாப்பான வாழ்வினைக் கருத்திற் கொண்டும் அதில் மாற்றங்களைச் செய்வதற்காக 2009ம் ஆண்டில் நீதியமைச்சு ஒரு குழுவினை அமைத்து, இது தொடர்பான பரிந்துரைகளைப் பெறப்பணித்தது.

இதன்காரணமாக பல முன்மொழிவுகள் சமூக மட்டத்திலிருந்து பெறப்பட்டன. இந்த முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, திருமண வயதெல்லை, தலாக் ஒழுங்கமைப்பு, விவாகரத்துப்பெற்ற பெண்ணுக்கான கொடுப்பனவு, பெண் காழிகள் உருவாக்கம், காழி நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை சட்டமாக்குதல், விவாகரத்து, காழிகளின் தன்மை மற்றும் பலதார மணம் ஆகிய 08 தலைப்புக்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு, இறுதிப் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பரிந்துரைகளை நீதியமைச்சானது பாராளுமன்றில் சமர்ப்பித்து, வாக்கெடுப்பின் பின்னர், சட்டமாக அங்கீகாரம் பெற்று அமுலுக்கு வரவிருக்கின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், இந்த முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினுள் ‘திருமணத்திற்கு முந்திய உளவளத்துணையின் அவசியம்’ தொடர்பான உள்ளடக்கத்தையும் உட்புகுத்துதல் பற்றிய ஒரு கவனயீர்ப்பினை செலுத்துவதற்கான, ஒரு கருத்தியியலை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இன்று இடம்பெறும் திருமணங்களில் சில பெற்றோர்களின் முறையான பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், சிலது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் அபிப்பிராயங்களையும் சம்மதங்களையும் கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் திருமணங்களாகவும், சில திருமணங்கள் பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பங்களைக் கருத்திற்கொள்ளாது கணக்கெடுக்காது, அவர்களது வற்புறுத்தல்களின் மூலமாகவும், சில திருமணங்கள் காதலிப்பதன் மூலமாகவும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அத்தோடு, இன்றைய நவீனகால சூழலில் நடைபெறும் திருமணங்கள் மூலமான குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சினைகள் மலிந்து காணப்படுகின்றது. மன அழுத்தம், சீதனக் கொடுமை, வீட்டு வன்முறை, கணவன் மனைவி வகிபாகத்தில் ஏற்படும் முரண்பாடுகள், கடன்சுமை, பெற்றோர் பிள்ளைகள் முரண்பாடு, பாலூக்கத் தேவைகள் நிறைவேற்றப்படாமை அல்லது அதீத எதிர்பார்ப்புக்கள், திருப்தியற்ற தாம்பத்திய உறவு, சந்தேகம், உறவுகளைக் கவனிக்காமை, வேலைப்பளு, மனைவி கணவனுக்கு கீPPழ்ப்படியாமை போன்ற ஏறாழமான பிரச்சினைகள் இன்று காணப்படுகின்றன.

இவ்வாறான பிரச்சினைகளால் இன்று குடும்ப மட்டத்திலும் சமூகத்தளத்திலும் பல்வேறு வேண்டத்தகாத விளைவுகள் தோன்றியுள்ளன. குறிப்பாக, விவாகரத்து அதிகரித்துள்ளது, விதவைகள் அதிகரிப்பு, உள அமைதியின்மை, மனக்கசப்பு, தொற்றா நோய்களின் அதிகரிப்பு, பெண்கள் வெளிநாடு செல்லுதல், முறையற்ற தொடர்புகளில் ஈடுபடுதல், விபச்சாரம், கைவிடப்பட்டவர்களில் சிலர் யாசகத் தொழிலில் ஈடுபடல், வட்டி செலுத்துதல், ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்ற கோஷங்கள் வலுப்பெறல், பிள்ளைகள் சீரழிதல், பாடசாலை இடைவிலகல், தவறாளர்களின் பிடியில் குடும்ப அங்கத்தவர்கள் மாட்டிக்கொள்ளல், கணவன் அல்லது மனைவி தனது உணர்வுகளை ஏனையவர்களிடம் பகிர்ந்து ஆறுதல் பெறமுனைதல், பிள்ளைகள் சிறுவர் துஷ்பிரயோத்திற்குள்ளாதல், தம்பதிகளில் சிலர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக இலஞ்சம் செலுத்துதல் போன்ற மிக மோசமான நிலைமைகள் தோன்றியுள்ளன.

இவ்வாறான பிரச்சினைகளை குடும்பங்களில் தோற்றுவிப்பதில் பிரதானமான காரணிகளாக, கணவன் மனைவி தெரிவில் ஆரோக்கியமான முறைமை பின்பற்றப்படாமை, வயது இடைவெளி, குடும்ப வாழ்வு பற்றிய சரியான புரிதலில்லை, நவீன தொலைத் தொடர்பு சாதனங்களிலும் சமூக ஊடகங்களிலும் மோகம் கொள்ளுதல், மூன்றாம் நபரின் தலையீடு, போதைப்பாவனை, பொருளாதாரத்தை திட்டமிடாமை, புரிந்துர்ணவற்ற வாழ்கைப் போக்கு, அன்பு குறைவடைதல், மனவெழுச்சிகள் முறையாக முகாமை செய்யப்படாமை, வன்முறையான தொடர்பாடல், உறவுகளைக் கவனிக்காமை, உடல் உளப் பாதிப்புக்கள், பிள்ளை வளர்ப்பு பற்றிய போதிய விளக்கமின்மை, பெற்றோரின் ஆதிக்கத் தலையீடு, இளவயதில் திருமணம், சின்னத்திரைகளின் செல்வாக்கு, குடும்ப முரண்பாட்டை கையாழும் திறனின்மை போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான காரணங்களை குறைப்புச் செய்வதிலும், அதன் நிமித்தமாக குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தணிப்புச் செய்வதிலும் திருமணத்திற்கு முந்திய உளவளத்துணையின் பங்கு அளப்பரியாதாகும். இந்த திருமணத்திற்கு முந்திய உளவளத்துணை நடவடிக்கையானது, இன்று மலேசியா போன்ற நாடுகளில் சட்டமாகவும், கிறிஷ்தவ சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதிமுறையாகவும் இன்று நடைமுறையிலுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையின் மூலமாக, திருமணத்திற்கு தயாரான நிலையில் காணப்படும் சந்ததியினரை அல்லது, கட்டிளமைப்பருவத்தினரை அல்லது திருமணம் நிச்சயிக்கப்பட்ட தம்பதிகளை இலக்குவைத்து, ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள், ஒரு ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான விடயதானங்களில் அவர்களை அறிவு+ட்டி, வலுப்படுத்தும் நடவடிக்கை அல்லது பயிற்சியளிக்கும் செயன்முறைதான் திருமணத்திற்கு முந்திய உளவளத்துணையாகும்.

இவ்வாறான செயன்முறையின் மூலமாக பூரணமாகப் பயிற்றப்பட்ட நபர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் திருமணத்திற்கு தயாராகின்றபோது, திருமணத்தைப் பதிவுசெய்யும் பதிவாளர்கள் இந்த சான்றிதழை ஒரு தகைமையாகக் கோரி, அதனை உரிய ஆணும் பெண்ணும் வழங்கும்போதே திருமணத்தை சட்டரீதியாகப் பதிவுசெய்வர்.

அந்தவகையில், இந்த திருமணத்திற்கு முந்திய உளவளத்துணையின் உள்ளடக்கங்களாக இஸ்லாத்தில் குடும்பவியல் தொடர்பாக கூறப்பட்ட ஆண் பெண் தொடர்பான கண்ணோட்டம், கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆற்றவேண்டிய உரிமைகள் மற்றும் கடமைகள், தாம்பத்தியம், பிள்ளை வளர்ப்பு, திருமணத்திற்கான ஒழுங்குகள் மற்றும் விதிமுறைகள், விவாகரத்து சட்டங்கள், பொருளீட்டல் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள், ஹலால் ஹறாம் பேணல், இரத்த உறவுகளைப் பேணல், அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல் மற்றும் பிரச்சினைகளைக் கையாழ்தல் போன்றவைகள் பற்றிய பூரணமான விளங்கங்களையும்,

உளவியல் நோக்கில், ஆண் பெண் இயல்புகள் மற்றும் தன்மைகள், மணமகன் மணமகள் தகுதிப்பண்புகள், குழந்தை உளவியல், விருத்தி உளவியல், உளப் பிரச்சினைகள் பற்றிய அறிமுகம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் அடிப்படைகள் போன்ற விடயங்கள் அடங்கிய அறிவுப்பரப்பினையும், சுகாதரம் தொடர்பில், உடல் உள நலத்தைப் பேணுதல், நோய்கள் குறிப்பாக பாலியல் நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள், ஆரோக்கியம் பேணுதல் போன்ற விடயங்கள் பற்றிய அறிவையும்,

இன்னும், ஒரு வீட்டுச் சு+ழலை எப்படி ஒழுங்கு படுத்துவது, அழகு படுத்துவது, அதனுள் சுத்தத்தைப் பேணுவது, அதன் பாதுகாப்பு மற்றும் அவ்வீட்டுச் சூழலில் வசிப்பவர்களது மனதிற்கு அமைதியையும் கண்களிற்கு குளிர்ச்சியையும் தரும் வகையில் அமைத்துக் கொள்வது என்பது பற்றிய மனை முகாமைத்துவம் தொடர்பான விளக்கத்தையும்,

அதேபோன்று, ஒரு வீட்டிலுள்ள அங்கத்தவர்களான மனிதவளங்களில் கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளின் நலன்கள், உரிமைகள் கடமைகள், அவர்களின் விருப்பங்கள் வெறுப்புக்கள், அடிப்படைத் தேவைகள், அன்புத்தேவைகள், பாதுகாப்பு, உடல் உளத் தேவைகள் மற்றும் ஆரோக்கியங்கள், அவர்களது அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு விருத்திக்கான வழிகாட்டல்கள் அதற்கான உதவி ஒத்தாசைகள், அவர்களின் ஏனை எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றில் எப்படியான முகாமைத்துவத் திறன்களை வளர்த்துக்கொள்வது என்பது பற்றியும் திருமணத்திற்கு முந்திய உளவளத்துணை வழிகாட்டலில் அறிவூட்டப்படும்.

மேலும், ஒரு குடும்பத்தின் தேவைகளில் மிக முக்கியமான அம்சம்தான் நிதி. இந்த நிதி விடயத்தில் தம்பதியினர்களுக்கு மத்தியில் சிறந்த திட்டமிடலும் முகாமைத்துவமும் அவசியமாகும். ஒரு குடும்பத்தின் வருமானங்கள், செலவினங்கள் மற்றும் சேமிப்பு என்பன தொடர்பாக சிறந்த தெளிவு குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் இருந்தால்தான், அந்தக் குடும்ப வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

இந்த விடயத்தில், வரவிலும் கூடிய செலவினம் அதனாலேற்ப்படும் கடன்கள் என்பன குடும்பத்தில் தம்பதிகளுக்கிடையில் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் நிம்மதியின்மையையும் தோற்றுவிக்கும். அந்தவிகையில், குடும்ப அங்கத்தவர்கள் தங்களது வருமான மூலங்களை சிறந்த முறையில் நிலைநிறுத்திக் கொள்வதுடன், தமது குடும்பத்திற்கான செலவினங்களில், தமது அடிப்படைத் தேவைகளுக்கான செலவினங்கள், நாளாந்த செலவினங்கள், கல்வித் தேவைகளுக்கான செலவினங்கள், உபசரிப்புகளுக்கான செலவினங்கள் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான செலவினங்கள் போன்ற செலவினங்களை முறையாகத் திட்டமிட்டு, வருமானத்திலும் கூடிய மிகையான செலவினங்கள் ஏற்படாதவாறு குடும்பத்தை நடாத்துவதற்கான பயிற்சிகளை முன்கூட்டிப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

தம்பதிகளுக்கிடையில் அவரவர் வெளிப்படுத்தும் மனவெழுச்சிகளை முகாமை செய்வதில் தெளிவான புரிதல் இருத்தல் வேண்டும். மனிதர்களில் நேரான மனவெழுச்சிகளான, மகிழ்ச்சி, அன்பு, பொறுமை, நிதானம், சிரிப்பு, கீழ்ப்படிவு, நம்பிக்கை, திருப்தி, தியானம், கருத்துhன்றிய நிலை, ஆச்சரியம் ஆகியனவும், மறையான மனவெழுச்சிகளான, பயம், கோபம், வெறுப்பு, அலட்சியம், அழுதல், எரிச்சல், பதற்றம், அவநம்பிக்கை, விரக்தி, பொறாமை, குழப்பம், குற்றவுணர்வு போன்றனவும் தோற்றம் பெறமுடியும். இவ்வாறான நிலைமைகளின் போது தங்களுக்கிடையில், அவற்றை ஒருவொருக்கொருவர் சிறப்பாகப் புரிந்துகொண்டு, வாழ்க்கைப் பயணத்தை தொடர்தல் வேண்டும்.

குறிப்பாக, மனவெழுச்சிகளை அறிவுபூர்வமாகக் கையாழ்கின்ற திறன் தம்பதியினர்களுக்கிடையில் வளரவேண்டும். அதிலும் குறிப்பாக, கோபத்தை வெளிப்படுத்துகின்றபோது அறிவு பிரயோகிக்கப்படல் இன்றியமையாததாகும்.

அடுத்து, குணவியல்புகள், பரம்பரைகள், சூழலியல்புகள், பின்னணிகள், கல்வியறிவு போன்றனவற்றில் இரு வித்தியாசமான வேறுபட்ட கோணங்களையும் நிலைப்பாடுகளையும் கொண்டு, திருமணத்தின் மூலமாக குடும்ப வாழ்வில் இணையும் நபர்களாகக் காணப்படும் கணவன் மற்றும் மனைவிகளுக்கிடையில் பல முரண்பாடுகள் உருவாகமுடியும்.

குறிப்பாக, தம்பதிகளுக்கிடையில் வீட்டை முகாமை செய்தல், வருமானம் மற்றும் செலவினங்களைக் கையாழ்தல், பிள்ளை வளர்ப்பு, உறவினர்களைக் கவனித்தல், நேரத்தைப் பேணுதல், வேலைப்பகிர்வுகள், உணர்வுகளை வெளிப்படுத்தல், வார்த்தைகளைப் பிரயோகித்தல், பொறுப்புக்களை நிறைவேற்றுதல், உரிமைகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுதல், தாம்பத்தியம், விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துதல் போன்றவற்றில் இருவருக்கிடையிலும் முரண்பாடுகள் தோற்றம் பெறமுடியும்.

அதேபோன்று, பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறமுடியும். குறிப்பாக பிள்ளைகள் பதின்ம வயதினர்களாக அல்லது கட்டிளமைப்பருவத்தினர்களாக மாறும்போது, பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலிருந்து பெரும்பாலும் விலகிச்செல்கின்ற நடத்தைகளைக் கொண்டவர்களாகவும் பெற்றோர்களுடன் தர்க்கம் புரியக்கூடியவர்களாகவும் மாறுவர்.

இன்று சிறுசிறு விடயங்களுக்கெல்லாம் முரண்பட்டுக்கொண்டு, பெரிதுபடுத்திக் கொண்டு, திருமணவிலக்குக் கோரி காழி நீதிமன்றங்களை நாடிச்செல்கின்ற நிலைமைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இப்படியான சூழ்நிலைகளில், எப்படியான அணுகுமுறைகளைக் கையாண்டு தமக்குள் ஏற்படும் முரண்பாடுகளை கையாழ்வது என்ற அறிவினை இருவரும் பெறல்வேண்டும். முரண்பாட்டுக் கூருணர்வு, முரண்பாட்டுப் பகுப்பாய்வு மற்றும் முரண்பாட்டுத் தீர்வு ஆகியன அடங்கிய முரண்பாட்டு முகாமை தொடர்பில், ஆணும் பெண்ணும்; திருமணத்திற்கு முன்னர் அறிவினைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அப்போதுதான், குடும்ப வாழ்க்கையில் தோன்றும் முரண்பாடான நிலைமைகளை சுமுகமான முறையில் கையாண்டு, குடும்ப வாழ்வினை மகிழ்ச்சிகரமானதாக அமைத்துக் கொள்ளமுடியும்.

இவ்வாறான விடயப்பரப்புக்களையும் உள்ளடக்கங்களையும் கொண்டு வழங்கப்படும் திருமணத்திற்கு முந்தியதான உளவளத்துணை வழிகாட்டல் செயன்முறையின் மூலமாக, ஒரு பக்குவமான, பண்பட்ட தம்பதிகளையும் குடும்பங்களையும் சமூகத்தில் உருவாக்க முடியும், அதற்காக வித்திட முடியும்.

அதனூடாக, இன்று குடும்ப மட்டங்களில் ஏற்பட்டுள்ள வேண்டத்தகாத பிரச்சினைகளையும் முறையற்ற திருமணங்களையும் குறைத்து, ஆரோக்கிமான குடும்பங்களை உருவாக்கி, ஒரு வளமான சமூகத்தின் கட்டமைப்பிற்கான அத்திவாரங்களை இடமுடியும்.

எனவே, தற்போது நமது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நமது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்தத்தில், சமூகத்தின் எதிர்கால நன்மைகள் கருதி, திருமணத்திற்கு முந்தியதான உளவளத்துணையின் அவசியத்தையும் முக்கியத்துவத்தினையும் நன்குணர்ந்து, ஒரு அவசியமான விதிமுறையாக அல்லது நிபந்தனையாக இதனை உள்ளடக்க சம்பந்தப்பட்ட புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள் முன்வரல் வேண்டும்.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...

0 Comments