மனிதனைப் பொறுத்தவரையில் சாதாரன நடத்தை மற்றும் அசாதாரன நடத்தை கொண்டவர்கள் என வகைப்படுத்த முடியும். சாதாரன நடத்தை கொண்ட ஒரு நபர் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பிறழ்வு நடத்தை கொண்டவராகவும் தொழிற்படலாம். அதேபோன்று, பிறழ்வு நடத்தை கொண்ட ஒரு நபர் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சாதாரன நடத்தை கொண்டவராகவும் தொழிற்படமுடியும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் அசாதாரன நடத்தை அல்லது பிறழ்வு நடத்தைகள் ஒரு குறிப்பிட்ட அளவில் உண்டென்ற கருத்தும் உண்டு. ஆனால் முழுவதற்கும் பொதுவான சில அசாதாரன நடத்தைகள் உள்ளன.
பிறழ்வு நடத்தைகள், விலகல் நடத்தைகள், நியமங்களை விட்டுப் பெயர்ந்து செல்லும் நடத்தைகள், அசாதாரன நடத்தைகள் என்றவாறு பல்வேறு தொடர்கள் இத்துறையிலே எடுத்தாளப்படுகின்றன. இந்த எண்ணக்கருக்கள் உளவியல் நோக்கிலும் சமூகவியல் நோக்கிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணக்கருக்களிடையே சாதாரன நோக்கிலும், அறிவார்ந்த நோக்கிலும் வேறுபாடுகள் இருத்தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
மூளையின் ஒழுங்கு குலைவால் ஏற்படும் ஒரு வெளிப்பாடாக பிறழ்நிலை நடத்தைகள் ஏற்படுவதாக உளமருத்துவத்துறையினர் விளக்குகின்றனர். அதனால் மருந்துப் பொருட்களால் மட்டுமே அவற்றைக் குணப்படுத்தமுடியும் என இவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் உளவியல் அணுகுமுறைகளால் தீர்க்கப்படக்கூடியவற்றிற்கு மருந்துகள் அவசியமில்லை என உளவியலாளர்கள் வாதிக்கின்றனர்.
அசாதாரன உளநடத்தைக்கான காரணங்கள் (Reasons for Abnormal Psychological behavior)
1. பரம்பரை இயல்புகள் (Nature of Genetics):
ஒரு மனிதனுடைய தன்மையை அவனது ஆளுமையை வடிவமைப்பதில் எவ்வாறு அவனது பெற்றோரினது பரம்பரை இயல்புக்காரணிகளும் சூழல் காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றதோ, அதேபோல அவனது நடத்தையை தீர்மானிப்பதிலும் அவைகள் தாக்கம் செலுத்துகின்றன.
அந்தவைகயில், ஒரு மனிதனின் தாய் அல்லது தகப்பனிடம் காணப்படுகின்ற அசாதாரன உளநடத்தைப் பண்புகள் அம்மனிதனிலும் கடத்தப்பட்டு அவற்றிலிருந்து சில பிறழ்வான நடத்தைகள் அவரிலும் வெளிப்படுவதனைக் காணமுடியும்.
உதாரணமாக, தகப்பன் ஒரு போதை அல்லது புகைத்தல் பாவனையை உடையவராக இருந்தால், அவரது பிள்ளையும் புகைத்தல் அல்லது போதைப் பாவனையை உடையவராக மாறமுடியும்.
2. குடும்பப் பின்னணி (Family Background) :
ஒரு நபரின் சாதாரன உளநடத்தையையும் உள ஆரோக்கியத்தையும் பேணிக் காப்பதில் அவரது குடும்பத்தின் வகிபாகமும் பங்களிப்பும் இன்றியமையாததாகும். ஒரு வளமான குடும்பத்தில் நல்ல உளவளமிக்க மனிதர்கள் உருவாகுவார்கள் என்பதனை எதிர்பார்க்க முடியும்.
அந்தவகையில், ஒரு குடும்பத்தின் நிருவாகிகளான தாய் மற்றும் தகப்பனின் வழிகாட்டல்கள் சீரானதாக ஆரோக்கியமானதாக அமையுமாயின் அக்குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களில் நல்ல உள ஆரோக்கியத்தைக் காணமுடியும். குறிப்பாக தாயும் தகப்பனும் நல்ல உள ஆரோக்கிமானவர்களாக காணப்படுவார்களாயின் அவர்களது நடத்தை மற்றும் செயற்பாடுகள் என்பன சீரானதாக அமையும்.
மாறாக அந்நிருவாகிகள் உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்களானால், அவர்களது நடத்தை மற்றும் வழிகாட்டல்களில் ஏற்படும் தவறுகள் அங்குள்ள அங்கத்தவர்களினது உளநடத்தையில் அசாதாரன நிலைமையைத் தோற்றுவிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
அதேபோன்று ஒரு நபரின் பருவங்களான குழந்தை, முன்பிள்ளை, பிள்ளை மற்றும் கட்டிளமை ஆகிய பருவங்களில் ஏற்படும் பாதிப்புக்கள் என்பன அந்நபரின் அசாதாரன உளநடத்தைக்கு காரணங்களாக அமைகின்றன.
குறிப்பாக, இவ்வாறான பருவங்களில் வளர்ப்பில் விடப்படும் தவறுகள், பிழையான பயிற்றுவிப்புக்கள் மற்றும் நெருக்கீடுகள், வன்முறைப் பிரயோகங்கள், உடல், உள, உணர்வு ரீதியிலான துஷ்பிரயோகங்கள், புறக்கணிப்புக்கள், கசப்பான துன்பியல் அனுபவங்கள், சித்திரவதைகள், பாரபட்சங்கள், அடக்குமுறைகள் என்பனவற்றால் உளநிலை பாதிப்படைகின்றன.
மேலும் ஒரு சமூகத்தை உருவாக்குகின்ற பிரதான நிறுவனமாகிய குடும்பத்தில் முரண்பாடுகள் ஏற்படும்போது குறிப்பாக, கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் அல்லது பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுமானால் அங்குள்ள அங்கத்தவர்களின் மனநிலை பாதிப்படைகின்றது.
கணவன் மனைவிக்கு இடையில் சீரான உறவில்லாமல் அதன் விளைவாக வீட்டு வன்முறை, தம்பதிகளில் ஒருவர் வெளிநாடு செல்லல், விவாகரத்து போன்ற நிலைமைகள் ஏற்படுகின்றது. அதேபோன்று பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் சீரான உறவின்மை ஏற்படுகின்றபோது விரிசல்கள் தோன்றும் போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக, அக்குடும்பத்தின் இயல்புநிலை மற்றும் சமனிலை என்பன பாதிப்படைகின்றது. அதனால் அக்குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள் உளரீதியில் பாதிப்படைந்து அசாதாரன நடத்தையை வெளிக்காட்டுவர்.
3. சூழல் காரணிகள் (Context):
ஒரு மனிதனின் அறிவு, சிந்திக்கும் தன்மை, மனப்பாங்கு மற்றும் நடத்தையை தீர்மானிப்பதில் அவன் வாழ்கின்ற சூழல் பாரியளவான செல்வாக்கினைச் செலுத்துகின்றது.
எவ்வாறு ஒரு பயிர் வளர்வதில் அது சார்ந்துள்ள சூழல் தாக்கம் செலுத்துகின்றதோ, அதனையொத்த நிலைமையே மனிதனது வாழ்விலும் காணப்படும். சூழல் ஆரோக்கியமான வளமானதாக இருந்தால் அதை சார்ந்துள்ள மனிதனது வாழ்வும் அவனது நடத்தைகளும் ஆரோக்கியமானதாக அமையும். அதேபோல சூழல் மோசமானதாக, பஞ்சமா பாதகச் செயல்களை மலிவாகக் கொண்டதாக இருந்தால் அங்குள்ள மனிதனது நடத்தை வெளிப்பாடுகளும் பழக்கவழக்கங்களும் பிறழ்வானதாக அமையும் எவ்வித சந்தேகமும் கிடையாது.
உதாரணமாக, போதை விற்பனை மற்றும் பாவனையை உடைய ஒரு சூழலில் கொலை, கொள்ளை, கடத்தல், வன்முறைகள் என்பன மலிந்து காணப்படும். இதில் அங்கு வாழும் அனைத்து நபர்களும் சமூகமயப்படுத்தப்பட்டுக் காணப்படுவார்கள். இவர்களது நடத்தைகளானது அப்பகுதியில் ஒரு வழக்கமானதாக, சாதாரனமானதாகக காணப்படும்.
ஆனால், ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் இவ்வாறான நடத்தைகள் பிறழ்வானதாக அசாதாரனமானதாகவே கருதப்படும்.
4. உலகப்பற்று அல்லது உலக மோகம் (Worldliness/Materialism):
ஒரு மனிதன் இந்த உலகத்தில் அபரிமிதமான பற்றுவைத்துக் கொண்டு அளவுகடந்த ஆசைகளுடன் தனது வாழ்வை அமைத்துக் கொள்கின்றபோதும் அசாதாரன உளநடத்தைகள் ஏற்படுகின்றது.
மனிதனைப் பொறுத்தவரையில் இவ்வுலகத்தில் மண், பொன், பெண் ஆகிய பிரதானமான விடயங்களில் அளவுகடந்த ஆசைகளுடன் தனது வாழ்வியல் இலக்குகளை அமைத்துக் கொள்கின்றான். இவ்வாறான இலக்குகளை அடைவதற்காகவே அவனது வாழ்நாட்களைப் பயன்படுத்துகின்றான்.
இவ்வாறான இலக்குகளை அடைய முயற்சித்தும் முடியாமல் போகின்றபோதும், அவற்றை அடைந்தும் அனுபவிக்க முடியாமல் போகின்ற சமயத்திலும், அல்லது அவைகள் தன்னிடமிருந்து கைநழுவிச் செல்கின்ற போதும் மனிதனின் உளநலம் பாதிக்கப்பட்டு, விரக்தியுற்று அசாதாரன உளநடத்தைகளை அவன் வெளிப்படுத்துவான்.
5. ஆன்மீக வறுமை (Spiritual Poverty):
ஒரு மனிதனின் உளநலத்தையும் அதனூடாக அவனது நடத்தைகளில் சாதாரன நிலைமைகளையும் ஏற்படுத்துவதில் ஆன்மீகத்திற்கு அதிகளவான பங்குண்டு. இன்றை காலகட்டத்தில் அசாதாரன உளநடத்தைகளை உடையவர்களை உற்றுநோக்கும் போது அதிகளவானவர்கள் ஆன்மீகத்துடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
மனிதன் இறைவனின் பிரதிநிதியாகப் படைக்கப்பட்டுள்ளவன் என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் அவனது வாழ்வை ஒழுங்குபடுத்துவற்கும் அவனது நாளாந்த செயற்பாடுகளை சிறப்பாக வடிவமைத்துக் கொள்வதற்கும் இறைவன் வழங்கியுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் அவன் சாhந்துள்ள மார்க்கத்தின் போதனைகளை அதன் விழுமியங்களை ஏற்றுக்கொண்டு அதனை தனது நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்க முனைதல் வேண்டும்.
மனிதனது வாழ்வில் ஏற்படும் துயரமான, வேண்டத்தகாத, கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபடுவதற்கு ஆன்மீகத்துடனான உறவுகள் சிறப்பாக வழிகாட்டுகின்றது.
உதாரணமாக: முஸ்லிம் சமூகத்தில் இறைவனால் கடமையாக்கப்பட்டுள்ள ஐவேளைத் தொழுகையை கடைப்பிடிக்கின்றவர்களை விட, அதனைக் கடைப்பிடிக்காமல் அலட்சியம் செய்பவர்கள் அதிகளவு உளநலப்பாதிப்புக்கு உள்ளானவர்களாக காணப்படுவர்.
6. வறுமை (Poverty):
மனிதனது உள்ளத்தை பாதிப்பதிலும் அவனில் அசாதாரன நடத்தைகளை ஏற்படுத்துவதிலும் வறுமைக்கு பாரிய பங்குண்டு. ஒரு மனிதன் உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் நிறைவுகாண்பதன் மூலம்தான் அவனால் ஆரோக்கியமான மனநிலையுடன் கருமமாற்ற முடியும். மாறாக இவ்வாறான அடிப்படைத் தேவைகளில் நிறைவுகாணாத, குறைபாடுடைய மனிதனால் சாதாரன நடத்தையை வெளிப்படுத்தவே முடியாது.
ஒன்றில் அவன் தனது அடிப்படைத்தேவைகளில் ஏற்பட்டுள்ள வறுமையை எண்ணி எண்ணித் துன்புற்ற நிலையில், மனம் பாதிப்படைந்து வாழ்வான். அல்லது அவனது வறுமையைப் போக்குவதற்காக களவு, கொள்ளை முதலான தவறான, பிறழ்வான வழிமுறைகளில் முயற்சிக்க முனைவான்.
இங்கு இன்னுமொரு விடயத்தை சுட்டிக்காட்டமுடியும். அதாவது, தனது வாழ்விற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தாறாழமாக இருந்தும், அதில் நிறைவு காணாத, திருப்தியடையாத மனநிலையை உடையவர்களையும் இன்று சமூகத்தில் காணமுடியும். இவர்களும் மனதளவில் வறுமையானவர்கள்தான்.
அதேபோன்று பெறுகின்ற வருமானத்தில் தனது குடும்ப செலவினங்களை முகாமை செய்யத்தெரியாது, ஆடம்பர வாழ்வு வாழ்கின்ற நபர்கள் மற்றும் அதிகமான கடன் பளுவினை உடையவர்கள் அனைவரும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
இவ்வாறானவர்களிடம் மனச்சோர்வு, தாழ்வு மனப்பாங்கு, பதகளிப்பு போன்ற உளப்பிரச்சினைகள் காணப்படுவதுடன், தினமும் இவர்களில் இவர்களது நடத்தைகளில் உளக்குமுறல்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
7. நோய்கள் (Disease):
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் பிரதானமான இடத்தை வகிப்பது, அவன் நோய்களில்லாமல் வாழ்வதாகும். அந்தவகையில் ஒரு மனிதன் உடல், உளரீதியில் நோயற்றவனாக, ஆரோக்கியமானவனாக வாழ்வை அமைத்துக் கொள்ளல்வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் கணிப்பீட்டின் படி, ஒரு மனிதன் நோய்வாய்ப்படுவதற்கு சுமார் 98 வீதம் உள்ளம் பாதிப்படைவது பங்களிக்கின்றது எனவும் சுமார் 2 வீதம் உடல் பாதிக்கப்படுவது பங்களிக்கின்றது எனவும் சுட்டிக்காட்டுகின்றது எனலாம்.
அந்தவகையில், ஒரு மனிதனின் உடல், உள ஆரோக்கியமானது அவனது நடத்தையில் செல்வாக்குச் செலுத்துகின்றது. அதேபோன்று அவனது உடல் அல்லது உள்ளம் ஆரோக்கியமின்மையானது அவனது நடத்தையில் பிறழ்வுநிலையை தோற்றுவிக்கின்றது எனலாம்.
குறிப்பாக, ஒரு மனிதனில் ஏற்படும் நாற்பட்ட நோய்கள், தொற்றா நோய்கள், விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் உடல் பாதிப்புக்கள், அங்கவீனங்கள் என்பன ஒரு மனிதனின் உள்ளத்தை பாதிப்பதன் ஊடாக அவனில் அசாதாரன நடத்தையைத் தோற்றுவிக்கும் எனலாம்.
8. முதுமை (Senility):
இன்று பொதுவாக மனிதனில் 60 வயதெல்லையைத் தாண்டியவர்கள் அனைவரையும் முதியோர்கள் என்ற வட்டத்திற்குள் வரையறுகின்றனர். “ஒவரின் உடலில் உள்ள கலங்களிலும் தொகுதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, அவரது தொழிற்பாடுகளில் (உடல், மூளை சம்பந்தப்பட்ட) ஒரு படிப்படியான தேய்வு ஏற்படுகின்ற நிலையே முதுமை” என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. (தமிழர் சமுதாயத்தில் உளநலம், பக்:191)
மனிதனின் வயது செல்லச் செல்ல அவனது உடலானது பல்வேறு வழிகளிலும் தளர்வடைவது இயல்பாகும். அவனது உடல்பாகங்கள் மற்றும் அவனது ஐம்பொறிகள் என்பன பலவீனமான நிலையை அடைகின்றது. இதன்போது, முதியவர்கள் தங்களது வழமையான செயற்பாடுகளிலிருந்து சற்று சோர்வடைந்த நிலையினை அடைவார்கள். இவ்வாறானவர்கள் நோய்த்தாக்கத்திற்கு இலகுவாக ஆட்படக்கூடியவர்களாகவும் காணப்படுவர்.
அதேபோன்று, உளரீதியிலும் முதியோர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள். குறிப்பாக, மிதமான உளப் பிரச்சினைகளான, பதகளிப்பு, மனச்சோர்வு, மெய்ப்பாட்டுநோய், வெறும் கூட்டு நிலை (நுஅpவல நேளவ ளுலனெசழஅந), இறப்பு பற்றிய அச்சம் மற்றும் பீதி நிலை என்பனவும்,
மாறாட்டம் (Confusion) எனும் ஒருவர் தன்னைப்பற்றியும் தான் வாழும் சூழலைப்பற்றியும் தெளிவில்லாமல் இருக்கின்ற நிலைமையும், சந்தேக உளமாய நோய் (Paranoid Psychosis), அறளை பெயர்தல் (Dementia) எனும் மூளையின் கலங்கள் படிப்படியாக இறந்தழிந்து போவதனால் உருவாகின்றது. இதனால், ஞாபக மறதி, மாறாட்டம், குழப்பமான பேச்சு, உணர்ச்சிக் குழப்பங்கள், தற்கவனக் குறைவு என்பன உருவாகும் அறிகுறிகளாகும். போன்ற பாரிய உளப்பிரச்சினை உளப் பிரச்சினைகளும் தோன்றும்.
இவ்வாறாக முதுமையில் ஏறப்டும் உடல், உள ரீதியலான பிரச்சினைகளானது ஒரு மனிதனில் அசாதாரன உளநடத்தைகளைத் தோற்றுவிக்கும்.
9. ஊடகங்கள் (Media):
இன்றைய நிலையில் உலக ஒழுங்கையும் மனிதனது வாழ்வியல் போக்கினையும் தீர்மானிப்பதில் அல்லது வடிவமைப்பதில் ஊடகங்களின் சக்தி அளவிடமுடியாதது. இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் என்ற அடிப்படையில் ஊடகங்கள் இன்று மனித வாழ்வில் இரண்டரக் கலந்து செயற்படுபவையாக உள்ளன.
ஊடகங்கள் மூலமாக மனிதனில் ஏற்படுத்தப்படும் சிந்தனை ரீதியிலான மற்றும் கருத்தியல் ரீதியலான மாற்றங்கள் அபரிமிதமானவைகளாகக் காணப்படுகின்றன. இந்த மாற்றங்கள் நேரானதாகவும் மறையானதாகவும் அமைகின்றன.
ஊடகங்கள் வாயிலாக பரப்புரை செய்யப்படும் மிக மோசமான, வன்மமான, ஆபாசமான செய்திகளால் மனிதனது நடத்தைகள் பிறழ்வானதாக, கெட்டதாக, மிக மோசமானதாக இன்று அமைந்து காணப்படுவதனை நாம் பார்க்கமுடியும். இவ்விடயத்தில் இன்று மக்கள் மத்தியில் சமூக ஊடக்களான முகநூல், வட்ஸ்அப், றுவிட்டர், யுரியு+ப் போன்றவைகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையை காணமுடியும்.
உதாரணமாக:
1. ஒரு பிள்ளை இன்று கையடக்க ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகள் மூலமாக தினமும் அவதானிக்கின்ற வன்முறையான காட்டூன்கள் அப்பிள்ளையின் நடத்தையில் வன்முறையான தன்மையை ஏற்படுத்துகின்றது.
2. கண்டியில் அண்மையில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சில வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அனர்த்தங்களுக்கு முகநூல்வாயிலாக இனவாதரீதியலான பிரச்சாரங்கள் மேற்க்கொள்ளப்பட்டமையை எடுத்தக்காட்ட முடியும்.
எனவே, இன்று ஒரு மனிதனின் சிந்தனையில், மனப்பாங்கில் பிறழ்வான மாற்றங்களை ஏற்படுத்தி, அவனது நடத்தையில் மன அழுத்தம், கவலை, அச்சம், பீதி, பித்துநிலை போன்ற உளப் பிரச்சினைகளையும் கொலை, கொள்ளை, கர்ப்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம், தற்கொலை முயற்சி போன்ற அசாதாரன நடத்தை வெளிப்பாடுகளையும் உருவாக்குவதில் ஊடகங்களுக்கு நிகர் ஊடகங்கள் என்றே குறிப்பிடமுடியும்.
10. இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்கள்(Natural and Man Made Disaster)
உலகில் நாளாந்தம் அனர்த்தங்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் இடம்பெற்றுக்கொண்டே வருகின்றன. மண்சரிவு, சூறாவளி, சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கையான அனர்த்தங்களும், யுத்தம், வன்முறை போன்ற மனிதனால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளும் இன்று மனித நடத்தையை, அவனது நிம்மதியை சீர்குலைத்துள்ளதனைக் காணமுடியும்.
இவ்வாறான அனர்த்தங்களால் உருவாகும் அச்சுறுத்தலான நிலைமைகள், பாதிப்புக்கள், உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், இருப்பியல் பாதிப்புக்கள், இடப்பெயர்வுகள், துஷ்பிரயோகங்கள், அகதிவாழ்க்கைகள் என்பன ஒரு மனிதனின் உள்ளத்தை மிக மோசமாகப் பாதிப்பதைக் காணலாம்.
இவை அம்மனிதனில் அசாதாரன உளநடத்தையை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. குறிப்பாக, மன அழுத்தம், பதகளிப்பு, இழவிரக்கம், அனர்த்தத்திற்கு பிற்பட்ட மனவடு போன்ற அசாதாரன நடத்தைகளை ஏற்படுத்தும்.
எனவே, ஒரு மனிதனுடைய அசாதாரன உளநடத்தைக்கு பல்வேறுவிதமான காரணங்கள் இருப்பதனை அடுக்கடுக்காக விபரித்துக் கொண்டே செல்லமுடியும். இருந்தாலும், மேலே விபரிக்கப்பட்டுள்ள காரணங்கள் யாவும் தற்போது எமது பகுதிகளில் காணப்படுகின்ற முன்னுரிமை அடிப்படையிலானவைகளாகும் என்பதனை இங்கு சுட்டிக்காட்டமுடியும்.
உசாத்துணை:
- பேராசிரியர், முனைவர் சபா.ஜெயராசா (2008), “உளவியல் முகங்கள்”, சேமமடு புத்தகசாலை, கொழும்பு, பக்கம்: 58-64.
- சா. சிவயோகன், தயா சோமசுந்தரம் (2004), “தமிழர் சமுதாயத்தில் உளநலம்”இ சாந்திகம்- யாழ்ப்பாணம். பக்கம்: 191-203

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...
0 Comments