வாழ்வில் சமனிலை பேணி வாழ்வோம்

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15ம் திகதி தேசிய உளவளத்துணை தினம் (National Counseling Day) அரசாங்கத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இம்முறை இத்தினமானது “வேலைத்தளத்தில் உளநலம் (Mental Health in Work Place)” என்ற கருப்பொருளில் 15ம் திகதி விடுமுறை என்ற காரணத்தினால் 2017.10.16ம் திகதி களுத்துறையில் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. 

இந்த ஏற்பாடுகளை சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் கீழ் இயங்கும் உளவளத்துணைப் பிரிவானது முன்னின்று செயற்படுத்திவருகின்றது. அதுமாத்திரமன்றி, உளவளத்துணைப் பிரிவினுடைய அறிவுறுத்தலுக்கமைய இந்நாட்டிலுள்ள 25 மாவட்ட செயலகங்களிலும் 313 பிரதேச செயலகங்களிலும் இதனையொட்டிய நிகழ்வுகள் உளவளத்துணை உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்டும் வருகின்றன.

அந்தவகையில், இந்நிகழ்வின் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்ற மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாக அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் தங்களது வாழ்வில் எப்படி சமனிலை பேணி வாழ வேண்டும் என்பது தொடர்பில் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.

அந்தடிப்படையில், தேசிய உளவளத்துணை தினமாகிய இன்றைய தினத்தில் வாழ்வில் சமனிலை பேணி வாழ்வது எப்படி என்பது தொடர்பாக சில வழிகாட்டல்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்காகவுள்ளது.

தற்கால உலகியல் போக்கில் ஒரு மனிதன் தனது வாழ்வில் சமனிலை பேணி வாழ்வதென்பது மிகவும் சவாலான ஒரு காரியமாகவே காணப்படுகின்றது. அந்தளவு மனிதன் ஒரு மாயையான வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கின்றானா என எண்ணவேண்டியுள்ளது.

உண்மையில் ஒரு மனிதன் தனது வாழ்வில் சமனிலை பேணி வாழும் போதுதான் இவ்வுலகில் ஓரளவு தனது வாழ்வியல் இலக்குகளை அடைந்து கொண்டு வெற்றிபெற முடியும். வாழ்வில் சமனிலை பேணப்படாமல் அவன் வாழ்வானாக இருந்தால், அவன் மன அமைதியை இழந்தவனாகவும் பல்வேறு குழப்பங்களுக்குள்ளும் பிரச்சினைகளுக்கும் மாட்டிக் கொண்டவனாகவும் உடல் உளம் சார்ந்த நோய்களுக்கு முகங் கொடுத்தும் வாழ வேண்டிய துயரமான நிலைமை ஏற்படும்.

இந்த உலகில் வழிகாட்ட வந்த இறை வேதங்களும் இறை தூதர்களும் மனிதன் தனது வாழ்வை எப்படி சமனிலை பேணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இறைவனால் வழிகாட்டவே வந்தனவாகும்.

அந்தவகையில் ஒரு மனிதன் தனது வாழ்வில் பின்வரும் விடயங்களில் சமனிலை பேணி வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.

1. தனிப்பட்ட வாழ்வில் சமனிலை பேணல்:

ஒரு மனிதன் வாழ்வில் சமனிலை பேணுகின்ற விடயத்தில், அவன் முதலாவது கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான ஒரு கட்டம்தான் அவனது தனிப்பட்ட வாழ்வில் அவன் முதலில் சமனிலை பேணி வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.

முதலில், தனது வளர்ச்சி, விருத்தி பற்றி சரியாகப் புரிந்து கொள்ளல் வேண்டும். அத்துடன், ஒரு மனிதன் தனது பலம், பலவீனம் பற்றிய ஒரு சுய மதிப்பீடு ஒன்றினை யதார்த்தபூர்வமாக செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தனது கொள்ளளவு  (Capacity) பற்றிய சரியான அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். 

இதன் பின்னணியில் அவன் அவனைப் பற்றிய சுயகணிப்பீட்டினை(Self Esteem) சரியாக வகுத்துக் கொள்ளல் வேண்டும். அதில் அவனை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன்னைப்பற்றிய கணிப்பீட்டினை கூட்டியோ அல்லது குறைத்தோ ஒரு போதும் வைத்துக் கொள்ளக்கூடாது. முதலில் தன்னைப் பற்றிய சரியான புரிதல் இருந்தால்தான் அவனது வாழ்வில் அவன் சமனிலை பேணிக் கொள்ள முடியும்.

அடுத்து, அவனது படைப்பின் நோக்கம், தனது வாழ்வின் நோக்கு, இலக்கு, அவனது வாழ்வு மற்றும் அதன் முடிவு பற்றிய யதார்த்தம் பற்றிய தெளிவான புரிதலினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

இந்தத் தொடரில், ஒரு மனிதன் தனது அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு என்பனவற்றை வேண்டியளவு வளர்த்துக் கொள்ளல் வேண்டும். அறிவைப் பொறுத்தவரையில், இவ்வுலகில் நல்லது, கெட்டது என்ற இரு விதமான அறிவுகளே உள்ளன. இதில் தனது வாழ்விற்கு வேண்டிய போதுமான நல்ல சரியான அறிவினை தனது வாழ்வின் முடிவு வரைக்;கும் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோன்று ஒரு மனிதன் இவ்வுலகில் வாழும் போது அவன் பல திறன்களை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். இது பற்றி இன்று உலக சுகாதார ஸ்தாபனம் (றுHழு) சில முக்கியமான திறன்களை ஒரு மனிதன் தன்னில் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்கான சில வரையறைகளை முன்வைத்துள்ளது.

தீர்மானமெடுக்கும் திறன்  (Decision Making Skill) பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் (Problem Solving Skill), புத்தாக்கத்துடன் சிந்திக்கும் திறன் (Creative thinking Skill), தீவிரமாக சிந்திக்கும் திறன் (Critical thinking Skill), வினைத்திறனாக தொடர்பாடும் திறன் (Effective Communication Skill), ஆளிடைத் தொடர்புக்கான திறன் (Interpersonal relationship Skill) , சுயவிழிப்புத் திறன் (Self-awareness Skill), ஒத்துணர் திறன் (Empathy Skill), மனவெழுச்சிகளைக் கையாழும் திறன் (Coping with Emtions Skill), மன அழுத்தத்தைக் கையாழும் திறன் (Coping with Stress Skill) போன்ற 10 முக்கிய திறன்களை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். 

அதேபோன்று, ஒரு மனிதன் சிறந்த மனப்பாங்குகளை தன்னில் வளர்த்துக் கொள்ளல் வேண்டும். குறிப்பாக பிறரைப்பற்றிய நேர்மனப்பதிவு, பிறருக்கு உதவுதல் போன்ற நல்ல மனப்பாங்குகளை விருத்தி செய்து கொள்ளல் வேண்டும். மாறாக பொறாமை, வஞ்சகம், சந்தேகம், குரோதம், பொய் பேசுதல், ஏமாற்றுதல், வாக்குமாறுதல் போன்ற மனப்பாங்குகளை விட்டும் தன்னைத் திருத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.

அதேபோன்று ஒரு மனிதன் தனது வாழ்வில் சமனிலை பேண வேண்டுமாயின் உடல், உள்ளம், ஆன்மீகம், சமூகப்பொருத்தப்பாடு என்பனவற்றை வளர்த்துக் கொள்வதில் ஈடுபாடு காட்டுதல் வேண்டும்.

உடலை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளல் வேண்டும். உடலுக்குத் தேவையான போஷாக்கான உணவுகளை வழங்குவதுடன், நாளாந்தம் உடல் பயிற்சிகளிலும் ஈடுபடல் வேண்டும். அத்தோடு, திருப்திகரமான தூக்கம் மற்றும் ஓய்வு என்பன வற்றை நாளாந்தம் எடுத்துக்கொள்ளல் வேண்டும். குறிப்பாக உடலை நோய்கள், ஆபத்துக்கள் மற்றும் விபத்துக்களிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

மேலும் ஒரு மனிதன் தனது வாழ்வில் சமனிலை பேணுவதில் அதிகளவான செல்வாக்கினை செலுத்துவது அவனது உள்ளமாகும். அந்த உள்ளத்தை அமைதியாகவும் சீராகவும் வைத்துக் கொள்வதில் எல்லோரும் தவறிழைக்கின்றார்கள். அவ்வாறான தவறினை விட்டும் மீண்டு எந்தளவு உடலை திருப்திகரமாக வைத்துக்கொள்வதில் ஈடுபாடு காட்டப்படுகின்றதோ அதனை விடவும் பல மடங்கு உள்ளத்தை அமைதியாக வைத்துக் கொள்வதில் ஈடுபாடு காட்டுதல் வேண்டும். உள்ளம் அமைதியிழந்த எவராலும் தனது வாழ்வில் சமனிலை பேண முடியாது. 

அத்துடன் உள்ளத்திற்கு நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இன்று உலகிலுள்ள மொத்த சனத்தொகையில் சுமார் 25 வீதமானவர்கள் உள நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையிலுள்ள மக்களும் இதில் விதிவிலக்கல்ல. சுகாதார அமைச்சின் அறிக்கையின் படி, இலங்கையிலுள்ள அரச பணியாளர்களில் 5பேரில் ஒருவர் உள நோய்க்கு ஆட்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு தன உணர்வுகளை மனவெழுச்சிகளை கையாழ்கின்ற விடயத்திலும் சமனிலை பேணிக் கொள்ளல் வேண்டும். கோபம், துக்கம், கவலை போன்ற மறையான மனவெழுச்சிகளானாலும் சரி மகிழ்ச்சி போன்ற நேரான மனவெழுச்சிகளானாலும் சரி அதனை கையாழ்கின்ற விடயத்தில் எல்லை தாண்டக் கூடாது.

அடுத்ததாக ஒரு மனிதன் சமூகப் பொருத்தப்பாட்டுடன் வாழ்தல் வேண்டும். அந்தடிப்படையில், ஒரு மனிதன் சமூகத்தின் நல்ல விழுமியங்கள் பண்பாடுகளுடன் கட்டுப்பாடுகள் வரையறைகள் என்பவற்றுடன் இணங்கி நடப்பதுடன், சமூகம் அவனை ஏற்றுக் கொள்ளும்படியும் தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

உடல், உள்ளம் மற்றும் ஆன்மீகம் போன்ற முக்கிய விடயங்களில் ஒரு மனிதன் பரிபூரணமாக தனது வாழ்வினை அமைத்துக் கொண்டாலும் சமூகம் பொருத்தப்பாடு என்ற விடயத்தில் ஒருவன் சமூகத்துடன் இணங்கி வாழவோ சமூகம் ஏற்றுக்கொள்கின்ற அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொள்ளவோ இல்லை என்றால் அவனால் தனது வாழ்வில் சமனிலை பேணமுடியாது.

2. குடும்ப வாழ்வில் சமனிலை பேணல்:

ஒரு மனிதன் தனது தனிப்பட்ட வாழ்வில் எவ்வாறு சமனிலை பேணி வாழ்வது முக்கியமானதோ, அதேபோன்று தான் குடும்ப வாழ்வில் இணைந்து கொண்டதும் அந்தக் குடும்பத்தை சமனிலை பேணி வழிநடாத்தல் வேண்டும். ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் பிரதானமான பங்களிப்பினை செலுத்துகின்ற அடிப்படையான அலகாகக் கருதப்படும் குடும்பத்தில் சமனிலை பேணப்படல் வேண்டும். 

குடும்பம் என்கின்ற போது, கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கிடையிலான உறவுகளைப் பேணுதல், வீட்டின் அகம் மற்றும் புறச் சூழல் முகாமைத்துவம், வரவு செலவு முகாமைத்துவம், வளங்களை முகாமைத்துவம் செய்தல், முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்தல் என்பவற்றில் குடும்ப அங்கத்தவர்கள் குழுவாக செயற்பட்டு, பேணுதலாகவும் பக்குவமாகவும் அறிவு பூர்வமாகவும் செயற்படும் போது அவனால் குடும்ப வாழ்வில் சமனிலை பேண முடியும்.

கணவன் மனைவி உறவானது அன்பினை அடிப்படையாகக் கொண்டதாக அமைக்கப்படுவதுடன், சிறந்த தொடர்பாடல், புரிந்துணர்வு மற்றும் விட்டுக்கொடுப்பு என்பனவற்றையும் கொண்டதாக கணவன் மனைவி உறவு காணப்படல் வேண்டும். குறிப்பாக தாம்பத்திய உறவில் கணவன் மனைவிக்கு இடையில் திருப்திகரமான உறவு இருத்தல் வேண்டும். 

அத்துடன் கணவன் மனைவி ஆகியோரிடத்தில் ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகள், விரும்பங்கள் விருப்பமின்மைகள் என்பனபற்றி இருவருக்குமிடையில் தெளிவாக புரிந்து கொள்ளப்படல் வேண்டும். மேலும் கணவன் மனைவிக்கிடையில் ஒவ்வொருவரினதும்பாலுள்ள கடமைகள் உரிமைகள் கருத்திற் கொள்ளப்பட்டு குடும்ப வாழ்வு முன்னெடுக்கப்படல் வேண்டும்.

அதேபோன்று, பெற்றோர் பிள்ளை உறவு விடயத்தில் தவறுகள் விடப்படக்கூடாது. அதாவது, பிள்ளை வளர்ப்பு விடயத்தில் பிள்ளையின் வளர்ச்சி மற்றும் விருத்தி என்பன கவனத்தில் கொள்ளப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்படுவதுடன், பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்திலும் பிள்ளைகள் பெற்றோர் விடயத்திலும் உள்ள உரிமைகள் கடமைகள் என்பவற்றை விளங்கி செயற்படல் வேண்டும். மேலும் பிள்ளைகள் உடல், உள்ளம் மற்றும் மனவெழுச்சிகள் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதை விட்டும் பாதுகாத்தல் வேண்டும். 

எனவே குடும்பத்தின் சமனிலையை இல்லாமலாக்குவதில்; கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் சமனான வகிபங்கைச் செலுத்துகின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

குடும்ப சமனிலையை பேணுவதில் இல்லத்திற்கு கணிசமான பங்குண்டு. அந்தவகையில் இல்லத்தின் அகப் புறச் சூழல்கள் சரியாக முகாமை செய்யப்படல் வேண்டும். வீட்டுச் சூழல் சுத்தமாகவும் ஒழுங்காகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ள குடும்பங்களில் ஒரு ஆத்மார்;த்தமான அமைதியும் சந்தோசமும் நிலவும். இதில் குடும்ப அங்கத்தவர்கள் ஒருமித்த கருத்துடன் செயற்படல் வேண்டும்.

அதேபோன்று, ஒரு குடும்பத்தின் சமனிலையான போக்கில் செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணிகளில் முக்கியமானது அக்குடும்பத்தின் நிதி முகாமைத்துவமாகும். நிதி முகாமைத்துவம் எனும்போது, வரவு, செலவு மற்றும் சேமிப்பு என்பன முறையாகப் பேணப்படுவதைக் குறிக்கும். 

குடும்பத்திற்கான வருமானத்திலிருந்து குடும்ப செலவினங்கள் போக எஞ்சியுள்ளவற்றை எதிர்காலத் தேவைக்காக சேமிக்கின்ற குடும்பங்களில் குழப்பம் முரண்பாடுகள் குறைந்து ஒரு சமனிலையான இயக்கம் காணப்படும். அதேநேரம் இவ்வாறான குடும்பங்களில் சந்தோசமும் நம்பிக்கையும் தாராழமாகக் காணப்படும். 

ஆனால், குடும்பத்தின் நிதி முகாமைத்துவத்தை முறையாகக் கடைப்பிடிக்காது ஆடம்பரத்தில் மூழ்கி வீண்விரயங்களிலும் களியாட்டங்களிலும் மூழ்கியுள்ள குடும்பங்களில் சமனிலையான போக்கு ஒரு போதும் நிலவாது.

மேலும், ஒரு குடும்பத்தின் செலவினமானது அக்குடும்பத்தின் வருமானத்தை விஞ்சியதாகக் காணப்படுமிடத்து, அவ்வாறான குடும்பங்களில் பல பிரச்சினைகளுக்கும் வாழ்கைச் சுமைகளுக்கும் முகங்கொடுத்து, அக்குடும்பத்தின் நிம்மதியை அதன் சந்தோசத்தைக் கெடுக்கும் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை. 

அடுத்து குடும்பத்தின் சமனிலையை பேணுகின்ற விடயத்தில் தாக்கம் செலுத்துகின்ற காரணிகளுள் வள முகாமைத்துவமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்தவகையில், மனித வளம், பௌதீக வளம் மற்றும் நேர வளம் என்பனவற்றை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். 

மனிதவளம் எனும்போது அக்குடும்பத்திலுள்ள கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளைக் குறிக்கும். இதுபற்றி மேலே விபரிக்கப்பட்டுள்ளது. பௌதீக வளத்தைப் பொறுத்தமட்டில் ஒரு குடும்பத்தின் இருப்பிற்கு அதன் வாழ்விற்கும் தேவையான அனைத்து சாதனங்களையும் குறிக்கும். இந்த விடயத்தில் அவ்வாறான வளங்களை முறையாக நிருவகிப்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும். 

அதேபோன்று நேரம் என்கின்ற பாரிய வளத்தை ஒரு குடும்பம் திட்டமிட்டு விரயம் செய்யாமல் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். அத்தோடு இதில் சமனிலையையும் பேணிக்கொள்ளல் வேண்டும்.

அடுத்து, ஒரு குடும்பத்தில் பல முரண்பாடுகளும் பிரச்சினைகளும் அவ்வப்போது குடும்ப அங்கத்தவர்களுக்கிடையில் தோன்றலாம். ஆனால் அக்குறிப்பிட்ட குடும்ப அங்கத்தவர்கள் பிரச்சினைகளையும் முரண்பாடுகளை முiறாகப் பகுப்பாய்வு செய்து தீர்த்துக் கொள்ளல் வேண்டும். அப்படி தீர்க்கவில்லை என்றால் அந்தப் பிரச்சினைகள் குடும்பத்தின் சமனிலையான போக்கில் பாதிப்பையும் தளம்பல்களையும் ஏற்படுத்தும்.

3. தொழில் செய்யுமிடத்தில் சமனிலை பேணல்:

ஒரு மனிதன் தனது வாழ்விற்கு தேவையான வருமானங்களைத் தேடிக் கொள்வதற்காக ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது. சுயதொழில், தனியார் துறை மற்றும் அரச துறை என்றடிப்படையில் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு தொழில் செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறு எந்த மட்டத்தில் ஒரு மனிதன் தொழில் செய்தாலும் அங்கு சமனிலை பேண வேண்டியுள்ளது. 

எந்தவொரு தொழில் தளத்தை எடுத்துக் கொண்டாலும், அங்கு ஒரு நிறுவன ரீதியான தொழில் இலக்கை அடைய வேண்டியிருக்கும். அத்துடன், அங்குள்ள வளங்கள் மற்றும் அதன் பிரயோகம் என்பனவற்றில் உற்பத்தி திறனுடன் நடத்தல்,  உயரதிகாரிகளுக்கு கட்டுப்படல், சக பணியாளர்களுடன் சினேகபூர்வ உறவை ஏற்படுத்தல் மற்றும் ஆளிடைத் தொடர்பினைப் பேணுதல், சேவை நாடிகள், தேவையுடையோர்கள் அல்லது நுகர்வோர்களின் எதிர்பார்ப்புக்களை அவர்களது மனநிலை அறிந்து உதவுதல், நிறுவனத்தின் நிருவாக நிதி பிரமானங்களை பேணி நடத்தல், ஒழுக்கம் பேணல் போன்ற அம்சங்களில் தொழிலாளர்கள் அல்லது உத்தியோகத்தர்கள் சமனிலை பேணி நடத்தல் வேண்டும்.

அதேபோன்று, ஒரு கடினமான வேலையில் அல்லது வேலைத்தளத்தில் தொழில் செய்வோர்கள், இறுக்கமான தலைமை அதிகாரிகளின் கீழ் வேலை செய்வோர்கள், புதிய வேலைச் சூழலில் தொழில் புரிபவர்கள், தனது இயலுமைக்கு அப்பால் பதவியை அல்லது பதவியுயர்வைப் பெற்றவர்கள் மற்றும் வேலைப்பளு உடையவர்கள் போன்றோர்கள் வேலைத்தளத்தில் உள நெருக்கீட்டிற்கும்  மனச்சோர்விற்கும் ஆட்பட்டு அச்சம் மற்றும் பதட்டம் போன்ற பதகளிப்புசார் உளப்பிரச்சினைகளுக்கும் உள்ளாகுவர். 

இவ்வாறானவர்கள் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதில்  அவர்களது தனிப்பட்ட மற்றும் குடும்ப இயலுமைகள் தாக்கம் செலுத்துவதுடன், அவர்களது சிறந்த ஆளிடைத்தொடர்புகளும் பாரிய தாக்கத்தைச் செலுத்தும். அதேபோன்று, வேலைத்தளத்தில் பிரச்சினைகளுக்கும் குழப்பங்களுக்கும் உட்படும் ஒரு தொழிலாளரின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் குடும்ப வாழ்வு ஆகிய மட்டங்களில் சமனிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அடுத்து, வேலைத்தளத்தில் சமனிலை பேணுவதை கெடுக்கின்ற காரணிகளாக ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகளில் தவறிழைப்பதும் முக்கியமானதாகும். அந்தவகையில், வேலைத்தளத்தில் போதை பாவித்தல், அதிகாரிகளுடன் முரண்படுதல், ஒழுங்கு விதிகளையும் பிரமானங்களையும் மீறிச் செயற்படல், பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபடல், இலஞ்சம் ஊழலில் ஈடுபடல், குறித்த நேரத்திற்குள் குறித்த வேலையை முடிக்காமல் காலம் தாழ்த்துதல் போன்ற விவகாரங்கள் தொழிலாளர்களின் மன நிம்மதியைக் கெடுத்து அவர்களில் குற்றவுணர்வை ஏற்படுத்தி, வேலைத்தளத்திலும் சமனிலையை இல்லாமலாக்கும்.

மேலும், ஒரு தொழிலாளி தனது தொழில் நடவடிக்கைகள் பற்றி தனக்குள் ஒரு சுயமதிப்பீட்டினை மேற்கொள்வதுடன், தனது அடைவுகள் தனக்கு திருப்திகரமாக இருந்தால் தன்னைத்தானே தனக்குள் பாராட்டிக் கொள்ளல் வேண்டும். அதேபோன்று தனது அடைவுகள் திருப்திகரமானதாக இல்லை எனில், அதற்கான காரணங்களை சுயமதிப்பீட்டின் மூலமாகக் கண்டறிந்து பரிகாரம் காணத்தவரக் கூடாது.

இதன்காரணமாகத்தான் இவ்வருடம் அரசாங்கமானது வழமை போன்று சமூக சேவை அமைச்சின் உளவளத்துணைப் பிரிவினூடாக ஒக்டோபர் 16ம் திகதி ஏற்பாடு செய்திருக்கும் தேசிய உளவளத்துணை தினத்தின் (யேவழையெட ஊழரளெநடiபெ னுயல) கருப்பொருளாக  “வேலைத்தளத்தில் உளநலம் (ஆநவெயட Hநயடவா in றுழசம Pடயஉந)” என்ற மகுட வாசகத்தைப் பிரகடனப்படுத்தி நாடாளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

4. சமூக வாழ்வில் சமனிலை பேணல்:

ஒரு மனிதன் எப்படி தன்னில், தனது குடும்பத்தில், தனது வேலைத்தளத்தில் சமனிலை பேணி வாழ்கின்றானோ, அதற்காக தனது வாழ்நாள் நேரங்களை ஒதுக்கி அர்ப்பணிக்கின்றானோ, அவ்வாறே சமூக வாழ்விலும் சமனிலை பேணி வாழ வேண்டும். அதற்காக தனது வாழ்நாள் நேரங்களை ஒதுக்கி அர்ப்பணிக்க வேண்டும்.

ஒரு சமூகத்தில் மனித நலன் காப்பதற்காக வேண்டி நல்லவைகள் வாழ்வதற்காகவும் தீய்யவைகளை இல்லாமல் செய்வதற்காகவும் உழைப்பதும், சமூகத்தின் அபிவிருத்தியில் பங்கெடுத்தலும், சமூக விழுமியங்களை மதித்து நடத்தலும், மாணிடப் பண்புகளுடன் வாழ்வதும் ஒரு மனிதனுக்குரிய மிக முக்கியமான பணியாகும்.

தான் தன்னுடைய நலன் என்பதில் மாத்திரம் ஒரு மனிதன் குறியாக இருக்க முடியாது. சமூகம் சமனிலையுடன் வாழும் போதுதான் ஒரு மனிதனால் நிம்மதியாக சமனிலையாக வாழ முடியும் என்ற அடிப்படை விதியினைப் புரிந்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும்.

இனவாதம், வர்க்க பேதம், மொழிவாதம், மதவாதம், பிரதேச வாதம் போன்ற வாதங்களை முன்னெடுத்து சமூகத்தில் குழப்பங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துபவர்களால் ஒரு பொழுதும் சமூக வாழ்வில் சமனிலை பேண முடியாது. மனிதன் என்ற ஒரு விடயத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு, அவனது நலன் காப்பதற்காக நேரமொதுக்கி ஈடுபாடு காட்டுவது ஒவ்வொரு மனிதனினதும் பொறுப்பாகும்.

அதேபோன்று, சமூகத்தில் சமனிலை பேணி வாழ்தல் என்ற பரப்பில் மிக முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பகுதிதான், இயற்கையின் சமனிலையில் பாதிப்பை ஏற்படுத்தாமலும் குழப்பங்களை விளைவிக்காமலும் ஒரு மனிதன் தனது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.  மாறாக இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஒரு மனிதன் அதிக அக்கரை செலுத்துதல் வேண்டும். 

இயற்கையில் குழப்பங்கள் தோன்றுமானால் அதன் சமனிலை குழம்பி சுனாமி, மண் சரிவு, வெள்ளம், வறட்சி, பூகம்பம் என்பன ஏற்பட்டு மனிதன் தனது நிம்மதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.  

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...

0 Comments