உளவளத்துணை (Counselling)

அறிமுகம்

மனிதன் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகிய அம்சங்களைக் கொண்டு இறைவனால் படைக்கப்பட்டுள்ள மிகவும் மேலான படைப்பாகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

இவ்வாறான மனிதன் கருவறையிலிருந்து கல்லறைக்குச் செல்லும் வரையில், நாளாந்தம் தனியாகவும் குடும்பமாகவும் குழுவாகவும் இவ்வுலகில் வாழும்போது பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் கஸ்டங்களுக்கும் மனச்சிக்கல்களுக்கும் பழிவாங்கல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அனர்த்தங்களுக்கும்  உள்ளாவதை தவிர்க்க முடியாது.


இவ்வாறான நிலைமைகளின் போது மனிதர்களில் சிலர் இறைவன் வழங்கிய அறிவு, உளவலிமை, மற்றும் ஆற்றல்கள் என்பவற்றின் காரணமாக அவற்றை எதிர்கொண்டு முகங்கொடுத்து அவற்றை இயல்பாக வெற்றி கண்டு தனது வாழ்வை தொடர்ந்து முன்னெடுத்து செல்கின்றனர். 

ஆனால், பெரும்பாலான மனிதர்கள் இதற்கு முகங்கொடுத்து வாழ்வதில் தோல்வி கண்டு, உள நெருக்குதல் மற்றும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தீர்வுகளும் திட்டங்களும் தெரியாது அவற்றிலிருந்து, தானாகவே விடுபட முடியாது நாளாந்தம் தனது வாழ்வை கண்ணீரிலும் கவலையிலும் நிம்மதியிழந்து தொலைத்து வாழ்கின்ற அவல நிலைக்கு உள்ளாகி வாழ நேரிடுகின்றது.

இதனால், அம்மனிதனது தனிப்பட்ட, குடும்ப, தொழில் மற்றும் சமூக ரீதியான விவகாரங்களானது சிக்கலுக்குள்ளாகி உடைந்து போகின்றன. இதன்போது அம்மனிதனில் உடல் மற்றும் உள ரீதியாக பல்வேறு நேரெதிரான வெளிப்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கின்றது. தொடர்ந்து பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் பாரிய உளநோய்களுக்கும் ஆட்பட நேரிடுகின்றது. ஈற்றில், மீழ வழி தெரியாத அம்மனிதன் உள அமைதியை இழந்தவனாக வாழ்கின்றான்.

மேலும், இங்கு இன்னுமொரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். அதாவது, ஒரு மனிதன் தனது உடலுக்கு நோய் வருகின்ற போது அவற்றை குணப்படுத்துவதற்காக பல துறைசார் வைத்திய நிபுணர்களை அணுகி தீர்த்துக் கொள்ள முனைகின்றான். அதற்காக எந்தவித தயக்கமும் காட்டாது வெட்கப்படாது தனது நோயின் தன்மையை மனம் திறந்து வெளிப்படையாக பிறர் மத்தியில் தெரியப்படுத்துகின்றான்.

ஆனால், அதே மனிதன் தனக்குள்ளிருக்கின்ற இன்னுமொரு பகுதியான மிகப் பெறுமதிவாய்ந்த உள்ளத்தின் இயல்பு நிலையைக் கடந்து செயற்பட விளையும் போதும் அது எல்லை மீறி இயங்க முனையும்போதும், அதனால் தான் அடைகின்ற உள வருத்தத்தையும் உணர்வுப் பிறழ்வையும் துன்பத்தையும் தனக்குள்ளடக்கி, பிறருக்கு மறைத்து வாழ நினைக்கின்றான். ஏனெனில், இவ்வாறான மனிதனை அவனது குடும்பமும் அவனைச் சுற்றியுள்ள அயலவர்களும் சமூகமும் வேறு கண்கொண்டு பார்க்க முனைவதும் அவனை ஏற்றுக்கொள்ளாது ஒதுக்கி வாழ முனைவதுமே காரணம் எனலாம். அதுமாத்திரமன்றி, இவ்வாறானவர்களுக்கு பில்லி, சூனியம், செய்வினை என்பன பீடிருக்கின்றது என நினைத்து, வீட்டில் அவர்களை அடைத்துவைத்து அவர்களுக்கு மூட நம்பிக்கையின் வழியாக பல தவறான நடவடிக்கைகளை செய்து மேலும் மேலும் அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அதிகரித்துக் காணப்படுவதனையும் நாமறிவோம்.

இவ்வாறான நிலைமைகளை நாம் இனியும் அனுமதிக்காது, அவ்வாறான மனப்பாங்கிலிருந்து விடுபட முன்வரவேண்டும். அதற்காக, முதலில் இவ்வாறான நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு முறையாக உதவுவதற்கு வழியேற்படுத்த வேண்டும். இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்கே உளவளத்துணைச் சேவை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், ஒரு மனிதனுடைய உண்மையான சுகாதாரம் என்பது, அவனது உடல், உள்ளம், ஆன்மீக ஈடுபாடு மற்றும் சமூகப் பொருத்தப்பாடு என்பவற்றில் நிறைவை, பூரணத்துவத்தைக் கொண்டிருப்பதாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் (றுHழு) வரையறை செய்துள்ளது. இதில் குறிப்பாக ஒரு மனிதனின் உள்ளம் மிகவும் முக்கியமான பரந்துபட்ட தாக்கத்தினை ஒரு அவனது ஆரோக்கியத்தில் செலுத்துகின்றது.


உளவளத்துணைக்கான வரைவிலக்கணம் (Definition of the Counselling):

உளவளத்துணை என்பது உளவியலை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாண்மைமிக்க சமூக அபிவிருத்தித் துறையாகும். நாளாந்த வாழ்வில் மனிதன் முகங்கொடுக்கும் எதிர்பாராத விடயங்களினால் ஏற்படும் பல்வேறுபட்ட உளப்பிரச்சினைகளை முகங்கொடுக்க இயலுமான வகையில், மனித ஆளுமையினை விருத்தி செய்வதும், தளம்பல் நிலையிலான உளநிலையினை நடுநிலைப்படுத்தலும்; மற்றும் தேவையான போது உளச் சிகிச்சையினைப் பெற்றுக்கொடுப்பதும் பிரச்சினைகளை உளவியல் விஞ்ஞான ரீதியில் அணுகுகின்றதுமான முறைமையானது உளவளத்துணையாகும். குழப்பமான மனநிலையிலிருக்கும் ஒருவரை சாதாரன மன நிலைக்கு கொண்டு வருவதற்காக வழங்கப்படும் உதவி உளவளத்துணை எனப்படும்.

இதுபற்றி, 'கார்ல்றோஜஸ்' என்ற அறிஞர் குறிப்பிடும்போது, உளவளத்துணை என்பது ஒருவருக்கு அவரைப்பற்றிய தெளிவை ஏற்படுத்தி, அதற்கமைய அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக் கொள்வதற்கு வழங்கப்படும் உதவியாகும் எனக்குறிப்பிட்டார்.

ஒருவர் தனது உளவளங்களின் முழுமையான விருத்தியை நோக்கிச் செல்கின்ற பயணத்தில் தான் எதிர்கொள்ளும் தடைகளை வெற்றிகொள்ள அவருக்கு அளிக்கும் தொடர் செயற்பாட்டு உதவியே உளவளத்துணையாகும் என "அமெரிக்க உளநலச் சங்கம்" வரையறைசெய்கின்றது.


உளவளத்துணையின் அடிப்படை அம்சங்கள் (Fundamentals in the Counselling) :

'பி;ட்லர்' என்ற உளவளத்துணையாளரும் ஆள்மைய்யப்படுத்தப்பட்ட உளவளத்துணையின் தந்தையாகிய 'கார்ல்றோஜஸ்' என்பவரும் முன்வைக்கின்ற உளவளத்துணைக்குத் தேவையான அடிப்படைகள் மற்றும் எண்ணக்கருத்துக்கள் தொடர்பாக கூறியுள்ள விடயங்களின் அடிப்படையில் பின்வரும் அம்சங்களைக் குறிப்பிடமுடியும்.

உள ரீதியான பிரச்சனைகளுடன் வரும் துணைநாடியும் உளவளத்துணையாளரும் உளவியல் ரீதியாக தொழில்வாண்மை அடிப்படையிலான உறவுகளை ஏற்படுத்துதல்.

துணைநாடியின் உண்மையான பிரச்சினைகளை துணையாளர் செவிமடுத்து உள்வாங்கி, அதனுடன் உணர்வு ரீதியாக ஒத்துச்செல்லுதல். அதனை துணைநாடிக்கு முறையாகத் தொடர்பாடி உணர்த்துதல்.

துணைநாடியின் பிரச்சினைகளை தெளிவாகவும் சுதந்திரமாகவும் முன்வைப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்குதல். அதற்காக அவர் உளவியல் நுட்பங்களையும் முறைமைகளையும் கையாழ்தல்.

துணைநாடிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிக் கொடுத்தல்

துணைநாடிக்கு உளவளத்துணையாளர் நிபந்தனை விதிக்காதிருத்தல்.

துனைநாடியின் ஆளுமையை விருத்தி செய்து, அவரது பிரச்சினைகளை அவராகவே உணர்ந்து தீர்வுகாண உளவியல்சார்; அடிப்படையில் உதவுதல்.

உளவளத்துணைச் செயற்பாட்டின் படிமுறைகள்  (Steps in the Counselling Process):

உளவளத்துணை செயன்முறையானது நீண்டகாலம் அல்லது குறுகிய கால இடைவெளியினை எடுக்கக்கூடும். அது துணையாடியின் இயல்பினையும் பிரச்சினையின் பரிமானத்தினையும் உளவளத்துணையாளரின் வினைத்திறனையும் பொறுத்தே அமைகின்றது. இதில் உளவளத்துணை செயன்முறையின் போது பின்வரும் படிமுறைகள் பின்பற்றப்படுவது இச்செயன்முறையை வெற்றிகரமாக அமைப்பதற்கு உதவும்.

  1. வரவேற்றலும் தொடங்கலும்.
  2. அறிமுக உரையாடல்.
  3. உணர்வுகளைக் கையாளுதல். அத்தோடு உடல் மொழிகளையும் (Body Language) புரிந்து கொள்ளுதல் வேண்டும். இதன்போது உளவளத்துணையாளர் ஒத்துணர்வினைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
  4. பிரச்சினைகளை இனங்காணல், இதற்காக உளவளத்துணையாளர் காத்திரமான செவிமடுத்தலை உடையவராக இருத்தல் வேண்டும்.
  5. பிரச்சினைகளை தெளிவாக வரையறை செய்வதுடன், அதனை பகுப்பாய்யு செய்து அவற்றிற்;கு தீர்வுகளை இனங்காணுதல். இதற்காக துணைநாடியினை முறையாகவும் ஓழுங்காகவும் வழிப்படுத்துதல் வேண்டும். அத்தோடு, பகுப்பாய்வுக் கருவிகளை அல்லது முறைமைகளைப் பயன்படுத்தவும் வேண்டும்.
  6. இலக்கினை நிர்ணயித்தல்;. அதனையடைவதற்கான செயற்றிட்டங்களை வகுப்பதற்கும், அதன் வழிமுறைகளில் உடன்பாடுகாணவும் துணைநாடியினை ஆற்றுப்;படுத்தல்.
  7. வழிமுறைகளை அமுல்படுத்துதல்.
  8. பின்னுhட்டலை முறையாகக் கையாழ்தல். அந்தவகையில், செயன்முறையின் அடைவுகளையும் முன்னேற்றங்களையும் மதிப்பீடு செய்வதுடன், முடிவுறுத்தல் அல்லது சிபாரிசு செய்தல் என்ற நிலைக்கு துணைநாடியை வழிப்படுத்துதல் வேண்டும்.

உளவளத்துணை யாருக்காக? (Counselling to Whom?) :

"அனைவருக்கும் உளவளத்துணை"

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நீங்கள் அல்லது நீங்கள் பழகும் நண்பர் ஒருவருக்கு ஏதாவதொரு பிரச்சினை ஏற்பட்டு மனமுடைந்துபோய் இருப்பின், அதனால் நாளாந்த செயற்பாடுகளைச் செய்துகொள்ள முடியாமல் அவர் கஸ்டப்படுவாராயின் அவருக்கு உளவளத்துணையாளரின் உதவி தேவைப்படுகின்றது. இவ்வாறான உளவளத்துணை உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்கள் வருமாறு.

  • தனிப்பட்ட வகையில் ஒருவர் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானம் எடுக்க முடியாமலும் உள்ள எந்தவொரு சந்தர்ப்பத்திலும்.
  • குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு தடையாகவுள்ள பிணக்குகள், பிரச்சினைகள்.
  • குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள்.
  • கல்விசார் பிரச்சினைகள் மற்றும் தொழில்சார் பிரச்சினைகள்.
  • உள உபாதைகள்/கோளாறுகள்/நோய்கள்.
  • திடீர் அனர்த்தம்/அழிவின் போது கடுமையான மனம் உடைந்து போதல்/ஆன்மீக நெருக்கடிக்குள்ளான சந்தர்ப்பங்கள். உ-ம்: பரீட்சையில் தோல்வி, வியாபாரத்தில் நஸ்டம்.
  • காதல் தோல்வி மற்றும் பாலியல்சார் பிரச்சினைகள்.
  • ஏதாவதொரு பொருத்தப்பாடற்ற நடத்தை. உ-ம்: விலகல் நடத்தை.
  • ஏதாவதொன்றுக்கு அடிமையாகியுள்ள சந்தர்ப்பங்கள். உ-ம்: போதைப் பழக்கம்.

மேற்சொன்ன ஏதாவதொரு பிரச்சினையை அனுபவிக்க வேண்டிய உணர்வு நிலை ஏற்படின், இன்று உளவளத்துணையாளரின் உதவியை பெற்றுக்கொள்வதால் உங்களுடைய நாளை வாழ்கையை மிகச் சிறந்த வாழ்கையாக திட்டமிட்டுக்கொள்ள உதவியாக அமையும். அதுமட்டுமன்றி, எதிர்பார்க்கப்படும் பிரச்சினை அல்லது சிக்கல்களை தவிர்த்துக்கொள்ளவும் முடியும்.

மேலும், இச்சேவையானது மனநோயாளிகளுக்கும் உளப்பாதிப்புற்றோருக்கும் மாத்திரமல்ல. இத்துறையானது இன்று பலருக்கும் பல மட்டங்களில் தேவைப்படும் ஒன்றாக அனைவராலும் உணரப்படும் ஒன்றாகும். அத்தோடு இவ்வுளவளத்துணையானது, தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் குழுக்களுக்கும் வடிவமைக்கப்பட்டு உளவளத்துணையாளர்களால் வழங்கப்பட்டுவருகின்றது.

உளவளத்துணையின் பயன்பாடுகள் (Benefits of the Counselling) :

உளவளத்துணையின் மூலம் குறிப்பாக ஒவ்வொரு நாளும் வாழ்கையில் தோன்றும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு துணிவோடு முகங்கொடுத்து, வாழ்க்கையை மேலும் வெற்றிகரமானதாக ஆக்கிக் கொள்ளத் தேவையான சக்தியையும், தைரியத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி கீழ்வரும் பயன்பாடுகளைக் கூறமுடியும்.

  1. நாளாந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், தடைகளுக்கு பின்வாங்காது துணிவோடு முகங்கொடுப்பதற்குத் தேவையான சக்தியையும், தைரியத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
  2. எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பல்வேறு ஆபத்தான நிலமைகளை இனங்கண்டு அவற்றைத் தவிர்த்துக் கொள்வதற்கும், தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.
  3. உடல், உள நோய்கள் காரணமாக நீண்டகாலமாக காணப்படும் உள அழுத்தங்கள், உளச்சமநிலையின்மைக்கு காரணமாக அமைகின்றன. உளவளத்துணையின் மூலம் அவ்வாறான உள அழுத்தங்களையும், உளச்சமநிலைளின்மையையும் சமநிலைப்படுத்தி உள அமைதியை, உள ஆறுதலை பெற்றுக் கொள்ள முடியும்.
  4. தனது பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சுதந்திரமாக நம்பிக்கையான தொழில்வாண்மையான உளவளத்துணையாளர் ஒருவரோடு கதைப்பதற்கு வாய்ப்புக் கிடைப்பதனால், உள்ளத்தின் பாரம் குறைந்து உள்ளத்தை அமைதிப் படுத்திக் கொள்வதற்கான வாய்புக் கிடைக்கிறது.
  5. ஒருவருடைய எதிர்மறையான நிலையிலிருந்து நேரிடையான நிலைக்கும், அதிருப்தியான நிலையிலிருந்து திருப்தியான நிலைக்கும் அவரது தன்னம்பிக்கையின் மூலம் நகர்த்துவதற்கு உதவுகின்றது.
  6. ஒருவரிடத்தில் இருக்கின்ற ஆளுமைப் பிறழ்வையும் தப்பான எண்ணங்களையும் மூட நம்பிக்கைகளையும் அவராகவே இனங்கண்டு அவராகவே சீர்செய்வதற்கு அவரை ஆற்றுப்படுத்துகின்றது.
  7. உளவளத்துணையினுhடாக மனிதன் தனது துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டு, வெற்றிகரமான வாழ்விற்கு அவசியமான உதவி மற்றும் வழிகாட்டல்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

உசாத்துணை (References)

  1. பிஏசி. ஆனந்தராஜா (2006), "உளவளத்துணை திறன்கள்" வின்சு வெயியீடு, (பக்: 02-32).
  2. எம்.ஆர்.எல்.பெரேரா (2007), "உளவியல் உளவளத்துணை" உளவளத்துணைப் பிரிவு, சமூகசேவைகள் அமைச்சு, (பக்: 18-27).
  3. "நான், தமிழ் உளவியல் சஞ்சிகை" (2004), மலர்-29, இதழ்-02, யாழ்ப்பாணம், (பக்: 26-28).
  4. "நான், தமிழ் உளவியல் சஞ்சிகை" (2005), மலர்-30, இதழ்-02, யாழ்ப்பாணம், (பக்: 06-09).
  5. "நான், தமிழ் உளவியல் சஞ்சிகை" (2005), மலர்-30, இதழ்-06, யாழ்ப்பாணம், (பக்: 46).
  6. "உளவளத்துணைக் கையேடு" உளவளத்துணைப் பிரிவு, சமூக சேவைகள் அமைச்சு.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...

0 Comments