“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதியடைகின்றன”.
இவ்வுலகைப்படைத்து அதில் மனிதனை தன்னுடைய பிரதிநிதியாகப்படைத்து அவன் எவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக அருளப்பட்ட இவ்வுலகின் பொதுமறையான அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்ற மிக யதார்த்தமான ஒரு வாசகம்தான் “அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதியடைகின்றன”. என்பதாகும்.
உண்மையில் இவ்வுலகில் ஒரு பொருளைப்படைத்த படைப்பாளன் அப்பொருளை சந்தைக்கு விடுகின்ற சந்தர்ப்பத்தில், அப்பொருளின் பயன்பாடு தொடர்பாக முழுமையான வழிகாட்டல் கையேடு ஒன்றினை வெளியிடுவான். அதில், அப்பொருளின் உருவாக்கம், தன்மை, இயல்புகள், அதனைப் பயன்படுத்தும் முறை, அது பாதிப்படையும் சந்தர்ப்பங்கள், அதன் ஆயுட்காலம் என்பன போன்ற அம்சங்கள் அதில் உட்பொதிந்திருக்கும். அந்த வழிகாட்டலுக்கு அப்பால் அப்பொருளைக் கையாழ முடியாது. அப்படிக் கையாண்டால், ஒன்றில் அப்பொருள் பழுதடையலாம் அல்லது அதன் ஆயட்காலம் குறைவடைந்து அதன் இயக்கப்பாட்டில் ஸ்தம்பிதமான நிலைமை ஏற்ப்படலாம்.
அதேபோன்றுதான், இவ்வுலகைப்படைத்த இறைவன் தன்னுடைய பிரதிநிதியான மனிதனைப் பற்றி தனது திருமறையான அல்குர்ஆனில் பல விபரிப்புக்களை தத்ரூபமான முறையில் விளக்கமளிக்கின்றான். அவன் படைக்கப்பட்ட பின்னணி, மனிதனின் உருவாக்கம், தன்மை, அமைப்பு, இயல்புகள், அவனது நடத்தைகள் போன்ற பல விளக்கங்களை முன்வைக்கின்றான்.
இவ்வாறான மனிதன் உலகில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று ஒரு முழுமையான வழிகாட்டலையும் முன்வைக்கின்றான். இவ்வழிகாட்டலை மனிதன் பின்பற்றி நடப்பதால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் புறக்கணித்து நடப்பதால் ஏற்படும் விபரீதங்களையும் தெளிவுபடுத்துகின்றான்.
இவ்வாறான மனிதனை முழுமையாக இயக்குகின்ற உள்ளத்தை மனிதனில் படைத்த இறைவன், அந்த உள்ளம் இவ்வுலகில் அமைதியடைந்த நிலையில் செயல்பட வேண்டுமெனவும் விரும்புகின்றான். அவ்வாறான உள்ளமானது அமைதியடைய வேண்டுமானால் எந்த நிலையிலும் தன்னைப் பற்றிய நினைவுபடுத்தலுடன் மனிதன் வாழும்போது மாத்திரம்தான் அந்த அமைதியை அடைந்துகொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை முன்வைக்கின்றான்.
இதுபற்றி அவனது திருத்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறும்போது, ஒரு மனிதனில் ஒரு சதைத்துண்டுள்ளது. அது சீரானதாக அமைந்தால் உடல் முழுவதும் சீரானதாக அமையும்.அது சீர்கெட்டால், உடல் முழுவதும் சீர்கெட்டதாக அமையும் எனக்குறிப்பிட்டதுடன், அந்த சதைதான் ‘உள்ளம்’ என சுட்டிக்காட்டினார்கள். இவ்வாறான சீர்பெற்ற உள்ளம்தான் அமைதியடைந்ததாகக் காணப்படும்.
இன்று உலகில் மனிதன் தேடியலைகின்ற ஒரு விடயம் இருக்குமாயின் அது உள அமைதியாகத்தான் இருக்கும் என்பதனை எவராலும் மறுக்க முடியாது. மனிதனது இயக்குவிக்கும் உள்ளமானது அமைதியாக இருத்தல் வேண்டும். அப்போதுதான், மனிதன் இவ்வுலகில் சமனிலைபேணி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்.ஏனெனில், உள்ளம் ஓர் அரசனைப் போன்றது உடலுறுப்புக்கள் அவனது வீரர்களைப் போன்றவை.
எடுத்துக்காட்டாக,இன்று உலகில் உள்ள எல்லா வசதிகளையும் கொண்ட மனிதனுக்கு தன்னுடைய வசதிகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற சதா அவாவும் தன்னுடைய சொத்துக்களை தன்னால் நிருவகிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும், தன்னுடைய மறைவிற்க்குப் பிறகு தனது வசதி வாய்ப்புக்களுக்கு என்ன நேருமோ என்ற ஏக்கமும் இருந்துகொண்டே இருக்கும். இதனால் உள்ளத்தின் அமைதியை தொலைத்தவனாக நிம்மதியற்று அவனது வாழ் நாட்கள் கழிக்கின்ற நிலையை காணுகின்றோம்.
அதேபோன்று, எந்த வசதி வாய்ப்புக்களையும் இவ்வுலகில் பெற்றிராத தன்னுடைய நாளாந்த ஜீவனோபாயத்திற்கு எந்த அடிப்படையுமில்லாத ஒரு ஏழை, தன்னுடைய வாழ்நாட்களைக் கடத்துவதற்காக சந்திக்க வேண்டிய துன்பங்களையும் துயரங்களையும் எண்ணி பெருமூச்சு விட்டுக்கொண்டு, இன்றைய நாட்கள் எவ்வாறு கழியுமோ என்ற ஏக்கத்துடன் தனது வாழ்வுக்கான போராட்டத்தை நடாத்திக்கொண்டு செல்வதாலும் கவலையுற்று, அச்சமடைந்து குழம்பிப் போகின்றான்;. இதனால், மனதில் பல போராட்டங்களை சுமந்து கொண்டு உள்ளத்தின் அமைதியை தொலைத்து விடுகின்றான்.
இவ்வாறு உள்ளத்தின் அமைதி என்பது உலகிலுள்ள எல்லா மட்டத்தினருக்கும் எல்லாப் பருவ நிலையினருக்கும் தேவையாகவுள்ள அவசியமான ஒரு அம்சமாகத் திகழ்கின்றது.
இன்று உலகத்தில் உள்ள எல்லாவகையான ஏற்பாடுகளையும் உண்ணிப்பாகக் கவனிக்கும் போது ஒரு உண்மை வெளிப்படுகின்றது.அதாவது, மனிதன் தன்னுடைய உடம்பை மாத்திரம் எந்தக் குறைபாடுமில்லாமல் கவனிப்பதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாவை திருப்திப்படுத்தவும், தனது இச்சையை வேண்டிய நேரத்தில் வேண்டியவர்களோடு தீர்த்துக்கொள்ளவும், தனது உடல் அங்கங்கள் செழிப்பை இழக்காமலிருப்பதற்கு வேண்டிய வேலைகளைச் செய்வதற்கும் உடம்பை ஆறுதல் படுத்துவதற்கும் பல்வேறு ஏற்ப்பாடுகள் பல மில்லியன் ரூபாய்கள் செலவு செய்து பல ஆயிரக்கணக்கான பயிற்றப்பட்ட ஊழியர்களைக் கொண்டு கவர்ச்சிகரமான முறையில் செய்யப்படுகின்றது.
ஆனால்,ஒரு மனிதனை இயக்கும் பிரதான இயந்திரமான உள்ளத்தை பாதிப்படையாது காத்துக்கொள்வதற்கும் அதனை அமைதிப்படுத்துவதற்கும் அதன் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த உலகத்தில் பெரிதளவான ஏற்ப்பாடுகள் எதுவுமில்லை என்பது ஆச்சரியம் தரக்கூடிய கவலையாகும்.
உலகில் மனிதனுடைய நிருவாகமானது பலபரிமானங்களைக் கொண்டதாகும், மனிதன் தன்னைத்தான் நிருவகிக்கின்ற சுய நிருவாகம், குடும்ப நிருவாகம், சமூக நிருவாகம், தேச நிருவாகம் மற்றும் விதேச நிருவாகம் போன்ற மட்டங்களில் மனிதனது நிருவாகமானது பரந்துபட்டதாக இருக்கின்றது.
இவ்வாறான மட்டங்களில் மனிதன் முறையான சீரான நிருவாகத்தை மேற்க்கொள்ள வேண்டுமானால், அந்த நிருவாகத்தை மேற்க்கொள்ளும் குறித்த மனிதனின் உள்ளம் அடிப்படையில் அமைதியடைந்ததாக இருத்தல் வேண்டும். அவ்வாறான உள அமைதியடைந்த மனிதனால் மாத்திரம்தான் இறைவனின் பிரதிநிதித்துவத்தை முறையாக இவ்வுலகில் சான்றுபகர முடியும்.
அந்தவகையில்,உலகத்தின் நிருவாகியான மனிதனது உள்ளம் அமைதியை இழந்துவிட்டால் இவ்வுலகத்தின் இயக்கமானது சமனிலையை இழந்துவிடும். உலகம் சமனிலையை இழப்பது மிகப்பெரிய ஆபத்தாகும். அந்தளவுக்கு மனிதனது உள்ளத்தின் அமைதியானது முக்கியத்துவம் பெறுகின்றது.
இன்று உலகில் வாழ்கின்ற ஏறத்தாழ 98 வீதமான மனிதர்கள் உள அமைதியை ஏதோ ஒரு அடிப்படையில் இழந்தவர்களாக வாழ்வதை அவதானிக்க முடியும். இது மிகவும் துர்ப்பாக்கியமான நிலைமையாகும்.
மனிதனின் உள அமைதியின்மைக்கான காரணங்கள்:
- இறை வழிகாட்டலைப் புறக்கணித்து வாழ்தல்.
- உலகப்பற்று அதிகரித்தல்
- ஆன்மீக வறுமை
- பக்குவமற்ற பார்வைகள்
- வாழ்க்கையில் குறிக்கோள் இன்மை
- திருப்தி கொள்ளும் மனப்பாங்கின்மை
- கழாகத்ரில் நம்பிக்கையின்மை
- மனவெழுச்சிகள் அறிவைக் கையாழும் நிலை
- நாவடக்கமும் கர்ப்பொழுக்கமும் இல்லாமை
- பாவங்களில் மூழ்கியிருத்தல்
உள அமைதியின்மையினால் ஏற்படும் விளைவுகள்
- தனிமனிதனிலேற்ப்படும் விளைவுகள்:
- உள நோய்கள்
- உடல்நோய்கள்
- அறிவும் ஞானமும் குடிகொள்ளாது
- விபத்துக்கள் அதிகரித்தல்
- போதைப்பாவனை
- வன்முறையில் ஈடுபடல்
- தற்கொலை முயற்சி
- குடும்பத்திலேற்ப்பட்டுள்ள விளைவுகள்:
- குடும்பத்தில் கண்குளிர்ச்சி இல்லாமல் போகும்
- வீட்டு வன்முறை
- சமூகத்திலேற்ப்பட்டுள்ள விளைவுகள்:
- போட்டியும் பொறாமையும் அதிகரித்துள்ளமை
- சமூக சீரழிவுகள் மலிந்துள்ளமை
- ஒழுக்க வீழ்ச்சி பண்பாட்டு வீழ்ச்சி
- முறையான தலைமைத்துவமின்மை
- தேசத்திலேற்ப்பட்டுள்ள விளைவுகள்:
- இனமுரண்பாடு
இலஞ்சம் ஊழல் அதிகரிப்பு - கலாசார சீர்கேடு
- இயற்கை அழிவுகள்
- விதேசத்திலேற்ப்பட்டுள்ள விளைவுகள்:
- அதிகாரப் போட்டி
- யுத்தம்
உள அமைதிக்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள்
01.திக்ர்:
எடுத்துக்கொண்ட தலைப்பிலுள்ள ‘திக்ர்’ என்றசொல்லுக்கு நேரடியாக இறைவனை நினைவுகூறுதல் என்ற பரந்தளவிலான விளக்கத்தை கொடுத்தாலும், இங்கு திக்ர் என்ற உப தலைப்பின் கீழ் குறிப்பிடுகின்ற அம்சமாக சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூய்மையானவன்), அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்), அல்லாஹூ அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்ற அடிப்படையில் அமைந்துள்ள இறைவனை சதாவும் நினைவுபடுத்தக்கூடிய இலகுவான முறையிலமைந்துள்ள தஸ்பீஹ்களும் தஹ்மீதுகளையும் பற்றியே விளக்கமளிக்கப்படுகின்றது.
இவ்வாறான தஸ்பீஹ்களும் தஹ்மீதுகளும் ஒரு மனிதனுடைய உள்ளத்தை அமைதியடையச் செய்வதில் கணிசமான பங்களிப்பினைச் செய்கின்றது.
02.தொழுகை:
ஒரு மனிதனது உள்ளத்தைப் பக்குவப்படுத்துவதிலும் அதில் அமைதியை ஏற்ப்படுத்துவதிலும் தொழுகைக்கு நிகர் தொழுகைதான். ஒரு மனிதன் நாளாந்தம் தன்னைப் படைத்த இறைவனுடன் சந்திப்பை ஏற்ப்படுத்துவதற்காக இறைவன் ஏற்ப்படுத்திக் கொடுத்துள்ள சந்தர்ப்பம்தான் தொழுகை. தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரையுள்ள அனைத்து ஓதல்களும் செயற்பாடுகளும் தொழுகையாகும். உள அச்சத்துடனும் மன அமைதியுடனும் நிறைவேற்றுவது தொழுகையில் எதிர்பார்க்கப்படும் விடயம்.
இந்த தொழுகையைப் பொறுத்தமட்டில் உயிரோட்டமானதாக அமைந்தால் மாத்திரம்தான் அத்தொழுகையினால் எதிர்பார்க்கின்ற உள அமைதியை அடைந்துகொள்ள முடியும். அதற்காக ஒரு மனிதன் அந்தத் தொழுகையிலுள்ள ஓதல்களையும் சந்தர்ப்பங்களையும் தெளிவாகவும் கருத்தறிந்தும் கற்றுக்கொள்ளல் வேண்டும். அத்தோடு தக்பீர் கட்டியவுடன் ஸலாம் கொடுக்கும் வரையுள்ள அனைத்து செயற்பாடுகளையும் மன ஒருமைப்பாட்டுடன் முழுமையான அவதானத்தை செலுத்தி கவனம் சிதறாமல் மேற்க்கொள்ளல் வேண்டும்.
இந்த தொழுகையைப் பொறுத்தமட்டில் வேறு எந்தவொரு சமயத்திலுமில்லாத சிறப்பம்சம் இதிலுண்டு. அதாவது ஒரு மனிதன் தன்னைப்படைத்தவனுடன் உரையாடுவதற்காகவும் தனது கவலைகள், பிரச்சினைகள் மற்றும் தேவைகள் எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றை தீர்த்துக்கொள்வதற்காகவும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் கடமையாக்கிய பர்ளு ஐனான ஐங்காலத் தொழுகை காணப்படுகின்றது. இறைவனுடன் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட சந்திப்புக்களை மேற்க்கொள்வதற்கு இஸ்லாத்திலுள்ள ஏற்ப்பாட்டைத் தவிர வேறெந்த சமயத்திலும் இல்லை. இத்தோடு மனிதன் கட்டாயம் தொழவேண்டிய ஜூம்ஆத்தொழுகையும் காணப்படுகின்றது. அதேபோன்று, பர்ளுகிபாயா என்ற அடிப்படையில், ஜனாஸாத் தொழுகை கடமையாகும்.
அதுமாத்திரமன்றி, ஒரு மனிதன் இறைவனை மேலும் மேலும் நெருங்குவதற்காக இஸ்லாம் சுன்னத்தான தொழுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இரவு வணக்கங்கள், ஐங்காலத் தொழுகையுடன் உள்ள முன்பின் சுன்னத்துக்கள்,இயற்கையில் ஏற்ப்படும் மாற்றங்களை சீர்படுத்த வேண்டி தொழும் தொழுகைகளான கிரகணத் தொழுகை, மழைவேண்டித் தொழுதல் போன்றனவும், ஒரு எதிர்பார்ப்பை நிறைவேற்ற தொழும் தொழுகைகள் போன்ற ஏறாழமான சுன்னத்தான தொழுகைகள் உள்ளன.
இவ்வாறான தொழுகைகள் சடங்காகவோ சம்பிரதாயங்களாகவோ அமைந்திடாமல்,ஒரு மனிதனின் உள்ளத்தை வளப்படுத்துவதில் பாரிய பங்களிப்பினை வழங்கவேண்டுமென்பதில் இஸ்லாம் கண்டிப்பாகவுள்ளது. அதற்கான பல வழிகாட்டல்களையும் வழங்குகின்றது.
03.துஆ:
துஆ வணக்கங்களின் மூளையாகும் என்பதாக இஸ்லாம் அறிமுகப்படுத்துகின்றது. அந்தவகையில், ஒரு மனிதன் தன்னைப் படைத்த இறைவனிடத்தில் தனது தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பிரச்சினைகளையும் செய்த பாவங்களை மண்ணிக்கும் படிமுன்வைத்து முறையிட்டு நிறைவேற்றிக் கொள்வதற்கு உள்ள ஒரு ஆயுதமாகும். இந்த துஆவில் நாளாந்தம் திளைத்திருக்கும் மனிதனின் உள்ளம் அமைதி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
“ஒரு மனிதனின் பிடரி நரம்பை விட இறைவன் அண்மித்திருக்கின்றான். அவனிடம் கேட்டால் அவன் பதிலளிக்காமல் விடுவதில்லை” எனவும்
அதேபோன்று “அநியாயம் இழைக்கப்பட்டவனுடைய இறைஞ்சுதலுக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த திரையும் கிடையாது”எனவும்நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இந்த துஆவை செய்வதற்கு நேரமோ, இடமோ, மொழியோ தடையில்லை என இஸ்லாம் எடுத்தியம்புகின்றது.
அந்தவகையில், இந்த துஆ இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு:
1. ஒரு மனிதனின் உணவு, உடை, உறையுள் என்பன ஆகுமானதாக இருத்தல் வேண்டும்.
2. நல்ல விடயங்களை மாத்திரமே இறைவனிடம் கேட்க வேண்டும்.
3. கெட்ட விடயங்களைக் கேட்க முடியாது.
4. சந்தர்ப்ப துஆக்கள்:
இஸ்லாம் ஒரு மனிதன் தினமும் இறைவனுடைய ஞாபகத்திலேயே வாழவேண்டுமென்பதற்காக வழிகாட்டியுள்ள மார்க்கங்களில் முதன்மையானதாகும். இந்த சிறப்பம்சம் வேறெந்த சமயத்திலும் கிடையாது.
அந்தடிப்படையில், ஒரு மனிதன் தூங்கி எழும்பியதிலிருந்து அடுத்த நாள் தூங்கத்திற்குச் செல்லும் வரையிலான அவனது நடவடிக்கைகளில் இழையோடுவதற்காக சந்தர்ப்ப துஆக்களை கற்றுத்தந்துள்ளது.
ஒரு மனிதன் தூங்கச் செல்கையில்,தூங்கி எழும்பியவுடன், மலசலம்கழிக்கச் செல்கையில், அங்கிருந்து வெளியேறுகையில், ஆடையணிகையில், சாப்பிடுகையில், சாப்பிட்டு முடிந்தவுடன்,பிரயாணம் செல்கையில்,கண்ணாடி பார்க்கையில்,பள்ளிக்குள் நுழைகையில், அங்கிருந்து வெளியேறுகையில், காலையானதும், மற்றும் மாலையானதும் போன்ற சந்தர்ப்பங்களில் ஓதவேண்டிய சந்தர்ப்ப துஆக்களை அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறான துஆக்களை ஒரு மனிதன் தன்னுடைய செயற்பாடுகளில் இரண்டறக் கலந்து மேற்கொள்ளும் போது, அவனது உள்ளம் அமைதியடைகின்றது.
5. இஹ்ஸானிய்யத்:
இறைவனை தான் பார்க்காவிட்டாலும், இறைவன் தன்னைப் பார்க்கின்றான் என்ற உணர்வுடன் செயற்படுவதுதான் இஹ்ஸானிய்யத்தாகும். ஒரு மனிதன் தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அல்லாஹ் தன்னை அவதானிக்கின்றான் என்ற உணர்வுடன் செயற்படும்போது, அவனது செயற்பாட்டில் ஒரு பேணுதல் இருக்கும். இதற்கு காரணம் அவனுக்கு இந்த உணர்வானது அவனில் உள அமைதியை ஏற்ப்படுத்துகின்றது.
6. இஸ்திஹ்பாரும் தௌபாவும்:
ஒரு மனிதன் நாளாந்தம் பாவங்களில் ஈடுபடுவான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.அந்த பாவங்களில் மனிதன் ஈடுபடும் போது அவனது உள்ளமானது அமைதியை இழக்கின்றது. இவ்வாறான நிலையில், அவனது உள்ளத்தை அமைதிப்படுத்த இஸ்திஹ்பாரும் தௌபாவும் வழிமைக்கின்றது.
இஸ்திஹ்பார் என்பது சாதாரனமாக சிறு பாவங்களுக்காக பாமன்னிப்புக் கேட்க தினமும் உச்சாடனம் செய்யும் ‘அஸ்தஃபிருள்ளாஹ்’ என்ற வார்த்தையைக் குறிக்கும்.
ஆனால், தௌபா என்பது பெரிய பாவத்திலிருந்து மீழுவதற்கான முழுமையான வழிகாட்டலைக் குறிக்கும். தௌபாவில் ஒரு மனிதன் ஈடுபடும் போது அவனது பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்படும் ஆனால், இறைவனுக்கு இணை கற்ப்பிப்பதனைத் தவிர என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தௌபா ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பின்வரும் நிபந்தனைகளை இஸ்லாம் முன்வைக்கின்றது.
1. தனிமையில் தான் செய்த பாவத்தை நினைத்து வருந்துதல் வேண்டும்.
2. இன்னுமொரு மனிதனுடன் தொடர்புபட்ட பாவமாயின், அவனிடம் மன்னிப்புக் கோரல் வேண்டும்.
3. மீண்டும் இவ்வாறான பாவத்தை செய்யமாட்டேன் என மனதில் உறுதி பூணல் வேண்டும்.
4. அல்லாஹ்விடம் மன்றாடி அழுதுமன்னிப்பக் கோரல் வேண்டும்.
இவ்வாறான வழிமுறைகளைக் கடைப்பிடித்து பாத்திலிருந்து மீட்சி பெறுகின்றபோது, அவனது மனதிலுள்ள பாரம் குறைந்து மனம் அமைதியடைவதனைக் காணமுடியும்.
7. மரணத்தை நினைவு கூறுதல்:
ஒரு மனிதன் எப்போதும் மரணத்தை நினைவுபடுத்துபவனாகவே தனது வாழ்க்கையை கழித்தல் வேண்டும். இவ்வாறான மரணம் பற்றிய சிந்தனை ஒரு மனிதனில் நல்ல காரியங்களில் ஈடுபடுவதற்கான ஊக்கங்களை அதிகமாகத் தூண்டும்.இவ்வு+க்கமானது உள அமைதியை ஏற்படுத்தும் ஏனெனில் அவன் தீமையான காரியங்களில் ஈடுபடாமல் நன்மையான விடயங்களில் நாட்டங் கொள்வதனாலாகும்.
ஒரு மனிதனுடைய இறப்பு எப்போது, எங்கு, எச்சந்தர்ப்பத்தில் நிகழும் என்பது எவருக்கும் தெரியாது. அதனால், மனிதன் எப்போதும் மரணத்தை எதிர்பார்த்தவனாகவும் மரணிக்கத் தயாரானவனாகவும் தனது வாழ்நாளை கடத்துதல் வேண்டும்.
இங்கு அண்மையில் இறப்பெய்திய அப்பிள் நிறுவனத்தின உரிமையாளர் திரு. ஸ்ரீவ் ஜொப்ஸ் அவர்களது முன்மாதிரியான வழிகாட்டல் குறிப்பொன்றினை சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.
அவர் தன்னுடைய வாழ்நாட்களை மிகவும் பெறுமதியானதாக ஆக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறையிலுள்ள கண்ணாடிக்கு மேல் பகுதியில் சதா அவதானிக்கக்கூடிய விதத்தில் “இன்று எனது இறுதி நாள்” என்ற வாசகத்தைஎழுதி ஒட்டிவைத்ததாகவும், அதன் மூலமாக தான் பாரியளவு உளத்தாக்கமடைந்து தன்னுடைய ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக, தீங்கற்றதாக ஆக்கியதாகக் குறிப்பிட்டார்.
8. நல்ல மனிதர்களுடன் இணைந்திருத்தல்:
நல்ல மனிதர்களுடன் சதா இணைந்திருத்தல் உள அமைதியை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்றாகும்.நல்ல மனிதர்களுடனான சகவாமானது எப்போதும் நன்மையின் பால் ஒருவரை இட்டுச்செல்வதாகவே அமையும்.
நல்ல மனிதர்களுடனான நட்பு அத்தர் வியாபாரம் செய்பவரைப் போன்றதாகும்.எனெனில், அத்தர் வியாபாரி அத்தரை பூசிக் கொள்ளாவிட்டாலும் அது அவரில் மணத்தை பரப்பிக் கொண்டேயிருக்கும். தீய்ய மனிதர்களுடனான நட்பு இரும்புக்கம்மாலையில் வேலை செய்கின்ற கொல்லனை ஒத்ததாகும். ஏனெனில், கம்மாலையில் வேலை செய்பவனில் அந்த இரும்பின் துர்வாடை வீpக் கொண்டே இருக்கும் என நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.
எனவே, நல்ல மனிதர்களுடன் இணைந்து நடப்பதன் மூலமாக நல்ல சிந்தனைகளும், அதனடியாக நல்ல எண்ணங்களும் அதைத் தொடர்ந்து நல்ல நடத்தைகளும் ஒரு மனிதனில் பிறக்கும். இது அவனில் நிம்மதியான மன அமைதியை ஏற்ப்படுத்தக் காரணமாய் அமையும் எனலாம்.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...
0 Comments