ஒருங்கிணைப்பு என்பது, ஒரு இலக்கில் அல்லது ஒரு கொள்கையில் அல்லது ஒரு செயற்பாட்டில் அல்லது ஒரு துறையில் ஒத்தியங்குகின்ற அல்லது ஒருமித்துச் செயல்படுகின்ற நிலையைக் குறிக்கும்.
அதேபோன்று, ஒரு விடயத்தில் பல அபிப்பிராயங்களைக் கொண்டவர்களை ஒரு நிலைப்பாட்டிற்கு கொண்டுவருகின்ற உத்திகளும் செயன்முறைகளும், அல்லது அவர்களாகவே அவர்களுக்கிடையில் இயல்பாக ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வருகின்ற நிலையையும் ஒருங்கிணைப்பு எனவும் அழைப்பர்.
இவ்வொருங்கிணைப்பானது சமூக ஒருங்கிணைப்பு, பொருளாதார ஒருங்கிணைப்பு, அரசியல் ஒருங்கிணைப்பு, கல்வி ஒருங்கிணைப்பு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு, நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் இன ஒருங்கிணைப்பு, சமய ஒருங்கிணைப்பு, பிராந்திய ஒருங்கிணைப்பு போன்ற விடயப்பரப்புக்களில் பரந்துபட்ட அடிப்படையில் பிரயோகிக்கப்படுகின்ற ஒரு ஆய்வு எண்ணக்கருவாக அமைந்துள்ளதனை இன்று காணமுடியும்.
மேலும், உள சமூகத் துறையின் (Psycho Social Sector) உயிரோட்டமான இயங்கு நிலைக்கு ஒருங்கிணைப்பானது ஒரு உந்துதலளிக்கின்ற சக்தியாக இருப்பதனை மறுக்க முடியாது. அந்தவகையில், உளசமூகப் பரப்பில் உள்ளடக்கப்படுகின்ற தனிமனிதன், குடும்பம், கிராமம், நிறுவனம், சமூகம் மற்றும் நாடு ஆகிய தளங்களில் ஒருங்கிணைப்பின் பிரயோகரீதியிலான தன்மைகள் பற்றி இவ்வாக்கத்தில் அலசப்படுகின்றது.
தனிமனிதனும் ஒருங்கிணைப்பும்:
ஒரு மனிதனின் நடவடிக்கையைப் பொறுத்தமட்டில், அவனது உடல், உள்ளம், உணர்வுகள் அனைத்தும் ஆரோக்கியமான முறையில் ஒருங்கிணைந்து செயற்படும் போதுதான், அம்மனிதன் தனது வாழ்வின் இலக்கை அல்லது ஒரு குறித்த காரியத்தை வெற்றிகரமானதாக மேற்க்கொள்ள முடியும். அதுமாத்திரமன்றி, அவனை அவனால் முழுமையாக நிருவகிக்கவும் முடியும்.
உதாரணமாக, ஒரு மனிதன் வணக்கத்தில் ஈடுபடுகின்ற போது அவனது உடல், உளம், உணர்வுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒருமுகப்பட்டு, தனது முழு ஈடுபாட்டையும் கவனம் சிதறாது வணக்கத்தில் காட்டும் போதுதான், அவன் தனது வணக்கத்தில் எதிர்பார்க்கின்ற இலக்கினை வெற்றிகரமாகப் பெற்றுக் கொள்ளமுடியும்.
அவ்வாறில்லாதபட்சத்தில், அவ்வணக்கமானது வெறும் சடங்காக, காலத்தைக் கடத்தியதாகவே அமையும் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை. இதனால் அவனுக்கு எவ்விதமான பிரயோசனமுமில்லை.
அதேபோன்றுதான், ஒரு மனிதன் இவ்வுலகத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரயாணத்தை தான் வைத்திருக்கின்ற வாகனத்தில் மேற்க்கொள்கின்ற போது, தனது உடலையும் உளத்தையும் உணர்வுகளையும் ஒருமுகப்படுத்தி, தனது கவனம் சிதறாத வகையில் வாகனத்தை பிரயாண இலக்கை நோக்கி நகர்த்தவில்லை என்றால், எதிர்பாராத விதமான விபத்துக்கு ஆளாகவேண்டிய நிhக்கதியான நிலை ஏற்ப்படும் என்பதனை அவதானிக்க முடியும்.
அடுத்து, ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனுடன் ஏற்ப்படுத்துகின்ற நட்பின் அடிப்படையிலான உறவாடல் கூட அவர்களிடையே ஏற்ப்படுகின்ற இணைப்பாக்கத்தினாலேயே சாத்தியமாகின்றது என்பதனைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
மேலும், ஒரு மனிதனைப் பொறுத்தவரையில், இவ்வுலகில் வாழும் போது அவன் கொண்டிருக்கின்ற மற்றும் பெறுகின்ற அறிவுகள், அனுபவங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவனது உள்ளத்தின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. அந்த எண்ணங்களும் சிந்தனைகளும் தான் அவனது நடத்தைகளை நெறிப்படுத்துகின்றன.
இங்கு ஒரு மனிதன் இவ்வுலகில் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மதிப்பிடப்படுவதானது, அவனது நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டே என்பதனை கவனத்திற் கொள்தல் வேண்டும். நடத்தைகளை நெறிப்படுத்துகின்ற உள்ளத்திற்கான வழிகாட்டலானது முறையாகவும் சிறந்தமுறையிலும் ஒருங்கிணைப்புச் செய்யப்படுதல் வேண்டும். அவ்வொருங்கிணைப்பு வழிகாட்டலானது ஒரு மனிதனின் சிறுபராயத்திலிருந்து வழங்கப்படல் வேண்டும். அப்போதுதான் ஒரு மனிதனை சிறந்தவனாக கட்டியெழுப்ப முனையலாம்.
குடும்பமும் ஒருங்கிணைப்பும்:
ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில், தனது அங்கத்தவர்களை முறையாக வளப்படுத்தி, வழிகாட்டி, ஒருங்கிணைத்துக் கொண்டு இயங்கும் போதுதான், அக்குடும்பம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.
ஒரு குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள் வித்தியாசமான இயல்புகளையும் பண்புகளையும் உணர்வுகளையும் நடத்தைகளையும் ஆற்றல்களையும் கொண்டிருப்பவர்கள். அவர்களை ஒதுக்காது, அவர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டாது முறையாக ஒருங்கிணைத்து வழிப்படுத்தும் போதுதான் அவர்களால் அக்குடும்பமானது வளம்பெறும்.
ஒரு குடும்பத்தில் ஒருங்கிணைப்பின் வெற்றியானது எதில் தங்கியதுள்ளது என்றால், ஒரு குடும்பத்தின் பொதுவான நலனில் அக்குடும்ப அங்கத்தவர்கள் தங்களது எதிர்பார்ப்புக்கள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்கள் அனைத்தையும் கடந்து ஒருமித்துச் செயற்ப்பட்டு பங்களிக்கின்ற போதுதான் வெற்றி சாத்தியமாகும் என்பதனை உணர்ந்து கொள்தல் வேண்டும்.
ஒரு குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களை முறையாக ஒருங்கிணைத்து செயற்படத் தவறுகின்றபோது, அக்குடும்பத்தில் பல்வேறுவிதமான விபரீதங்கள் ஏற்படுவதனையும் காணமுடியும்.
உதாரணமாக, ஒரு குடும்பம் தனது எதிர்பார்க்கைக்கு மாற்றமாக செயற்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு நபரை அக்குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைப்பதற்கு தீர்மானிக்கின்றது எனவைத்துக் கொண்டால், அவ்விலக்கப்பட்ட நபர்; மனமுடைந்து, பிறழ்வான நிலைமைக்குத் தள்ளப்படுவதுடன், காலப்போக்கில் விரக்தியின் விளிம்பு நிலைக்கு ஆளாகி, தனது பெறுமதியான உயிரை மாய்த்துக் கொள்கின்ற பரிதாபகரமான நிலையையும் நாம் இன்று பார்க்க முடியும்.
இந்த சந்தர்ப்பத்தில், ஒரு குடும்பமானது தனது அங்கத்தவர்களின் இயல்பு நிலைகளையும் அவர்களது மனோபாவங்களையும் நன்கு புரிந்து கொண்டு, அவர்களை அரவணைத்து ஒருங்கிணைத்து அவர்களது நிலைமைக்கேற்ப்ப அவர்களுக்கு உதவுவதற்க்கு முன்வருதல் வேண்டும். இதற்காகவேண்டி, அவர்கள் குடும்ப அங்கத்தவர்களை ஒருங்கிணைத்து அடிக்கடி கலந்துரையாடல்களை நடாத்துதல் வேண்டும்.
உதாரணமாக: ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால், அதில் படித்தவர்களும், வசதிபடைத்தவர்களும் பாமரார்களும் இருப்பதைத் தவிர்க்கமுடியாது. இந்நிலையில், அக்குடும்பமானது ஆக்கபூர்வமான முறையில் அக்குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை ஏற்ப்பாடு செய்து கலந்துரையாடி, வசதிபடைத்த நபரைக் கொண்டு வறிய நபருக்கு உதவியினைப் பெற்றுக் கொடுத்து முன்னேற்றும் விடயத்தில் அக்கரை செலுத்துமானால் அக்குடும்பம் வலுவான நிலையை அடையும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு ஒரு குடும்பம் அதனது அங்கத்தவர்களது நலனோம்பு விடயங்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள், சந்தோசகரமான மற்றும் துக்ககரமான நிகழ்வுகள் சவால்களுக்கு முகங்கொடுத்தல் போன்ற எல்லா சந்தர்ப்பத்திலும் ஒருங்கிணைத்து வழிகாட்டி செயற்படுமானால், அக்குடும்பமானது எல்லா சந்தர்ப்பங்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்கும் குடும்பமாகத் திகழும்.
கிராமமும் ஒருங்கிணைப்பும்:
ஒரு கிராமத்தைப் பொறுத்தமட்டில், அங்குள்ள குடி மக்களது நன்மைகருதி பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் போதும், நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும் போதும் இவ்வொருங்கிணைப்பு என்ற செயன்முறையானது மிகவும் இன்றியமையாததொரு விடயமாகக் காணப்படுகின்றது.
ஒரு கிராமத்திலுள்ள வளங்களான இயற்கை வளங்கள் மற்றும் மனித வளங்கள் என்பனவற்றை பயன்படுத்தி ஒரு கிராமம் உச்சளவான பயன்பாட்டினைப் பெற்றுக் கொண்டு முன்னேற வேண்டுமானால், அங்குள்ள வளங்களை முறையாக இனங்கண்டு, வகை பிரிப்புச்செய்து, பொருத்தமான வளத்தை பொருத்தமான சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கும் குறைந்தளவான வளத்திலிருந்து உச்சளவான பயன்பாட்டினைப் பெற்றுக் கொள்வதற்க்கும் இந்த ஒருங்கிணைப்பு என்ற நடவடிக்கையானது பங்களிப்புச் செய்கின்றது.
ஒரு கிராமத்தைப் பொறுத்தமட்டில், அதன் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், உட்கட்டுமானம், அரசியல் போன்ற துறைகளில் மேம்பாடான நிலைமைகள் ஏற்ப்படவேண்டுமானால், அந்தந்த துறைகளுடன் தொடர்பான வல்லுனர்களை, தேர்ச்சி பெற்றவர்களை துறைசார்ரீதியில் ஓருங்கிணைப்புச் செய்து, துறைசார்ந்த அடிப்படையில் திட்டமிடல்களை மேற்க்கொண்டு, அமுலாக்கல் செய்வதன் மூலம் அக்கிராமத்தை துரிதமாக வளர்ச்சியுறச் செய்யலாம் என்பது திண்ணமாகும்.
நிறுவனமும் ஒருங்கிணைப்பும்:
இன்று சமூகத்தளத்தில் பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் செயற்ப்பட்டு வருகின்றன. அரசுசார் நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்ற அடிப்படையில் இயங்கிவருகின்றன.
இந்நிறுவனங்களின் இயங்கு நிலையில் ஒருங்கிணைப்பு என்ற செயன்முறையானது மிகவும் முக்கியமானதொரு அம்சமாகக் கொள்ளப்படுகின்றது. அந்தவகையில், ஒரு நிறுவனத்திற்குள்ளும், நிறுவனத்திற்கு வெளியிலும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையானது பாரியளவான தாக்கத்தினை செலுத்தி வருகின்றது.
ஒரு நிறுவன செயற்ப்பாட்டில் அதன் உள்ளார்ந்த நடவடிக்கையில் அதிலுள்ள மனித வளங்களை ஒருங்கிணைத்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்களை மேற்க்கொண்டு, அவர்களது அறிவையும், அனுபவங்களையும் ஆற்றல்களையும் ஒன்றிணைத்து நிறுவன இலக்கினை அடையும்வகையில் திட்டமிட்டு அதிலுள்ள வளங்களை பயன்படுத்தி செயற்ப்படுவதன் மூலம், அந்த நிறுவனத்தை வினைத்திறனுள்ள நிறுவனமாகவும் உற்ப்பத்தித் திறன் அதிகரித்த நிறுவனமாகவும் மாற்ற முடியும்.
அதேபோன்று, ஒரு நிறுவனத்தின் வெளிச் செயற்ப்பாடுகளிலும் ஒருங்கிணைப்பு செயன்முறையானது இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில், ஒரு நிறுவனமானது அதன் செயற்ப்பாட்டில் அல்லது கொள்கையில் ஒத்தவகையிலான தன்மைகளைக் கொண்டுள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதனைக் காண முடியும்.
இதன்போது, ஒரு பிரதேசத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஒரே வேலைத் திட்டத்தை செய்யமுனைகின்றபோது ஏற்ப்படும் இரட்டித்தல் தன்மையானது நிறுத்தப்பட்டு, ஒரு வேலைத்திட்டத்தை பல நிறுவனங்கள ஒருங்கிணைந்து செய்ய முனையும் காத்திரமான நடவடிக்கை இடம்பெறும். இதன்போது அது மிகவும் தாக்க விளைவினைத் தரக்கூடியதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை. அத்தோடு, இதன் மூலம் பல வீண்விரயங்கள் தடுக்கப்படுகின்றன என்பதனையும் அவதானிக்க முடியும்.
உதாரணமாக, சுனாமி மற்றும் யுத்த சூழ்நிலைகளில் இயங்கிய நிறுவனங்கள் தங்களுக்குள் பலமான வலையமைப்பினையும் இணைப்பாக்கதினையும் (நேவறழசமiபெ ரூ ஊழழசனiயெவழைn) கொண்டு செயற்ப்பட்டமையினால், குறுகிய காலத்திற்குள் பல ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தமையைக் குறிப்பிட்டுக் காட்டமுடியும்.
சமூகமும் ஒருங்கிணைப்பும்:
சமூகத்தில் ஒருங்கிணைப்பைப் பொறுத்தவரையில், அச்சமூகத்திலுள்ள எல்லா தரப்பட்ட அங்கத்தவர்களையும் ஒன்றினைத்து பொதுவான சமூக உறவொன்றினை அடைவதற்காகவும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பரஸ்பரக் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்ப்படுத்துகின்ற இயக்கப்பாட்டினைக் கொண்டதும் தரம்வாய்ந்ததுமான செயன்முறையைக் குறித்து நிற்கின்றது.
சமூகத்தில் பாதுகாப்பானதும், நிலையானதுமான சகவாழ்வையும், இணைந்த தன்மையையும் சமாதானமான நடைமுறைகளையும் ஏற்ப்படுத்துவதிலும் சமூக இணைப்பாக்கமானது பாரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்தகின்றது எனலாம்.
சமூக இணைப்பாக்கத்தைப் பொறுத்தவரையில், ஒரே மத கலாசாரம் மற்றும் பண்பாடு பழக்க வழக்கங்களைக் கொண்ட சமூகத்தினுள் இணைந்ததும் இறுக்கமானதுமான பிணைப்பினை ஏற்ப்படுத்தும். இவ்வாறான சமூகத்தினரிடையே பிளவையும் பிரிவினைகளையும் ஏற்ப்படுத்துவதானது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
அதேபோன்று, பல்லின சமூகக் கலாசார பாரம்பரியங்களைக் கொண்ட வெவ்வேறு சமூகங்களுக்கிடையிலும் இணைப்பாக்கம் செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். இதன் மூலம் சிறந்த புரிந்துணர்வினையும் ஒற்றுமையையும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலைகளையும் கட்டியெழுப்ப முடியும்.
இன்றைய கால கட்டத்தில் பெருகிவரும் சமூக ஊடகங்களின் அதிகரித்த பாவனைகளினால் சமூக அங்கத்தவர்களிடையே ஏற்ப்பட்டுவருகின்ற இடைவினைகளையும் (ளுழஉயைட ஐவெநசயஉவழைn) அதனால் விளைகின்ற தாக்கத்தினையும் அளவிடமுடியாத அளவிற்க்கு அதன் தாக்கமானது சமூகங்களிடையே இணைப்பாக்கத்தினை உருவாக்குவதில் தன்னிகரில்லாத சாதனமாக அமைந்து காணப்படுகின்றது என்றால் அது மிகையல்ல.
நாடும் ஒருங்கிணைப்பும்:
நாடுகளைப் பொறுத்தமட்டில் ஒருங்கிணைப்பாக்கமானது பல்வேறு செயற்தளங்களில் வேண்டப்படுகின்ற தவிர்க்க முடியாததொரு அம்சமாகக் காணப்பட்டுவருகின்றது.
ஒரு நாட்டைப் பொறுத்தவரையில், பல்வேறு இனக்குழுமங்கள் சிறுபான்மையினராகவும் பெரும்பான்மையினராகவும் வாழமுடியும். ஒரு நாட்டின் அரசாங்கமானது அந்நாட்டிலுள்ள மக்களை இலகுவான முறையில் நிருவகிப்பதற்கும் அவர்களது பிரச்சினைகளையும் எதிர்பார்க்கைகளையும் தீர்ப்தற்க்கும் இவ்வொருங்கிணைப்புச் செயன்முறையானது உதவுகின்றது.
முறையான ஒருங்கிணைப்பாக்கச் செயன்முறை ஒரு நாட்டில் இடம்பெறுமாகவிருந்தால், அந்நாட்டிலுள்ள மக்களுக்கிடையே தேவையில்லாத பாரபட்சங்களும் பிரச்சினைகளும் ஏற்ப்படுவதற்க்கு வாய்ப்புக் குறைவாகவே காணப்படும்.
அந்தவகையில், ஒரு நாட்டிலுள்ள வளங்களையும் நிறுவனங்களையும் துறைசார்ந்த வல்லுனர்களையும் மக்களது நலன்கருதி ஒருங்கிணைப்பாக்கம் செய்கின்ற காரியத்தை அரச இயந்திரமானது முறையாகக் கையாழுமாகவிருந்தால் அந்நாடு வளம் பெறும் எனலாம். மக்களது நலன்சார் விடயத்தில் மக்களுக்கிடையிலே பாரபட்சங்கள் மற்றும் பாகுபாடுகள் அரச இயந்திரங்களால் காட்டப்படக்கூடாது. அவ்வாறு பாரபட்சம் காட்டப்படுமாக இருந்தால், அரசின் ஒருங்கிணைப்பாக்கச் செயன்முறையில் குறித்த மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.
முடிவுரை:
எனவே, ஒருங்கிணைப்பு என்ற எண்ணக்கருவானது தனிமனித வாழ்வை நெறிப்படுத்துவது தொடக்கம் ஒரு நாட்டை மேம்படுத்தும் நிலைக்கு கொண்டு வருவதுவரையிலான பல்வேறு சமூகத் தளங்களில் பிரயோகிக்கப்படுகின்ற மிகவும் பிரயோசனமான ஒரு உயிரோட்டமான கருவியாகவும் எண்ணக்கருவாகவும் அமைந்து காணப்படுகின்றது எனலாம்.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...
0 Comments