மனிதன் இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்ற அற்புதமான படைப்பாகும். இந்த உலகத்தில் மனிதனுக்கு ஒப்பாக எதுவும் ஆகமுடியாது. இவ்வாறான மனிதனின் உருவாக்கத்திற்கு ஆசை என்ற உணர்வானது அத்திவாரம் இடுவதாக அமைகின்றது. மனித உருவாக்கத்தின் ஆரம்பமே ஆசையின் அடிப்படையினாலேயே இடம்பெறுகின்றது என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பின் பின்னணியும் சில இன்றியமையாத ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே இடம்பெறுகின்றன. அதாவது ஒரு ஆணும் பெண்ணும் இரண்டறக் கலக்கின்ற இல்லற வாழ்க்கையின் மூலமே ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்கான கருவானது இறைவனுடைய ஏற்பாட்டின் மூலமாக உருவாகின்றது. இந்த இல்லற வாழ்கையானது மனித ஆசையின் விளைவாக ஏற்படுவதாகும். இது மனித உருவாக்கத்திற்காக இறைவனால் வகுக்கப்பட்டுள்ள ஒரு மகத்தான நியதியாகும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறான மனிதன் ஆசை என்ற உணர்வை இயல்பாகப் பெற்றுள்ளான். அதனால் இந்த மனிதன் உலகத்தில் எண்ணற்ற ஆசைகளோடு தன்னுடைய வாழ்கைப் பயணத்தை மேற்கொள்கின்றான். இவ்வாசையானது மனிதனுடைய பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் அவனது வாழ்கையை ஆட்டிப்படைக்கின்ற ஆதிக்க உணர்வாக அவனில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஆசையானது மனிதன் எப்போது மண்ணறை வாழ்வை சந்திக்கின்றானோ, அப்போது அந்த உணர்வுக்கும் முடிவு கட்டப்பட்டுவிடும் என்ற யதார்தத்தை மனிதன் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறான ஆசையைப்பற்றி கவிஞர் வைரமுத்துவினால் ஆக்கப்பட்ட பாடல் வரிகள் இவ்வாறு அமைகின்றது.
சின்னச்சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை.
முத்து முத்து ஆசை, முடிந்துவைத்த ஆசை.
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை,
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை………..
இப்பாடல் வரிகளைக் கவனிக்கும் போது கவிஞர் மனித ஆசையானது கற்பனை கலந்தததாகவும் எல்லைகளைக் கடந்த ஒரு உணர்வாகவும் வர்ணிக்கின்றார். அந்தளவுக்கு மனிதனின் ஆசையானது விசாலமானதாகும்.
அடுத்து, இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு இலக்கினை (Vision) வகுத்துக்கொண்டே தனது வாழ்கைப்பயணத்தை ஓட்டுகின்றான். இலக்கின்றிய பயணமானது திசையறியாமல் நடுக்கடலில் சிக்கித் தத்தழிக்கும் கப்பலில் பயணிப்பதைப் போன்றதாகும். ஒரு மனிதன் தனது வாழ்வு நிலையானது எதிர்காலத்தில் எவ்வாறாக இருக்கவேண்டுமென்ற, சற்று கற்பனைசார் தன்மையைக் கொண்ட கருத்தியல் அம்சத்தை அவனது இலக்கு என வரையறை செய்யலாம். இந்த இலக்கினை தீர்மானிப்பதில் கூட ஆசையானது அவனுக்கு வழிசமைத்துக் கொடுக்கின்றது.
அதுமாத்திரமன்றி, இவ்வுலகில் மனிதன் வாழ்வதற்குத் தேவையான மிக அவசியமான அடிப்படைகளான உணவு, உடை, உறையுள் போன்றன காணப்படுகின்றன என்பதனை நாம் அறிவோம். இந்த அடிப்படைகளை தெரிவுசெய்வதில் கூட மனிதனின் ஆசையானது ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகத் திகழ்கின்றது. அதாவது இவைகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு விதமானவைகள் இவ்வுலகில் காணப்பட்டாலும், அவற்றில் தனக்கு உகந்ததை தேர்வு செய்வதில் ஆசையானது செல்வாக்குச் செலுத்துகின்றது.
இவ்வாறான மனிதன் இந்த உலகில் கொண்டுள்ள ஆசைகளை மிகப்பிரதானமாக மூன்று விடயங்களுக்குள் உள்ளடக்கி விளக்க முடியும்.
1. மண்ணாசை
2. பெண்ணாசை
3. பொன்னாசை
மண்ணாசை:
மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கு ஒரு இயங்கு தளம் அவசியமாகும். அதனடிப்படையில் அவனது குடும்ப வாழ்கையை அமைத்துக் கொள்வதற்காக உறைவிடம் என்ற அம்சம் இன்றியமையாததாகும். அவனது உறைவிடத்தை ஒழுங்கமைத்துக் கொள்வதற்காக இந்த பூமியில் அவனுக்கு ஒரு இடம் தேவைப்படுகின்றது. இந்த இடத்தை தெரிவு செய்வதில், அதனை வரையறுத்துக் கொள்வதில் அவனது ஆசை செல்வாக்கு செலுத்துகின்றது.
அதுமாத்திரமன்றி, இவ்வுலகத்தில் நிறைவான சொத்துக்களையும் ஆதனங்களையும் தனது வாழ்கைக்கு ஆதாரங்களாக சேர்த்து வைப்பதில் தீவிர ஈடுபாட்டை மனிதன் காண்பிக்கின்றான். அதனை பெருக்கிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையை அடைவதற்காகவேண்டி சதாவும் உழைக்கின்றான். அதற்காக பலபோராட்டங்களைக் கூட நடாத்திவருகின்றான். ஒரு சாண் நிலத்திற்காக நீதிமன்றத்தில் வழக்காடுகின்ற நிலைமையை இன்று அவதானிக்கலாம். இந்த மனிதனின் மண்ணாசையை நிறைவேற்றிக்கொடுக்கவும் நெறிப்படுத்தவும், அரசானது இதற்காகவேண்டி இன்று நிறுவன ரீதியாகவும் சட்டரீதியாகவும் பல்வேறு ஏற்பாடுகளை நமது நாட்டில் செய்து கொடுத்திருக்கின்றது.
மேலும் இன்று உலகத்தில் காணப்படும் அரசுகள் தனது நாட்டினுடைய எல்லையை விஸ்தரிப்புச் செய்யவேண்டுமென்ற ஆசையில் அயலிலுள்ள இன்னுமொரு நாட்டோடு போரில் ஈடுபடுவதனைக்கூட நாம் காணமுடியும். அத்துடன் இன்று உலகத்தை கட்டியாழ வேண்டுமென்ற பேராசை வேட்கையின் காரணமாக உலக வல்லரசுகள் இன்னுமொரு நாட்டின் மீது கொள்கை ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அத்துமீறுவதனை நாம் காண்கின்றோம்.
எனவே, இவ்வாறான மண்ணாசையானது மனிதனின் குடும்ப ரீதியிலான ஆட்சியில் தொடங்கி சர்வதேச ரீதியிலான நாடுகளின் ஆட்சி நிலைவரை அதிகாரம் செலுத்துகின்ற அளவுக்கு வியாபித்துக் காணப்படுவதனை கண்கூடாகக் காணமுடியும்.
பெண்ணாசை:
மனிதனின் ஆசை ஆதிக்கம் செலுத்துகின்ற இன்னுமொரு பகுதிதான் பெண்ணாசையாகும். மனிதனைப்படைத்த இறைவன் ஆண், பெண் என்ற இரு பாலினங்களை அவர்களில் உருவாக்கி இருக்கின்றான். இந்த உலகம் முறையாக நிர்வகிக்கப்படுவதற்கு இவ்வுலகத்தில் மனித சந்ததிகள் பெருக்கப்பட்டு, ஒழுக்கம் நிலைநாட்டப்படுவதற்கு ஆணும் பெண்ணும் முறையாகவும் ஒழுக்கத்தின் அடிப்படையிலும் சேர்ந்து வாழவேண்டுமென அவன் ஒரு நியதியை வகுத்திருக்கின்றான். இதற்காகவேண்டி மனிதமனங்களில் பருவநிலை மாற்றங்களின் போது எதிர்பாலார் மீதான கவர்ச்சி நிலையை, ஈர்ப்புநிலையை ஏற்படுத்துவதற்காகவேண்டி சில உயிரியல் பொறிமுறைகளை இறைவன் ஏற்படுத்தியிருக்கின்றான்.
இவ்வாறான நிலைகளால் ஆணின்மீது பெண்ணும், பெண்னிண்மீது ஆணும் ஆசைகொள்கின்ற நிலைமை உருவாகின்றது. குறிப்பாக இவ்வாசையானது ஒரு மனிதனின் பிள்ளைப்பருவத்தில் ஆரம்பமாகி, பின்னர் அவனது கட்டிளமைப்பருவத்தில் உச்சநிலையை அடைவதனை இயல்பாகவே நாம் காண்கின்றோம். இங்குதான் காதல் என்கின்ற ஒரு நிலைமை ஏற்படுகின்றது. இவ்வாறான காதலானது அவனை அல்லது அவளை காமம் என்ற பாலியல் இன்பவுணர்வை அடைவதை நோக்கி அவர்களை காலப்போக்கில் நகர்த்துகின்றது. தனக்கான வாழ்கைத்துணையை தயார்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இருபாலாரும்;, தான் ஆசைவைத்தவரை ஈர்ப்பதற்காகவேண்டி தனது வாழ்கைமுறையைக் (டுகைந ளுவலடந) கூட மாற்றி, அதுவேதான் இவ்வுலக இலட்சியம் எனும் அளவுக்கு வாழ்வதனை நாம் பார்க்கமுடியும். இவ்வாறான இலட்சியமானது திருமணம் என்ற அம்சத்தை நோக்கி இருபாலாரையும் நகர்த்துகின்றது.
இவை காதல் திருமணங்களாக (Love Marriage) அல்லது திட்டமிட்ட பேச்சுவார்த்தைகள் (Pசழிழளநன ஆயசசயைபந) மூலமாக இடம்பெறுகின்ற திருமணங்களாக இருக்கலாம். ‘இரு மனங்கள் ஒத்ததால் வருவது திருமணம்’ என்பார்கள். அந்தவகையில், காதல் திருமணங்களானது தனக்குள்ளே இருக்கும் ஆசையின் விளைவாக இயல்பாகவே இரு மனங்கள் முன்வந்து தங்களுக்கிடையில் ஏற்பட்ட ஏதாவதொரு ஈர்ப்பின் அடிப்படையில் இணைகின்றனர். ஆனால் திட்டமிட்ட திருமணங்களில் பெண்பார்க்கும் படலம் என்ற ஒரு கலாசாரத்தின் மூலமாக தனக்குள்ளே இருக்கும் நீண்ட நாளைய ஆசையுடன் கூடிய இலட்சணங்களை பொருத்திப்பார்ப்பதன் விளைவாக ஏற்படுகின்றன. இங்கு வழிமுறைகள் வித்தியாசப்பட்டாலும் ஆசை என்ற விடயத்தில் ஒருமித்த தன்மை காணப்படுவதனை எவரும் மறுக்கமுடியாது.
இங்கு ஒரு ஆணில் மீது பெண்ணுக்கு ஏற்படுகின்ற ஆசையை விடவும் பெண்ணின் மீது ஆணிற்கு ஏற்படும் ஆசை நிலையே அதிகம் எனலாம். ஏனெனில், பெண்ணானவள் அவ்வாறான அமைப்பிலேயே படைக்கப்பட்டிருக்கின்றாள்.
ஒரு பெண்ணை தான் அடைந்து கொள்வதற்காகவேண்டி ஆண் தனக்குள் நடத்துகின்ற உளப்போராட்டங்களும் அவனது புறச்சூழலில் நடாத்துகின்ற அகிம்சை போராட்டங்களும் வர்ணிக்க முடியாதவையாகும். அதற்காகவேண்டி எவற்றையெல்லாம் இழக்கவேண்டுமோ அவற்றையெல்லாம் இழப்பதற்கு ஆண் தயக்கம் காட்டுவதில்லை. “மனைவி அமைவதெல்லாம், கடவுள் கொடுத்த வரம்” என்ற பாடல் சொல்வதைப்போன்று, அந்த பெண்ணாகிய வரத்தை அடைந்து கொள்வதற்கு ஆண் படும்பாடு எண்ணமுடியாதவையாகும். இன்னும் சொல்லப்போனால், இவ்விடயத்தில் ஒரு ஆண் தன்னுடைய அனைத்து ஆசைகளையும் அடகுவைத்து செயற்படுகின்றான்.
பெண்ணாசையின் விளைவாக கடந்த காலங்களில் பல்வேறு யுத்தங்கள் ஆட்சியாளர்களுக்கு இடையில் ஏற்பட்டதாக வரலாறுகள் சான்று பகர்கின்றன. அதாவது சீதை என்ற பெண்ணை அடைவதற்காக வேண்டி இராமன், இராவணன் என்ற மன்னர்களுக்கிடையில் ஏற்பட்ட போராட்டங்களைக் குறிப்பிட முடியும். இன்று தான் ஆசைவைத்துள்ள பெண்ணை அடைவதற்காக ஒரு ஆண் மேற்கொள்கின்ற பேராட்டமானது வெற்றியடைகின்றபோது, அவன் பெறுகின்ற சந்தோசம் மட்டில்லாதது. அவனது மனநிறைவை மட்டிட முடியாது. ஆனால், அப்போராட்டம் தோல்வியில் முடிகின்றபோது அவன் அடைகின்ற விரக்தியும் கவலையும் அவனது உயிரை மாய்க்கின்ற நிலைக்கே இட்டுச் செல்கின்றது.
இங்கு இன்னுமொரு விடயத்தை சொல்லியாகவேண்டும்;. அதாவது, தான் ஆசைவைத்தவள் தனக்கு இசைவாக மறுக்கின்றபோது, அவன் அவளை அடைவதற்கு தவறான வழிமுறைகளைக் கையாழுகின்றான். தனக்கு கிடைக்காதவள் இன்னுமொருவனுக்கு கிடைக்கக் கூடாது எனும் நோக்கில் அவளை கெடுப்பதற்கு விளைகின்றான். அவள்மீது வன்முறைகளையும் பலாத்காரங்களையும் கட்டவிழ்த்து விடுகின்றான். போதைக்கு அடிமையாகின்றான், தனது கோலத்தை அலங்கோலமாக மாற்றிக்கொள்ள விளைகின்றான். காலப்போக்கில் அவனொரு உளநோயாளியாக மாறுகின்றான். இது இன்றைய உலகில் பரவாலாக இடம்பெறுவதனைப் பார்க்க முடியும். இது ஒரு ஆரோக்கிமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையல்ல. இதன்போது அவன் இறைவன் விதித்த விதிப்படியே தனக்கானவள் கிடைப்பாள் என்ற விடயத்தில் உள்ள நம்பிக்கையை மறந்துபோகின்றான்.
மேலும் இன்றைய உலகில் பல்வேறு விடயங்களை சாதிப்பதற்காகவேண்டி சில அதிகார சக்திகள் பெண்களை போகப்;பொருளாகப் பயன்படுத்தி, தமது அதிகாரத்திற்குள் இருக்கின்ற கவர்ச்சியான அழகான பெண்களை பேரம்பேசி, தாம் இலக்குவைக்கின்ற விடயத்தினை சாதித்துக்கொள்வதற்காகவும் தனது எதிரிகளை வசப்படுத்தும் நோக்கிலும், அவர்கள் மத்தியில் இவர்களை இராஜதந்திர ரீதியில் அறிமுகப்படுத்தி, அவர்களை இவர்கள் மீது ஆசை கொள்ளச்செய்வதன் மூலம் தாங்கள் இலக்குவைத்த காரியத்தை இலகுவாக நிறைவேற்றிக்கொள்வதனை நாம் பார்க்கமுடியும்.
பொன்னாசை:
இந்த பொன்னாசையானது தங்கம், நகைகளை அதிகளவு சேர்த்து தன்னை அலங்கரித்து அழகு படுத்துகின்ற அழகுணர்வையும் குறிக்கும். இது பொதுவாக பெண்களில் அதிகம் காணப்படுகின்ற ஒரு இயல்பாகும். அதேபோன்று, மனிதன் தன்னுடைய வாழ்வுக்கு சொத்து செல்வங்களை சேர்க்கவேண்டுமென்ற இயல்பான ஆசையைக் கொண்டவனாக இருப்பதனையும் குறிக்கும். இவ்வாறான ஆசைகள்தான் இலட்சியம் என்று வாழும் மனிதர்கள் இன்று உலகில் ஏறாழம்பேர் காணப்படுகின்றனர்.
மனிதனின் உழைப்பும் அவனது நேரமும் அவனது முயற்சியின் பெரும்பாலான பகுதிகளும் அவனது வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை பொன்னாசை எனும் இவ்விடயத்தை அடைவதை நோக்கியே கழிக்கப்படுகின்றன. இக்காலத்தில் மனிதன் இப்பொன்னாசையின் அளவை வைத்தே அடையாளங் கணிக்கப்படும் அளவுக்கு இதன் பெறுமானம் உயர்ந்துள்ளது.
இவ்வாசையின் விளைவாக, இன்று தனது உயிருக்கு உயிரான நண்பனைக்கூட கொலை செய்து, அவனது செல்வங்களை தம்வசப்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதனைக் காண்கின்றோம்.
அதுமாத்திரமன்றி, இன்று உலகில் ஒரு நாட்டில் காணப்படும் வளத்தை, அதாவது அது கனிய வளமாகவோ, எண்ணை வளமாகவோ, கடல்வளமாகவோ இருந்தாலும், அதனை தனக்காக்கி கொள்ளும் பலவாறான போட்டிகள் அரசுகளுக்கிடையில் நடைபெற்றவண்ணமுள்ளன. ஒரு நாட்டின் வளத்தை சுரண்டுகின்ற, அபகரிக்கின்ற, அடாத்தாக அத்துமீறி சுவீகரித்துக்கொள்கின்ற கைங்கரியங்களில் இன்றைய வல்லரசுகள் முனைப்பாக கொள்கை வகுத்து செயற்படுகின்றது.
மனிதனும் பேராசையும்:
மனிதனின் கொள்திறன் (ஊயியஉவைல) என்ற அவனது நிலையைக் கடந்து அவன் கொண்டிருக்கின்ற ஆசையை இது குறிக்கும். இதனை அளவு கடந்த ஆசை நிலை என்று கூட சொல்லமுடியும். இது ஆரோக்கியமான ஆசையல்ல. மனிதன் தனது தகுதிநிலை, அவனிடமுள்ள இயலுமைகள், ஆற்றல்கள் என்பவற்றினை கருத்திற்கொண்டதாக அவனது ஆசையையும் அமைத்துக்கொள்ளல் வேண்டும்.
இதற்கு சிறந்த ஒரு கதையை எடுத்துக்காட்டலாம்: அதாவது ஒருவனிடம் ஒரு வாத்து இருந்தது. அது நாளாந்தம் ஒரு தங்க முட்டை இடுமாம். இதனால் பயன்பெற்றுவந்த மனிதன் நாளாந்தம் கிடைக்கின்ற ஒரு முட்டை போதாது என்பதற்காக வேண்டி, மொத்தமாகக் கிடைக்க வேண்டுமென்ற பேராசையின் விளைவாக அதனது வயிற்றை கிழித்து எடுக்க முனைகின்றான். இதனால் அவ்வாத்து இறந்து விடுகின்றது.
இங்கு ஒரு சினமாப் பாடலின் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றது.
ஆசை! ஆசை! ஆசை! ஆசை!
துhக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை!
துhண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை!
நாட்டைவிட்டு விற்று பேனை வாங்கி,
நீரை விற்று தாகம் வாங்கி, பூவை விற்று வாசம் வாங்கி,
தாயை விற்று பாசம் வாங்கி, பூட்டை விற்று சாவி வாங்கும்
பொல்லாத ஆசை! ஆசை!
இங்கு கவிஞர் மனித ஆசையானது எவ்வாறான தன்மைகளைக் கொண்டதாகவுள்ளது என்பதையும், அதன் பெறுமானங்கள் ஒவ்வொரு மனிதனுடைய ஆசைக்கேற்ப எவ்வாறு வித்தியாசமானதாக உள்ளது என்பதையும் யதார்த்தபூர்வமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார். இங்கு ஒரு மனிதன் இயற்கையின் நியதிகளையும் யதார்த்தங்களையும் உணராமல் கொள்கின்ற பேராசை நிலைகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றார். இதுதான் இன்றைய யதார்த்தம். இதுதான் இன்றைய உலகம்.
எனவே, மனிதன் இவ்வுலகத்திலுள்ள இயற்கை நியதிகளையும் அவனது இயலுமைகளையும் கருத்திற்கொண்டு தனது ஆசையை வைத்துக்கொள்ளத் தவறி, பேராசையினால் அலைந்து திரிவானாயின், ‘பேராசை பெரும் நஸ்டம்’ என்ற கூற்றிற்கிணங்க அவன் இவ்வுலகில் பாரிய கைசேதத்தை எதிர்நோக்கவேண்டிவரும் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை.
மனிதனும் நிராசையும்:
மனிதன் தனது ஆசை விடயத்தில் வைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பானது ஏமாற்றத்தில் முடியுமானால் அதனை நாம் நிராசை எனலாம். அதாவது அவனது ஆசை நிறைவேறாமல் செல்வதனை இது குறிக்கும். இவ்வாறான நிலைமைகள் மனிதவாழ்வில் சஞ்சலங்களையும் துக்கவுணர்வுகளையும் கவலையையும் உருவாக்கி, பல சோக வரலாறுகளுக்கு வழிவகுத்துள்ளன. ஆசை நிராசையான நிலையை அடைவதற்கு பின்வரும் சந்தர்ப்பங்கள் வழியேற்படுத்தலாம்.
- மனிதன் பால் இறைவன்; வகுத்துள்ள விதியைக் கருத்திற்கொள்ளாமை.
- மனிதன் தனது இயலுமைகளுக்கு அப்பால் ஆசை வைத்தல்.
- இயற்கையின் நியதிகளைக் கருத்திற் கொள்ளாமை.
- புறச்சூழலில் ஏற்படும் சவாலான நிலைமைகள்.
- ஆசைகளை அடைவதற்கான முறையான திட்டமிடல்கள் இன்மை. என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான நிராசையான நிலைமைகளை ஒரு மனிதன் அடைகின்ற போது, அதனைப் பற்றிய யதார்த்தமான நிலைமைகளைப் புரிந்து கொன்டு செயற்படாமல், அது ஒரு தோல்வி எனக்கருதி தனது வாழ்வை தொலைக்கின்ற நிலைக்கு மனிதன் மாறுகின்ற அளவுக்கு இந்நிராசை தாக்கம் செலுத்துகின்றது.
ஆசைக்கு கடிவாளம் அவசியம்:
வரையறுக்கப்பட்ட ஆயுட்காலத்தைக் கொண்டு, எல்லையற்ற ஆசைகளுடன் பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொண்டு வாழுகின்ற மனிதனின் ஆசைகள் கடிவாளம் இடப்படல் மிகவும் அவசியமானதாகும்.
மனித ஆசைகள் ஆரோக்கியமான வழியில் முறையாக நெறிப்படுத்தப்படல் வேண்டும். இதற்கான வழிகாட்டலை வழங்கவென சமயங்கள் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளன. மூட நம்பிக்கைகள் களையப்பட்ட, சடவாத சிந்தனைப்போக்குகளற்ற, மனிதனைக் கடவுள் நிலைக்கு உயர்த்தாத சமயப்போதனைகளை மனிதன் பின்பற்றி, அதன்மூலம் தனது உள்ளத்தை பக்குவப்படுத்தி வாழும்போது மாத்திரம்தான் ஆசைகளை நெறிப்படுத்த முடியும்.
மாறாக இவ்வுலகம்தான் முழுமையான இலட்சியம் எனக்கருதி, தனது ஆசைகளைக் கட்டவிழ்த்து விட்டு அலைந்து திரிகின்ற, மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டு வாழுகின்ற மனிதனால் அவனது ஆசைகளை ஒரு போதும் நெறிப்படுத்த முடியாது. மனித ஆசைகள் நெறிபிறழ்ந்தால் அவன் மிருகத்தினுடைய தன்மைகளைப் பெற்று இவ்வுலகில் நிம்மதியையும் அமைதியையும் இழந்தவனாக திரியவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும் என்பதில் ஐய்யமில்லை.
“மூர்க்கமான மிருகம் கடிவாளமின்றி விடப்படுவதை விட மனித ஆசைகள் கடிவாளமின்றி விடப்படுவது ஆபத்தானது. எனவே அடங்காத மிருகத்தையும் விட மனித ஆசைகளுக்கு கடிவாளம் மிகவும் அவசியமாகின்றது” என ஆசைகளுக்கு கடிவாளம் இடப்படுவதன் அவசியம் பற்றி ஹஸனுல் பஸரி என்ற அறிஞர் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
மனித ஆசைகள் கடிவாளமின்றி விடப்பட்டதனால் பாலியல், போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரங்கள் என்பன இன்று உலகத்தை கட்டியாளுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் மனித ஆசைகள் கடிவாளமின்றி விடப்பட்டதன் விளைவாக இன்றைய உலகத்தில் வன்முறைகள், துஸ்பிரயோகங்கள், பாரிய குற்றச் செயல்கள் என்பன மலிந்து உலகம் அழிவின் விளிம்பை நோக்கி செல்கின்ற நிலைமை தோன்றியுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும். இதற்காக மனித ஆசைகள் முறையாக நெறிப்படுத்தப்படல் வேண்டும்.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...
0 Comments