இதனால் பல்கலைக்கழக மாணவர்கள், சிவிலமைப்புக்கள், பொதுமக்கள், அரச தனியார் உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள், படித்த மற்றும் பாமர வர்க்கத்தினர்கள் போன்ற பல தரப்பினர்களாலும் பல விதமான வடிவங்களில் போராட்டங்களும் கலவரங்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் நாளாந்தம் நடைபெற்ற வண்ணமுள்ளன.
அதன்காரணமாக, ஆட்சியிலுள்ளவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தடுமாறுகின்ற நிலைமையும், அச்சத்துடனும் பதகளிப்பு நிலையுடனும் நாளாந்தம் வாழ்கின்ற நிலைமையும், தங்களையே தற்காத்துக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்ப்பட்டுவருகின்றது.
அதுமாத்திரமன்றி, மிகக்குறுகிய காலத்திற்குள் நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்துள்ளார், பல தடவைகள் அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ்வதனையும், நிருவாகத்துறையிலுள்ள அதிகாரிகள் மக்களின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதிலும் தீர்வினை வழங்குவதிலும் பல சவால்களை எதிர்நோக்கி வருவதனையும் காணமுடிகின்றது.
இவ்வாறான நெருக்கடி நிலைமைக்கு காரணங்களாக, பாரிய ஊழல் மோசடிகள், நிருவாக மோசடிகள், கொரோணா தொற்று நோயினால் சுமார் 03 வருடங்கள் நாட்டில் நிலவிய அசாதாரானமான நிலைமையும் நிருவாகத்துறையின் முடக்கமும், அரசாங்கத்தின் கொள்கையினால் உற்பத்தி துறையில் ஏற்பட்ட பாரிய பாதிப்புக்கள், அண்ணியச் செலாவணியின் வீழ்ச்சிநிலை, உல்லாசப் பயணத்துறையில் ஏற்ப்பட்ட வீழ்ச்சி, ஏற்றுமதி வருமானப் பாதிப்புக்கள், அபரிமிதமான அரசியல் தலையீடுகள் மற்றும் தாங்கமுடியாதளவிலான அத்தியவசியப் பொருட்களுக்கான விலையேற்றம் போன்றனவற்றை பொருளாதார நிபுணர்களும் கல்வியியலாளர்களும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பொருளாதாரப் பாதிப்பின் விளைவாக, பெரும்பாலான மக்களுடைய அன்றாட வாழ்க்கை நிலை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக குடும்பக் கட்டமைப்புக்கள் சிதைவடைகின்ற நிலைமையும், தொழிலிழப்பு, வருமானப் பாதிப்பு, பிள்ளைகளின் கல்வி பாதிப்பு, குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு, விலையேற்ற சுமையினால் திண்டாட்டம் போன்ற நிலைமைகள் நாளாந்தம் ஏற்பட்டுவருகின்றன.
மேலும், மக்கள் உளரீதியாக மன நெருக்கீடு மற்றும் அழுத்தத்திற்குள்ளாகின்ற நிலைமையும், கவலையும், பயமும், எதிர்காலம் பற்றிய அச்சநிலைமையும் கேள்விக்குறியும், பாதுகாப்பற்ற உணர்வும், ஒரு வேளை நேரத்தை எப்படி கழிப்பது என்ற ஏக்கமும் பதட்டமும், உள்ளக முரண்பாடுகளும் உளக்குமுரல்களும் கொண்டவர்களாக ஆகியுள்ளனர்.
இவ்வாறான பொருளாதாரப் பாதிப்பின் காரணமாக உளசமூக ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உளவியல் ரீதியாக ஒத்தடம் கொடுப்பதும், அவர்களது நாளாந்த வாழ்க்கைக்கான மனநிலையில் ஓரளவு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சில குறிப்புக்களை வழங்குவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கங்களாகும்.
தற்போதைய நெருக்கடிநிலை தற்காலிகமானது என்பதனை ஏற்றுக்கொள்ளல்:
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பும் பின்னடைவும் தற்காலிகமானது என்பதனை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவானது தொடர்ந்து செல்வதற்கு நாட்டிலுள்ள தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதிக்காது, அதனைப் பார்த்துக்கொண்டிருக்கவுமாட்டாது.
ஏனெனில் ஆட்சியாளர்கள் எப்போதும் நாட்டிலுள்ள மக்களின் தேவைகளையும்; பிரச்சினைகளையும் தீர்த்து மக்களின் மனநிலைகளில் இடம்பிடிப்பதற்கான காரியங்களில் ஈடுபட்டு, தொடர்ந்தும் ஆட்சிப்பணியில் இருப்பதற்கும் அதனை தக்கவைப்பதற்குமே ஆசைப்படுவார்கள்.
அதேபோன்று, நாட்டிலுள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியாளர்களின் குறைகளையும் தவறுகளையும் மக்களுக்கு சுட்டிக்காட்டி, ஆட்சியாளர்களை பின்னடையச் செய்வதற்கும், தற்போதைய பொருளாதார பின்னடைவை சரி செய்வதற்கான கொள்கைகளும் வழிகளும்; வாய்ப்புக்களும் தங்களிடம் இருப்பதாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கும் முயற்சி செய்து ஆட்சியைப் பிடிப்பதற்கும் முயற்சிப்பார்கள்.
இவ்வாறான ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்புக்களின் அரசியல் காய்நகர்த்தல் செயற்பாடுகளால் இப்பொருளதார செருக்கடியானது நாட்டில் தொடர்ந்து நீடிக்காது, சரிசெய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஏற்படும் என்பதனை மக்கள் ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
தற்போதைய நெருக்கடிநிலையை எண்ணிக்கொண்டிருத்தலாகாது:
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பையும் பின்னடைவையும் நாளாந்தம் மக்கள் எண்ணிக்கொண்டிருப்பதாலும், ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பதனாலும், உளநெருக்கீடு, மன அழுத்தம், பதகளிப்பு, அச்சம் பீதி என்பன ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.
இது மக்களினுடைய தன்னம்பிக்கையைக் குறைப்பதுடன், நாளாந்த மனிதனுடைய தொழிற்பாட்டிலும் பின்னடைவினை ஏற்படுத்தும். இவற்றைத் தவிர்ந்து, இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கான, அதற்கு எதிர்நீச்சல் போடுவதற்கான மனத்தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் நேர் மனப்பாங்கினையும் வளர்த்துக்கொள்ளல் வேண்டும்.
திட்டமிடல்:
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்கும் விதமாக குடும்ப பொருளாதாரத்தை திட்டமிடல் வேண்டும். அந்தவகையில், பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தல் வேண்டும்.- வருமானத்தை அதிகரித்தல்: குடும்பத்தின் வருமானம், அதற்கான வழிகள், செலவுகள், சேமிப்பு ஆகிய 03 அம்சங்களிலும் திட்டமிட்டு குடும்பத்தை நிர்வகித்தல் வேண்டும். குறிப்பாக, இக்காலத்தில் கணவனின் நாளாந்த உழைப்பு போதாதெனில், வீட்டிலுள்ள மனைவி மற்றும் வயது வந்த பிள்ளைகள் சேர்ந்து சுயதொழில் முயற்சி ஒன்றினை உருவாக்கி மேலதிக வருமானத்தை தேடிக்கொள்ளல்.
உதாரணமாக, வீட்டில் சிறுகைத்தொழில், வீட்டுத்தோட்டம், கோழி வளர்ப்பு போன்ற தொழில் முயற்சிகளை மேற்க்கொள்ளல். - செலவுகளை மட்டுப்படுத்தல்: வரவுக்கேற்ப்ப செலவுகளை திட்டமிடுவதிலும், வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளை புதிதாக உருவாக்குவதிலும், செலவு விடயத்தில், சிக்கனத்தை கடைப்பிடிப்பதிலும், செலவின் போது ஆசையை விட தேவைக்கு தற்காலத்தில் முன்னுரிமை அளிப்பதிலும் குடும்ப அங்கத்தவர்கள் உறுதியான நடைமுறையை உருவாக்கி பின்பற்றப் பழகிக்கொள்ளல் வேண்டும்.
உதாரணமாக:
சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் - தற்போது சில பொருட்களுக்கு விலையேற்றமுள்ளது. இங்கு சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில், சிலவற்றை தவிர்த்து, சிலதுக்கு பதிலீடுகளை, மாற்றீடுகளை மேற்க்கொண்டு செயற்படல்.
உதாரணமாக, பால்மாவின் விலையேற்றம் கருதி பால்மாவை இடைநிறுத்தி, அதற்குப் பதிலான செலவு குறைந்த ஆரோக்கியமான குடிபானங்களை அருந்தப் பழகிக்கொள்ளல். சிலவற்றைக் குறைத்துப் பாவித்தல் - எரிவாய்விற்கு விலையேற்றம். இதில் எல்லா சமையல்களுக்கும் எரிவாய்வைப் பயன்படுத்தாமல், முக்கியமானவற்றிற்கு மாத்திரம் அதனைப் பயன்படுத்தல், பதிலாக ஏனைய சமையல்களுக்கு - விறகு அல்லது உமி அடுப்புக்களை பயன்படுத்துதல். சிலவற்றை முற்றாக நிறுத்திவைத்தல் - குறிப்பாக கட்டிட வேலைகள்.
தேவைக்கு முன்னுரிமையளித்தல்: உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அவசிமானவற்றை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமையளித்தல்.
ஆசைக்கு முன்னுரிமையளிக்காதிருத்தல்: வீட்டிற்குள் அழகுபடுத்தும் நோக்கம் கருதி தளபாடங்களைக் கொள்வனவு செய்வதை மற்றும் மேலதிக ஆடைக்கொள்வனவு போன்ற காரியங்களை இக்காலத்தில் தவிர்ந்திருத்தல். - சேமிப்பு: குடும்பத்திற்கு கிடைக்கும் வருமானத்திலிருந்து செலவு போக, மிகுதியை சேமிக்கும் பழக்கம் இன்று அருகிச்செல்கின்ற பழக்கமாகக் காணப்பட்டுவருகின்றது. இதனால் சில நெருக்கடிகள் குடும்பத்தில் தோன்றுகின்றன. அவ்வாறின்றி, சிறுபிள்ளைகள் தொடக்கம் ஏனையவர்கள் வரையிலும் இச்சேமிப்புப் பழக்கத்தை கடைப்பிடிக்கப் பழகிக்கொள்ளல் வேண்டும்.
மூதாதையர்கள் காலத்தில் நாளாந்தம் சமையலின் போது, ஒரு பிடியரிசியை, ஒரு மிளகாயை, இரு வெங்காயத்தை, ஒரு முட்டையை வேறாக எடுத்து சேர்த்துவைத்து சேமிக்கும் பழக்கம் இருந்ததாகவும்;. அவைகளை ஒரு நாள் சமயலில் தட்டுப்பாடு நிலவும் போது அவர்கள் பயன்படுத்திதாகவும் அறிகின்றோம். இவ்வாறான சிறந்த பழக்கங்களை நாமும் இன்றைய நிலையில் கடைப்பிடித்தல்.
மேலும், இந்த விடயத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு அல்லது மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியவசியப் பொருட்களை சேமிப்பதற்கான இடவொதுக்கீடு ஒன்றினை வீட்டிலேற்ப்படுத்தி, மிகவும் பொருத்தமான முறையில் பாதுகாப்பான அடிப்படையில் அத்தியவசியப் பொருட்களை சேமிப்பதற்கான பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளல்.
உதாரணமாக, அரிசி, சீனி, கோதுமை மா, எண்ணெய், பருப்பு போன்றவற்றை Nசிக்கலாம். - புதிய முதலீடுகளில் ஈடுபடல்: மேலும், சேமித்துவைத்த பணங்களை ஒன்றுசேர்த்து, தற்காலத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புக்களில் முதலீடு செய்தல் அல்லது புதிய தொழில் முயற்சி ஒன்றினை மேற்க்கொள்ளல். முதலீடுகள் செய்யும்போது, நம்பிக்கையான, சட்டரீதியிலான, பேண்தகுநிலைமையுடைய, வெளிப்படைத்தன்மை கொண்ட நிறுவனங்களில் அல்லது தனியார் தொழில் முயற்சிகளில் இணைந்து முதலீடு செய்தல். அவ்வாறில்லையெனில், பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.
இறைவனின் நிர்ணயத்தில் நம்பிக்கை வைத்தல்:
இவ்விடயத்தில் இவ்வுலகையும் உலகிலுள்ள உயிரினங்களையும் படைத்துள்ள இறைவன், இவ்வுலகை நிருவகிப்பதற்கும், அதிலுள்ள உயிரினங்களுக்கு உணவளிப்பதிலும் ஆற்றலும் சக்தியும் பெற்றவன். ஒரு உயிரி இவ்வுலகில் பிறந்தது தொடக்கம் இறக்கும் வரையில், இறைவனால் அதற்கான உணவானது இவ்வுலகில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது;.
அந்தவகையில், மனிதன் இந்த இறைவனது நிர்ணயத்தில் நம்பிக்கை வைத்தலுடன் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைத்துவிட்டு, அதற்கான முயற்சிகளில் இறங்காமலிருப்பது, இறைவனின் நிர்ணயத்தை பிழையாகப் புரிந்துள்ளதன் விளைவாகும். மாறாக மனிதன் தினமும் அந்த உணவை தேடிப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் அவனது சக்திக்குட்பட்ட வகையில் ஈடுபாடுகாட்டுதல் வேண்டும்.
உதாரணமாக, இவ்விடயத்தில் அதிகாலையில் உணவு தேடி பறந்து சென்று, மாலை வேளையில் தனது வயிற்றினை நிரப்பிக்கொண்டு கூட்டினை வந்தடையும் ஐந்தறிவு பறவைகளைப் பார்த்து ஆறறிவு கொண்ட மனிதன் படிப்பினை பெறல் வேண்டும். அப்பறவைகள் தங்களைப் படைத்தது இறைவன்தான். அவன்தான் எங்களுக்கு உணவளிக்க கடமைப்பட்டுள்ளவன் என்று எந்த முயற்சியுமின்றி வாழாவெட்டியாக தங்களது கூடுகளுக்குள் முற்றாக தஞ்சமடையவில்லை.
தனது நிலையை விட குறைந்த படித்தரத்திலிருப்பவர்களுக்கு உதவுதல்:
இவ்வுலகில் எல்லோரும் எல்லா வளங்களையும் வசதிவாய்ப்புக்களையும் பெற்று வாழவில்லை. பல படித்தரங்களில் மனிதனை இறைவன் படைத்திருக்கின்றான். இவ்வாறு படைத்ததன் நோக்கம் பாரபட்சம், ஏற்றத்தாழ்வு, அந்தஸ்த்து பார்ப்பதற்காக அல்ல.
மாறாக, ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காகவும் எல்லோரும் ஒருவரிலொருவர் தங்கிவாழ்வதற்காகவுமாகும் ஒப்புரவாயிருப்பதற்குமாகும் என்பதனை மனிதன் மறந்து வாழக்கூடாது.
அந்தவகையில், இந்த நெருக்கடியான காலத்தில் பொருளாதார விடயத்தில் மனிதர்களுக்கிடையில் ஒப்புரவுடன் நடந்துகொள்ளல் வேண்டும். குறிப்பாக, தன்னை அண்டி வாழ்கின்ற தன்னைவிட குறைந்த வாழ்க்கைத்தரநிலையிலுள்ள குடும்ப அங்கத்தவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஒத்துழைப்புக்களை உதவிகளை வழங்குவதற்கு முனைதல் வேண்டும்.
இவ்வாறான தன்மை நம்மில் ஏற்படுமாக இருந்தால், நிச்சயமாக நம்மில் மனத்திருப்தி நிலையும் அதனால் மனமகிழ்ச்சியும் ஏற்படும். அதன்காரணமாக இன்னும் நம்மில் நாளாந்தம் உத்வேகம் ஏற்படும்.
பொதுநல சிந்தனையுடன் செயற்படல்:
மனிதர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு நெருக்கடியான நிலைக்கு உள்ளாகும் போது, தான், தனது குடும்பம், தனது பாதுகாப்பு, தனது உடமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும், எல்லா சந்தர்ப்பத்திலும் முன்னுரிமைப்படுத்தப்படல் வேண்டும் என்ற மனப்பாங்குடனேயே செயற்படுவர். ஏனையவர்களைப் பற்றி அக்கரை செலுத்துகின்ற, அவர்களுக்கு உதவுகின்ற, அவர்களும் நம்மைப் போன்ற உயிரிதான் என்ற மனநிலையுடன் கருமமாற்றுகின்ற நிலைமை அரிதாகக் காணப்படும்.
இந்த சுயநலம் சார் மனநிலையிலிருந்து தன்னையும் தான் சார்ந்தவர்களையும் விடுவித்துக் கொண்டு, இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் பொதுநல மனப்பாங்குடன் செயற்படுவதற்கான தன்மையை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில், ஒரு மனிதனில் காணப்படும் சுயநலத் தன்மை குறைந்து பொதுநல மனப்பாங்கு வளர்ந்து, இவ்வாறான நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்கான இன்னும் அதிகமாக உழைப்பதற்கு உந்தப்படுவர். அதனால் அவரும், அவரது குடும்பமும், அவர்சார்ந்துள்ள சமூகமும், நாடும் வளம் பெற துரித வழிபிறக்கும்.
எனவே, தற்போது நமது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை இல்லாமல் செய்வதற்கான முதலாவது வேலைத்திட்டமானது, நாட்டிலுள்ள மக்களின் மனநிலைகளில் மாற்றங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும். எடுத்துக்காட்டாக, இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஜப்பானின் துரிதகதியிலான இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணம், அந்நாட்டு அரசாங்கமும் மக்களும் எடுத்துக்கொண்ட நாட்டுக்கான கடின உழைப்பும், நேர முகாமைத்துவப் பயன்பாடும்;, உச்ச வளப்பயன்பாடும், உற்பத்ததிறன் முகாமைத்துவமும் மற்றும் அவைகளினடிப்படையில் சதா செயற்படுவதற்கான மனநிலை மாற்றமுமே ஆகும் என்றால் அது மிகையாகாது.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...
0 Comments